No menu items!

ஓராண்டு முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: முதலமைச்சர் அறிவிப்பு

ஓராண்டு முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  பேசினார். அப்போது, ‘சமூக சீர்த்திருத்தத்தின் அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள் இது. இந்தியாவின் சமூக நீதி வரலாற்றின் வைக்கம் போராட்டம் முக்கிய இடம் பெற்றது. பெரியார் நடத்திய முக்கிய போராட்டங்களில் ஒன்று வைக்கம் போராட்டம். இந்த போராட்டம் ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்றது. 1924 மார்ச் 30ல் தொடங்கி 1925ல் இது முடிவுக்கு வந்தது. வைக்கம் வீரர் என்று தமிழ்த்தென்றல் திருவிக பாராட்டினார். இன்றுவரை வைக்கம் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பெரியாரை போற்றும் விதமாக 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன். வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிகழ்ச்சிகளை தமிழக அரசு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழா 2023 மார்ச் 30 தொடங்கி ஓராண்டு வரை நடைபெறும். போராட்டத்தின் நோக்கத்தையும், வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் அறியும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் 1 அன்று கேரள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சரோடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறேன்” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: அமித்ஷா அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தை அவமானப்படுத்தி உள்ளார். அதற்காகவே அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்று நமது நாட்டின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருகிறார். அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமானால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். அதைவிடுத்து அடம்பிடித்து கொண்டிருந்தால் எந்த பலனும் இல்லை.

நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது” என்று பேசினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானர். அஜித் தந்தையில் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர். இன்று நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்ட எடப்பாடி பழனிசாமி தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸுக்கு 86 வயதாகிறது. போப் பிரான்சிஸ் முழங்கால் வலியால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. எனினும், சுறுசுறுப்புடன் தேவாலய பணிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வந்த போப் பிரான்சிஸ், சில தினங்களாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும், கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் விரைந்து நலம்பெற மக்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பூமியை விட 20 மடங்கு பெரிய அளவில் சூரியனில் ஓட்டை: புவி காந்த புயல்கள் ஏற்படும் அபாயம்

சூரியனில், பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை கடந்த 23-ந்தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது. சூரியனின் தென் துருவ பகுதி அருகே கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனல் ஓட்டையில் இருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பூமியின் காந்த புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க விஞ்ஞானிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...