என்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா நடித்த ‘மிஸ் யூ’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், சென்னையில் நடந்த மிஸ்யூ சிறப்பு காட்சிக்குபின் செய்தியாளர்களிடம் சித்தார்த் பேசியதாவது…
இதற்கு முன்பு மழை காரணமாக இந்த பட ரிலீசை தள்ளி வைத்தோம். இப்போது டிசம்பர் 13ல் வெளியாகிறது. அதற்குள் மழை குறைந்துவிடும் என நினைக்கிறேன். இதுபோன்ற ரொமாண்டிக் படம் வெளியாகும்போது நல்ல க்ளைமேட் இருக்கிறது. 22 ஆண்டுகளுக்குமுன்பு சினிமாவில் அறிமுகம் ஆனேன். ஆனாலும், ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், ஒவ்வொரு பிரிவியூ ஷோ நடக்கும்போகும் டென்ஷனில் சுற்றிக்கொண்டே இருப்பேன். இன்றைக்கும் அப்படிதான்.
திருமணத்துக்குபின் மாறிவிட்டேனா என்று கேட்கிறார்கள். நான் எதையும் மாற்றவில்லை. அப்படியேதான் இருக்கிறேன். நடிகனாக நடிப்பில் மாற்றங்களை செய்கிறேன். தினமும் எதையாவது கற்றுக்கொண்டே இருப்பேன். இப்போது மனைவியிடமும் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். உலகத்திலேயே தன்னை பிடிக்காத ஒரு பெண்ணிடம் ஹீரோ காதலை சொல்கிறான். என்ன நடக்கிறது என்பது இந்த பட கதை. காதலில் சொதப்புவது படத்துக்குபின் இந்த படம் முழுக்க காதல் சம்பந்தப்பட்ட கதையாக வருகிறது.
இந்த படத்தில் ஒரு பாடல்காட்சியி்ல் டான்ஸ் ஆடி முடிந்தவுடன் கால் வலிக்குதுனு சொல்வேன். என் நண்பராக வரும் கருணாகரன் ‘‘ரொம்ப நாளுக்குபின் டான்ஸ் ஆடினால் அப்படிதான்’’ என கலாய்ப்பார். இப்படி பல நல்ல சீன் வந்துள்ளது. நண்பர் பரத் நடித்த படமும் இந்த படத்துடன் போட்டியிடுகிறது. என்னை பொறுத்தவரையில் எல்லா படமும் ஓட வேண்டும். சினிமா நல்லா இருக்கணும்/
மிஸ் யூ படத்தில் ஒரு காட்சியில் சூர்யா சம்பந்தப்பட்ட வசனம் வருகிறது. நான் வருங்காலத்தில் சூர்யாவை வைத்து படம் இயக்குவேனா என தெரியவில்லை. உதவி இயக்குனராக பணியை தொடங்கினாலும் இன்னமும் நான் இயக்குனர் ஆகவில்லை. அப்படி ஆகும்போது அவர் கால்ஷீட் கொடுப்பாரா? சூழ்நிலை செட்டாகுமா என தெரியவில்லை. அந்த தகுதிக்கு நான் வரணும். சூர்யா அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.