உக்ரைனில் மேலும் 50 இந்தியர்கள் இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி, “உக்ரைனில் தற்போது மேலும் 40 – 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது” என்றார்.
ஏப்ரல் 6-ல் மீண்டும் சட்டசபை கூட்டம்
ஏப்ரல் 6 தமிழக சட்டசபை மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “தமிழக சட்டசபை மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினமே மானிய கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும்.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? எந்தெந்த துறைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எந்தெந்த நாட்களில் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும். இதற்காக அலுவல் ஆய்வு குழு 30-ந்தேதி காலை 11 மணிக்கு எனது தலைமையில் கூடுகிறது” என்றார்.
தற்காலிகமாக தப்பியது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும், ஆளுங்கட்சி எம்.பி. ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வரும் திங்கள்கிழமை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக இம்ரான் கான் அரசு தப்பியுள்ளது.
நடிகை மீரா மிதுன் கைது
பட்டியலினத்தவர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் ஜாமீனில் வெளியே சென்ற பின்பு முறையாக ஆஜராகவில்லை.
இது தொடர்கதையான நிலையில் முதன்மை அமர்வு நீதிபதி, இன்று ஆஜர் ஆகாத மீரா மிதுன் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதனடிப்படையில் நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.