No menu items!

கொள்ளை அடித்த ராஜபக்சே!  –  இலங்கை கவிஞர் தீபச்செல்வன்

கொள்ளை அடித்த ராஜபக்சே!  –  இலங்கை கவிஞர் தீபச்செல்வன்

இலங்கையில் ராஜபக்சே  சகோதரர்களுக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் சனிக்கிழமை தொடங்கிய போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இரவு பகல் பாராமல்  கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் சமூக ஆர்வலர்களால் வழங்கப்படுகின்றன. பழங்கள், குடிநீர் விநியோகிப்பதற்கான கூடாரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ‘கோட்டா கோ ஹோம்’ (gota go home) கோஷம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

தமிழ்நாட்டில் 2017இல் நடைபெற்ற சென்னை ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை அப்படி நகல் செய்தது போலிருக்கிறது, கொழும்பு காலிமுகத் திடல் ராஜபக்சே சகோதரர்கள் எதிர்ப்பு போராட்டம். கடந்த 9-ம் தேதி (சனிக்கிழமை) அன்று கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான காலிமுகத் திடல் போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலிமுகத் திடல் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி தொடங்கி ஒன்றிரண்டு பேர் என குழு குழுவாக கூட ஆரம்பித்தனர். இது மதியம் பத்தாயிரமாக அதிகரித்தது. அன்று இரவு அது இன்னும் அதிகரித்தது.

அன்று இரவும் போராட்டம் தொடர்ந்தது. அடுத்தடுத்த நாட்களில் பெய்த மழைக்கு மத்தியிலும் காலிமுகத் திடலில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். இன்று ஆறாவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.

கொழும்பில் வாழும் தமிழர், சிங்களர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துப் பிரிவினரும், பாமரர் முதல் ஐடி துறையினர் வரை அனைத்து தரப்பினரும் வேறுபாடு இல்லாமல் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். போராட்டக்களத்திலேயே இஸ்லாமியர் நோன்பு திறக்க, அதற்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இடத்தை ஒழுங்கு செய்து கொடுக்கிறார்கள். திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்தில் ஒரு புதுமண தம்பதியும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இப்படி இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டத்தை துவக்கியிருக்கிறார்கள்.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கை தமிழ் கவிஞர் தீபச் செல்வனுடன் பேசினோம்.

“இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு எல்லா தொழில்களையும் பாதித்துள்ளது. நேற்று ஒருவர் எரிபொருள் வாங்க வரிசையில் இரண்டு நாட்களாக காத்திருந்த நிலையில் மரணமடைந்தார். இப்படி உயிரிழக்கும் ஐந்தாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நாளாந்தம் அமல்படுத்தப்பட்டு வருகின்ற மின்வெட்டு தொழில்துறையை நேரடியாகவே பாதித்துள்ளது.

இலங்கை முன்னாள் பிரதமரும்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ‘மே மாதத்துடன்  இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்?  ஜூன் மாதத்தில்  தனியார் துறைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும்.  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத அளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

விரைவில் சோமாலியா போல் இலங்கை ஆகிவிடும் என்றே இங்குள்ள பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். இதனால், சிங்களவர்களும் நாட்டில் இருந்து புலம்பெயரத் தொடங்கியுள்ளார்கள்.

இலங்கையின் இன்றைய இந்த நிலைக்கு அரசின் தவறான கொள்கை முடிவுகள் மட்டுமல்ல ராஜபக்சே குடும்பத்தினரின் கொள்ளையும்தான் காரணம். அவர்கள் கொள்ளையிட்ட நிதியை திரும்ப கொடுத்தால்கூட இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டுவிடும்.

எனவேதான், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக தீவிரமான அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் இலக்கில் கொழும்பில் இளைஞர்களின் போராட்டம்  முன்னெடுக்கப்படுகின்றது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர். காலிமுகத்திடலில் குழு குழுவாக ஆட்டம் பாட்டம் கோஷம் எனப் போராட்டத்தை தொடர்கிறார்கள்.  அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களை பொறுத்தவரைக்கும் கொழும்பில் வாழும் தமிழர்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். வடக்குப் பகுதி தமிழர்களுக்கும் பொருளாதார பாதிப்புகள் உள்ளதுதான். இரண்டு தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் டீசல் வாங்க வரிசையில் காத்திருந்ததால் சாப்பிடாமல் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். ஆனாலும்,

பொருளாதார நெருக்கடியைவிட சுதந்திரம் முக்கியம் என்ற நிலையிலேயே இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

மேலும், இந்த போராட்டங்களால் ராஜபக்சே சகோதரர்களுக்கு பாதிப்பு இருக்காது என்பதுதான் தமிழர்கள் கணிப்பும்கூட. ஜனநாயக வழி போராட்டங்களுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதுமே செவி சாய்த்ததில்லை. அதனால்தானே, தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டம்கூட ஆயுதப் போராட்டமாக மாறியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை சிங்களவர்கள் உணர இதுவொரு வாய்ப்பாக அமையும்” என்றார் தீபச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...