நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரி தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது. எனவே, பீஸ்ட் படத்திற்கு தடைவிதிப்பதோடு மட்டுமல்லாமல் வெறுப்பு அரசியலைத் தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மோடி, அண்ணாமலை படங்களில் கருப்பு பூச்சு – கரூரில் பரபரப்பு
கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச் சுவரில் ஒரே நேரத்தில் திமுக, பாஜக இரு கட்சிகளும் சுவர் விளம்பரம் எழுத வந்ததால் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை பகுதியில் பிரதமர் மோடி பிறந்தநாள் அன்று வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படங்களை மர்மநபர் கருப்பு பெயிண்டை கொண்டு அளிப்பதும், யார் வந்து தடுப்பார்கள் எனப் பார்ப்போம் என இரண்டு நபர்கள் தடியுடன் சுற்றி வருவதுமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா இன்னமும் மிகப்பெரிய தொற்றாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு கவலை
உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோசு அதானோம் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை உலக நாடுகள் கைவிட்டு விட்டது வருத்தமளிக்கிறது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தொற்று பரிசோதனையை அதிகரிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெருந்தொற்றின் துவக்க காலத்தை தான் தாண்டியிருக்கிறோம். வைரஸ் இன்னமும் மிகப்பெரிய தொற்றாக உள்ளது. கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் 99.2% வகை ஓமிக்ரான் வகை தொற்றாகும். டெல்டா பாதிப்புகளின் எண்ணிக்கை 0.1%க்கும் குறைவாகவே உள்ளது. எனவே, கொரோனா தொற்றுக்கு எதிராக தீவிர முனைப்பு காட்ட வேண்டும். அலட்சியம் காட்டக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
கொடநாடு வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுககுட்டியிடம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளியைக் கொலை செய்து, ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றது. இது தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் இன்று கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் லீவு: டிக்கெட் கொள்ளையில் இறங்கிய ஆம்னி பஸ்கள் – அபராதம் விதித்த அரசு
சித்திரை திருநாள், புனித வெள்ளி, சனி, ஞாயிறு எனத் தொடர் விடுமுறை காரணமாகக் கடந்த 13, 14 என இரண்டு நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகளிடம் இருந்து புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறப்பு குழுக்களாக ஆய்வு செய்ததில் கூடுதல் கட்டணம் வசூலித்தது, சில பேருந்துகள் உரிய ஆவணம் இல்லாமல் இயக்கியது, போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாத நிலை போன்றவை ஆய்வில் தெரிய வந்தது. இதில் விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் கூடுதலாக வசூலித்த 22,200 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.