ரஜினிகாந்த்தை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துப் பேசினார்.
ரஜினிகாந்த்தை சந்தித்தபோது எடுத்த படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், “இந்திய சினிமாவின் ‛டான்’ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். 60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்திற்கும் நன்றி தலைவா” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4000 – பிரதமர் மோடி வழங்கினார்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 அடிப்படை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக கல்விக் கடன் வாங்க விரும்பினால், அவர்களுக்கு ‘பிம்.எம். கேர்ஸ்’ உதவி செய்யும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின்போது கொரோனா சூழலை இந்தியா கையாண்ட விதம் குறித்து பேசிய அவர், “கொரோனாவின்போது இந்தியா பிரச்சினையாக இருக்கவில்லை. தீர்வை கொடுக்கும் நாடாக இருந்தது. நாம் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வந்தோம். தடுப்பூசிகளை உலகில் உள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது’ என கூறினார்.
அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகம், தர்மர் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
காங்கிரஸின் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது – ப.சிதம்பரம்
“காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இங்கு குழுமியுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் இந்நாள் தலைவர்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
பாஜக என்னைப் பார்த்து பயப்பட நான் என்ன சிங்கம் புலியா? ஆனால், நான் காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக உரத்த குரலிலே எழுதி, சொல்லி வருபவன், எனவே. என்னைப் பார்த்து பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. என்னைப் பார்த்து பயப்படுவதாக நானே பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்” என்றார்
3-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூன் 3-ம் தேதி வரை தடை விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.