இலங்கையில் மாமலைகளையும் பெருங்காடுகளையும் கொண்ட பகுதி மாத்தளை.
நான் அந்த மலையை நோக்கிப் போனபோது இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற நினைப்பே எனக்குள் முதலில் தோன்றியது. மதியத்துக்குப் பிறகு மழை வந்துவிடும், அதற்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. மழை வந்துவிட்டால் மலைக்குப் போவது கடினமாகிவிடும். ஆனால், நான் அந்த நகரத்துக்குள் நுழைவதற்குள்ளேயே மழை தொடங்கிவிட்டிருந்தது.
அந்த மலையில் வசிப்பவர்கள் அநேகமாய் நடந்தே நகரத்துக்குக் கீழிறங்கி வருவார்கள். ஒன்றிரண்டு ஓட்டோக்காரர் மட்டும் அந்த உயரத்துக்கு மேலே ஏறி வரச் சம்மதிப்பார்கள். ஒரு ஓட்டோ என்னை ஏற்றிக்கொண்டு மலைக்கு மழையிடையே போனது. ஓட்டோ ஏறமுடியாத இடங்களும் உண்டு. அப்போது இறங்கி நடந்தால்தான் ஓட்டோ ஒருமாதிரி அந்த செங்குத்துப் பாதையில் மேலே ஏறிப் போகும்.
இடையில் இந்த ஒற்றையடிப்பாதையில் கொஞ்சம் சறுக்கினாலே ஓட்டோ அதலபாதாளத்தில் விழுந்துவிடும் என்று அந்த ஓட்டோக்காரர் பயங்காட்டினார். எட்டிப் பார்த்தபோது எனக்கு பசுமைதான், காதலிகளின் முகங்களைப் போல அழகாய்த் தெரிந்தது. அதல பாதாளம், அவர்கள் காதலின் நிமித்தம் தந்த வலிகளைப் போல மறைந்து இருக்கலாம். அதைப் பற்றிய கவலை இப்போது எனக்கேன் என நிம்மதிப் பெருமூச்சை விட்டேன்.
வழியெங்கும் மரங்களின் கிளைகள் பரவி போகும் பாதையைக் குறுக்கிடச் செய்தன. தலையைப் பத்திரமாக உள்ளே வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டேன். எப்போதும் பாதை இப்படித்தானா எனக் கேட்டேன். இல்லை, இப்போது மழையின் நிமித்தம் கிளைகளெல்லாம் வளைந்து இப்படி வரவேற்புக் கோபுரங்கள் ஆகிவிட்டன என்றார் அந்தச் சாரதி.
மழை விடாது பொழிந்து கொண்டிருந்தது. பசுமை எங்கும் விரிந்து கிடந்தது. பாக்குகளும் மிளகுகளும் ஈரப் பலாக்களும் தென்னைகளும் ஒன்றையொன்று மீறி செழிப்பாக வளர்ந்திருந்தன.
சரிவான நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடே எனது தற்காலிகத் தங்குமிடம். அருகே சுனை பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்தே குடிப்பதற்கு நீரும் குளிப்பதற்கான நீரும் வந்து கொண்டிருந்தன.
இரவும் பகலுமாய் எந்நேரமும் சுனையின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இடத்தில் இருந்து வானமளையும் மலையையும் காடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும் கருங்கற்பாறைகள் வீட்டைச் சுற்றி இருந்தன. அவை 60-70 ஆண்டுகளுக்கு முன் மலையின் உச்சியிலிருந்து மண் சரிவின்போது உருண்டு வந்த பாறைகள் என்றனர். அப்போது இந்த அடிவாரத்தில் இருந்த சிலர் இறந்திருக்கின்றனர். ஒரு தாயும் பிள்ளையும் உணவூட்டிக் கொண்டபோது மரணித்திருக்கின்றனர் எனச் சொல்லப்பட்டது. எனக்கு அது பங்களாதேஷில் பூகம்பம் வந்தபோது கட்டியணைத்தபடி இறந்த ஒரு இணையை நினைவூட்டியது. எந்தக் கணத்திலும் மரணம் நம்மை ஆரத்தழுவும் என்று அறிந்தும் அறியாத பாவனைகளோடு இந்த இயற்கையை அடக்கியாள முடியுமென்று இன்னமும் நம்பும் பிடிவாதக்காரர்கள் நாம்.
நான் நின்ற வீட்டினர் தமிழும் சிங்களமும் கலந்த ஒரு பின்னணியுள்ள குடும்பம். பிள்ளைகள் சிங்களத்திலேயே படிக்கின்றார்கள். ஆனால், தமிழ் பேசுகின்றார்கள். அடுத்தடுத்த தலைமுறையில் அவர்கள் முற்றாக சிங்களவர்கள் ஆகிவிடுவார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் வேட்டையின் மரபை இன்னும் கைவிடாதவர்கள். இப்போதும் காட்டுப் பன்றியும் முள்ளம் பன்றியும் உடும்பும் பிடிக்க வேட்டைக்குத் துப்பாக்கியோடு போகின்றவர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து இவர்களின் கொள்ளுத் தாத்தா இந்த மலைப்பகுதிக்கு வந்திருக்கின்றார். தான்தோன்றித்தனமாய் அலைந்தவர், எவ்வாறு எதன்பொருட்டு அவர் இலங்கையின் இந்தப் பகுதிக்கு வந்தாரென்று தெரியவில்லை. இந்த மலையில் முன்னொரு காலத்தில் தேயிலை / இறப்பர் தோட்டம் ஆங்கிலேயரினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது எஸ்டேட் ஆக விரிந்தபோது பின்னாளில் பல நூற்றுக்கணக்கானோர் வந்து குடியேறியிருக்கின்றார்கள். இவர்களின் கொள்ளுத் தாத்தா ஆங்கிலேயரோடு வேட்டைக்குப் போகின்றவராகவும் வீடுகளை நிர்மாணிக்கின்றவராகவும் தொழிலாளிகளை வழிநடத்துபவராகவும் இருந்திருக்கின்றார். இவரின் கீழ் சில நூறு பேர் கட்டுமானத்தில் வேலை செய்தனர் என்றனர். எனவே, அவரின் பெயரில் இம்மலைகளில் மட்டுமில்லை, நகரத்திலும் நிலபுலங்கள் இருந்திருக்கின்றது. பின்னர் ஆங்கிலேயர் இந்த எஸ்டேட்டை கைவிடுகின்றனர். இங்கிருந்த தொழிலாளர்களும் வேறு வேறு இடங்களுக்குப் பின்னர் புலம்பெயர, இந்தக் குடும்பமும் அதன் வாரிசுகளும் மட்டும் இந்த மலையில் தங்கிவிட்டார்கள்.
இப்போது அவர்களின் நிலப்பரப்புகள் சுருங்கிவிட்டன. எவரெவரோ இவர்களின் நகரத்து நிலங்களை சுவீகரித்தும் விட்டார்கள். ஒருவகையில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாமோ என்னவோ? ஆனால், அவர்களுக்கு இன்னமும் தாங்கள் இந்த மலைகளுக்கு உரியவர்கள் என்று கூறுவதிலும், வேட்டையின் நுட்பம் தெரிந்த பெரும் வேட்டைக்காரர்கள் என்பதிலும் ஒருவித கம்பீரமும் கர்வமும் இருக்கின்றது.
வெளியே கொஞ்ச தூரம் நடந்தாலே மலை அட்டைகள் எம்மையறியாமலே ஏறிவிடுகின்றன. நான் சப்பாத்துபோட்டு அருகில் இருந்த இடங்களுக்கு நடந்தபோது இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்னோடும் நேசம் கொண்டன. எப்போதும் கையில் உப்பு கலக்கப்பட்ட போத்தல்களோடு திரிய வேண்டியிருந்தது. உப்புக் கரைசலை ஊற்றினால் – நம்மால் பலன் பெற்றுவிட்டு, நீ யாரென்று பின்னாட்களில் கேட்டு முகஞ்சுழிக்கும் ‘உத்தமர்’கள் போல – அட்டைகளும் சட்டென்று உடல் சுருங்கி நம்மைவிட்டு அகன்று விடுகின்றன.
அங்கே ஒரு பதின்மன் இருந்தான். சிங்களத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் மீதான ஆர்வத்தில் வீட்டுச் சுவரில் பாரதியார் கவிதையை எழுதி வைத்திருந்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்தேன். உரையாடல் எப்படி வளர்ந்ததோ தெரியாது என்னையறியாமல் என் பதின்மங்கள், காதல்கள், பயணங்கள் எனப் பகிரும்படியாக அந்த இரவு நீண்டது. அந்த மலையிலிருந்து இறங்கி நீண்டதூரம் நடந்து படிக்கப்போகும் அவன் எனக்குப் பலரை நினைவுபடுத்தியிருக்கலாம். வெள்ளையுடையுடன் சேற்றில் / மழைநீரில் அசுத்தமாகாது, அவ்வளவு தூரம் அவன் நடந்துபோவதே எனக்கு வியப்புத்தான். ஆகவே, அவனிடம், நீ கற்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உன் வாழ்க்கையை, உன் மூதாதையரின் கதையை எப்படியேனும் பதிவு செய் என்றேன். ஏனெனில் எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை. நான் இங்கே தங்கி நின்ற சில நாட்களிலே எவ்வளவை அவதானிக்கின்றேன். நீ இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவன். இந்த இயற்கையோடு உள்ளுறைந்து கிடப்பவன். நான் அந்நியன். எதைச் சொன்னாலும் எழுதினாலும் நகரத்துக்காரனின் ஆதிக்கம் இருக்கும், உனக்கது அப்படியல்ல என்று எதையெதையோ எல்லாம் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் மாலையில் அவன் தங்கை முறையானவள் வந்து வெசாக் கூடுகள் செய்து தரச் சொல்லி இவனிடம் கேட்டாள். இவன் கொஞ்சம் சலித்தபடி மூங்கில்கள் வெட்ட மலையேறிப் போனான். நாளை ஒளியேறும் இவர்களின் பரிசுத்தமான வெசாக்கூடுகளிலே எனக்கான புத்தர் உள்ளுறைந்து இருக்கின்றான்.
இது வெறும் மலை மட்டுமில்லை எதுவும் எளிதாக விளையும் பொன்னான பூமியுங்கூட. அங்கே சிவமூலிகைகளும் தேடினால் கிடைக்கும். தேடலைப் பொறுத்துக் கிடைக்கும் மூலிகை, அந்த மாலைக் குளிருக்கு வெம்மையின் உச்சம் ஏற்றுபவை.
இந்த மனிதர்களுக்கு இந்த மலையே வாழ்வு. அதற்குள் மிளகும் பாக்கும் ஈரப்பலாக்காய்களும் வாழைகளும் அவக்காடோக்களும் போதுமென்றளவுக்கு விளைகின்றன. வேட்டைக்காலங்களில் நல்ல சுவையான இறைச்சிகள் கிடைக்கின்றன. என்ன வேண்டும் இந்த வாழ்வுக்கு என்ற அலட்சியத்தோடும் கம்பீரத்தோடும் திரியும் வாழ்வு அவர்களுக்கு. என்றாலும் அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை அலசி ஆராய்வதால் என்ன பயன்? நாம் அங்கு போய் வாழவா போகின்றோம்? எந்த மனிதர்கள்தான் சிக்கல்கள் இல்லாது இருக்கின்றனர்.
எனக்கு அந்த மலைக்கும் காட்டுக்கும் இடையில் குடில் அமைத்து வாழும் ஆசை எழுந்தது. ஆனால், என்னால் ஒருநாள் கூட தனித்து அங்கே வாழமுடியாது என்பதும் புரிந்தது. ஐயோ, இந்த சுனைநீர் இவ்வளவு குளிருகின்றதே நீராட வேறு வழியிருக்கா என்று யோசிக்கும் சாதாரண ஒருவன் நான். இவர்கள் இந்த நிலப்பரப்பில் தகவமைத்துக் கொள்ள எவ்வளவு காலம் ஆகியிருக்கும். அது வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த பரம்பரைக்கு, இந்த மலை எங்கள் மலையென்று கொடுத்த மாபெரும் வைராக்கியம் அல்லவா? ஒரு நேரச் சாப்பாடு இல்லையென்றால் கனி தரும் மரங்களைத் தேடியோ அல்லது துப்பாக்கி தூக்கிக் கொண்டு வேட்டையாடப் போகும் அவர்களைப் போன்ற சாகசக்காரனோ அல்ல நான்.
நான் அந்த இயற்கைக்குள் இருந்து வாசித்து எழுத விரும்புகின்றவன். மலைகளினதும் காடுகளினதும் கதைகளை, மனிதர்கள் தம் இரத்தமும் வியர்வையும் கலந்து சொல்கின்றபோதே அவை மாமலைகளாகவும் பெருங்காடாகவும் மாறுகின்றன.
மாமலைகளையும் பெருங்காடுகளையும் கடந்து செல்லுமொருவன், தன் மூதாதையர் சுதந்திரமாய் உலாவித் திரிந்த குறிஞ்சித் திணையினதும் முல்லைத் திணையினதும் ஒருதுளி வாழ்வையேனும் அகத்தில் தரிசிக்கவே செய்வான். அதுவே இயற்கை அவனுக்கு அளிக்கும் மாபெரும் கொடை!
– இளங்கோ