செஸ் ஒலிம்பியாட் ஜுரம் ரகசியாவையும் விட்டுவைக்கவில்லை. செஸ் போர்டில் உள்ளதுபோல் கருப்பு வெள்ளை கட்டங்களைக் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“செஸ் ஜுரம் உன்னையும் பற்றிக்கொண்டு விட்டதோ?” என்றபடி வரவேற்றோம்.
“என்னை மட்டுமல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்று எல்லோரையும் இப்போது செஸ் ஜுரம் ஆட்டிவைக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நல்லபடி நடத்தி முடித்து நற்பெயரை வாங்கவேண்டுமே என்ற கவலை முதல்வருக்கு. விழாவை துவக்கி வைக்க வரும் பிரதமரை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் செய்திருக்கிறார். ஆனால் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதை ரசிக்கவில்லை. அதிமுக காலத்தில் ‘கோபேக் மோடி’ என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். இப்போது திமுக ஆட்சிக்காலத்தில் சர்வ மரியாதையோடு பிரதமர் வரவேற்கப்படுவது சரியா என்று கேட்கிறார்கள். பாஜகவின் பக்கம் திமுக சாய்கிறதோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருக்கிறது”
‘நியாயமான கவலைதான். எடப்பாடினு ஏதோ சொன்னியே”
“ஆமாம். போட்டியை துவக்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து, அவரை தங்கள் பக்கம் பக்கம் எப்படியாவது இழுக்க வேண்டுமே என்ற கவலை ஓபிஎஸ்ஸுக்கும், இபிஎஸ்ஸுக்கும் உள்ளது”
“பிரதமரையும், அமித் ஷாவையும் சந்திப்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி, தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பாதியில் திரும்பிவிட்டாரே?”
“எடப்பாடிக்கு ஆதரவாக அமித்ஷா, மோடி இருவரிடமும் தூது போவது ஓய்வு பெற்ற நீதிபதியும் , ஒடிசா மாநிலத்தின் பிரபல தொழிலதிபர் ஒருவரும். இந்த இரண்டு பேர்தான் எடப்பாடியின் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த முறையும் இவர்கள் சிக்னல் கொடுத்த பிறகுதான் 4 நாள் பயணமாக எடப்பாடி டெல்லி போனார். பிரதமர், அமித் ஷா ஆகிய இருவரையும் எடப்பாடி சந்திப்பதாகவும் இருந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் அமளி, எதிர்க்கட்சிகள் பிரச்சினை, துணை ஜனாதிபதி தேர்தல் என்று பிரதமர் அமித் ஷா இருவரின் நிகழ்ச்சி நிரல் பிஸியானதால்தான் அவர்களை எடப்பாடியால் சந்திக்க முடியவில்லை என்று அவரது தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.”
“உன் டெல்லி சோர்ஸ் என்ன சொல்கிறது?”
“இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதுபோல் கோடநாடு வழக்கிலும் இபிஎஸ் மீதான பிடி இறுகி வருகிறது. இந்த நேரத்தில் அவரை சந்திப்பது நல்லதல்ல என்று பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் அவரது ஆலோசகர்கள் ஆலோசனை கூறியதாகவும் அதனால்தான் இபிஎஸ்ஸை அவர்கள் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.”
“ஓபிஎஸ் தரப்பு இதுபற்றி என்ன சொல்கிறது?”
“அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு மலரும் நினைவுகளாக சில குறிப்புகளை ஓபிஎஸ் தரப்பில் இருந்து முக்கிய தலைவர் மூலம் அனுப்பி இருந்தார்களாம். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான் திமுகவை சமாளிக்க முடியும் என்று அமித் ஷா சொன்ன யோசனையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், தான் அரவணைத்து செல்ல முயன்றதாகவும் எடப்பாடிதான் பிடிவாதமாக அதை மறுத்ததாகவும் அந்த தலைவர் மூலம் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஓபிஎஸ். பிரதமர் மற்றும் அமித் ஷாவை எடப்பாடி சந்திக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். ஓபிஎஸ் கருத்தை நியாயமான கருத்தாக பாஜக பார்க்கிறது”
“அரசியல்ல நியாயம் தர்மம்லாம் பார்ப்பாங்களா? ஜெயிக்கிறது மட்டும்தானே குறி”
“உண்மைதான். எடப்பாடி அணியுடன் சரிக்கு சரியாக மோதவும் தயாராகிவிட்டார் ஓபிஎஸ். வைத்திலிங்கத்தை துணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தது, எடப்பாடியால் நீக்கப்பட்டவர்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கியது. வங்கிக் கணக்கை முடக்க ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியது என்று சளைக்காமல் போரிட்டு வருகிறார் ஓபிஎஸ். விரைவில் பொதுக்குழுவைக் கூட்டவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். மேலும் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நமக்கு ஆதரவாக செயல்படும் ஆடிட்டர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாக உத்தரவாதம் தந்துள்ளார்’ என்று சொல்லியிருக்கிறாராம். இப்போதைக்கு ஓபிஎஸ் எடுத்துள்ள நடவடிக்கைகள் சிலவற்றுக்கும் ஆடிட்டரின் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறது.”
“எடப்பாடிக்கு கட்சிக்காரர்கள் புதிதாக பட்டப்பெயர் சூட்டியிருப்பதாக செய்தி வருகிறதே?”
“பொதுக்குழுவில் ஓஎஸ் மணியன் எடப்பாடியை பாராட்டி பேசும்போது ‘புரட்சித் தலைமகன்’ என்று குறிப்பிட்டுள்ளார். எடப்பாடிக்கு இந்த டைட்டில் மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே இனிமேல் எடப்பாடியின் பெயருக்கு முன் ‘புரட்சித் தலைமகன்’ என்ற அடைமொழியை சேர்க்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். விளம்பரங்களிலும் இனி அந்த அடைமொழியை பயன்படுத்த கட்சிக்காரர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.”
“நல்ல அடைமொழிதான்.”
“ஆனால் அதிமுகவுக்குள் நடக்கும் சண்டையை பாஜக ரசிக்கவில்லை. 2024-ம் ஆண்டில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஒற்றுமையாக இருக்க முடியுமா என்று அமித் ஷா தரப்பிலிருந்து வந்த தூதர் இரு அதிமுக தலைவர்களிடமும் கேட்டுள்ளார். இதற்கு ஓபிஎஸ் சம்மதித்தாலும், எடப்பாடியார் பிடி கொடுக்காமல் இருக்கிறார். ஆனால் அமித் ஷா தரப்பில் இதற்கு இன்னமும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.”
“டேவிட்சன் தேவாசிர்வாதத்தை அண்ணாமலை விடாமல் துரத்திக்கொண்டு இருக்கிறாரே?”
“இதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். ஐபிஎஸ் நண்பர்களுக்கென்று இருக்கிற ஒரு வாட்ஸ்அப் குழுவில் அண்ணாமலையை பற்றி தவறாக குறிப்பிட்டாராம். இதை அண்ணாமலைக்கு வேண்டிய ஒரு ஹரியாணா ஐபிஎஸ் அதிகாரி பார்வர்ட் செய்துவிட்டார். இதுவும் கோபத்துக்கு காரணம் என்கிறார்கள். தன் தொலைபேசியை டேவிட்சன் ஓட்டு கேட்பதாக அண்ணாமலை நினைக்கிறாராம். இதுவும் அவரது கோபத்துக்கு மற்றொரு காரணம் என்கிறார்கள்.”
“ஓஹோ.”
“பாஸ்போர்ட் மோசடி விவகாரத்தில் டேவிட்சன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அண்ணாமலை ஆளுநரிடம் மனு தந்தார். அதன் ஒரு நகலை தாமரை கட்சி நிர்வாகிகள் உள்துறை செயலாளரை சந்தித்து வழங்கினார்கள். ஆளுநரிடம் அண்ணாமலை தந்த புகார் மனு இன்னும் தமிழக அரசுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால் உள்துறைச் செயலாளருக்கு வந்த மனு மீது என்ன நடவடிக்கை என்பதை மறுதினமே அரசு அறிக்கையாக பத்திரிகைகளுக்கு அனுப்பியது. அதில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்ட தமிழக அரசு, 14 மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தபால் துறை ஊழியர்கள் உட்பட 41 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய 2021 டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் அனுமதி கடிதம் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் தாமதத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என்று மறைமுகமாக தெரிவித்து இருக்கிறது”
“திமுக செய்திகள் ஏதாவது இருக்கிறதா?”
“திமுகவின் ஐடி விங் செயல்பாடு முதல்வருக்கு திருப்தியாக இல்லை. ‘பாரதிய ஜனதாவின் ஐடி விங் சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. அண்ணாமலை ஆர்மி, அமித் ஷா ஆர்மி என்றெல்லாம் தனித்தனியாக வலைதளங்களை ஏற்படுத்தி செயல்படுத்துகிறார்கள். ஆனால் நமது ஐடி விங் அதுபோல் சுறுசுறுப்பாக இல்லை’ என்று டிஆர்பி ராஜாவை அழைத்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் முதல்வர்.”
“வருங்காலங்களில் பிரச்சாரத்துக்கு முக்கிய ஆயுதமாக இருக்கப்போவது ஐடி விங்தானே?”
“கட்சியில் மூத்த அமைச்சர்களான எ.வ.வேலுவுக்கும், செந்தில்பாலாஜிக்கும் இடையில் புகைச்சல் என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலின்போது கொங்கு மண்டல விவகாரத்தில் எ.வ.வேலு தலையிட்டதை செந்தில்பாலாஜி ரசிக்கவில்லை. அப்போதில் இருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதாக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கிறார்கள்.”
“சென்னையில் நடந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் நிம்மதியைப் பற்றி பேசியிருக்கிறாரே?”
“மகள்கள் விஷயம் அவரது மனதை வருத்தி வருகிறதாம். இதேநேரத்தில் சிவாஜி குடும்பத்தில் சொத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தர்க்கமும் அவரை வருத்தமடைய வைத்துள்ளது. இது தொடர்பாக சிவாஜியின் மகள்களை தொடர்புகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார், ‘வழக்கு விஷயங்கள் அதிகம் வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பிரச்சினையை தீர்க்க நான் வேண்டுமானாலும் உதவிகளைச் செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.”
“சிவாஜி குடும்பத்துக்கு நல்லது நடந்தால் சரிதான். ஏற்கனவே சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து சிவாஜி குடும்பத்துக்கு உதவினார் ரஜினி. அதுபோல இந்த ஆலோசனையும் வெற்றியடையட்டும்”