பூமியின் சுழற்றியைப் பொறுத்தே ஒரு நாள் இருக்கும். இப்போது பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது பூமியின் சுழற்றி மெல்ல வேகமாகி வருவதாகவும் இதனால் நாட்கள் குறைவானதாக மாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பூமி தன்னை தானே சுழன்று கொள்ளும் என்பதும் இதுபோல ஒரு முறை பூமி தன்னை தானே சுற்றிக்கொள்வது தான் ஒரு நாள் என்பதும் அனைவருக்கும் தெரியும். பூமி இப்படி ஒரு முறை தன்னை தானே சுற்றிக்கொள்ள கிட்டதட்ட 24 மணி நேரம் ஆகும் என்பதாலேயே அதை வைத்து ஒரு நாள் என்பது கணக்கிடப்படுகிறது.
இதற்கிடையே வரும் வாரங்களில் பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுழலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பகல் பொழுதுகள் சற்று நீளம் குறைந்ததாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் அதாவது ஜூலை 9ம் தேதி பூமி வேகமாகச் சுற்றியுள்ளது. இது மட்டுமின்றி வரும் ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் சந்திரனின் நிலை பூமியின் சுழற்சியைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் வழக்கமான 24 மணி நேரத்தை விடக் குறைவாக இருக்குமாம். குறைவு என்றேல் ரொம்ப குறையும் என நினைக்க வேண்டாம். வெறும் 1.3 முதல் 1.51 மில்லி விநாடிகள் வரை குறைவாக இருக்கும். இந்தளவுக்குத் தான் குறையும் என்பதால் நம்மில் பலரும் இதை நோட் செய்யக் கூட மாட்டோம்.
பொதுவாக, பூமியில் ஒரு முழு நாள் என்பது 86,400 விநாடிகள் அல்லது 24 மணி நேரம் ஆகும். ஆனால் பூமியின் சுழற்சி நிலையானது அல்ல. சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை, கிரகத்தின் காந்தப்புலம் மற்றும் இயற்கை அல்லது மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பூமியின் நிறையில் (mass) ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இது பாதிக்கப்படும்.
கடந்த காலத்தை நாம் எடுத்துப் பார்த்தோம் என்றால் பூமியின் சுழற்சி படிப்படியாகக் குறைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.. சுமார் 100 முதல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் என்பது 19 மணிநேரம் மட்டுமே நீடித்தது. ஏனெனில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்ததால் அதன் ஈர்ப்பு விசை அதிகமாக இருந்தது. காலப்போக்கில், சந்திரன் தூரம் செல்லச் செல்ல, நமது நாட்களின் நீளம் அதிகரித்தது.
அதேநேரம் சில குறிப்பிட்ட காலத்தில் பூமி சுழற்சி அதிகரித்தும் இருக்கிறது. 1970களில் இருந்ததை விட 2020ஆம் ஆண்டில் பூமி வேகமாகச் சுழல்வதை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். மிகக் குறுகிய நாளாக ஜூலை 5, 2024 பதிவானது. இது வழக்கத்தை விட 1.66 மில்லி விநாடிகள் குறைவானது.
குறிப்பிட்ட நாட்களில் சந்திரனின் தூரம் பூமியின் அச்சில் இருந்து மாறுபடுவதால், கிரகத்தின் சுழற்சி வேகமடைகிறது அல்லது மெதுவாகிறது. இது ஒரு பம்பரம் தனது அச்சை மாற்றும்போது வேகமாகச் சுழல்வது போன்றது. பனி உருகி நிலத்தடி நீர் நகர்வது உள்ளிட்ட காலநிலை மாற்றங்களும் கூட பூமியின் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பூகம்பங்கள் மற்றும் பருவகால மாற்றங்கள் கூட சுழற்சியைப் பாதிக்கும்.