சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்த மதகஜராஜா படம், 12 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் நடந்த இப்படத்தின் பிரிமியர் ஷோவில் சந்தானம் குறித்து பேசிய இயக்குனர் சுந்தர்.சி ‘‘படம் ஓடும்போதும் கேட்ட கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் என்னை மகிழ்ச்சியடைய செய்தது. படத்தில் சந்தானத்தின் காமெடி எப்படி இருந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான் சந்தானத்தை உண்மையிலேயே மிஸ் பண்ணுறேன். அவர் ஹீரோவாகிவிட்டார். ஆனாலும், அவரிடம் என் ஆசையை தெரிவிக்கிறேன். நாம் மீண்டும் இணைய வேண்டும். என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். அது நடக்க வேண்டும்’ என்றார். அதாவது, தனது படத்தில் பழையபடி சந்தானம் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் வைத்தார்.
சுந்தர்.சி இயக்கிய பல படங்களில் இடம் பெற்ற சந்தானத்தின் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. சந்தானம் ஹீரோவான பிறகு யோகிபாபுவிடம் சென்றார் சுந்தர்.சி. ஆனாலும் சந்தானத்தின் இடத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் சந்தானம் காமெடிக்கு திரும்ப வேண்டும் என்று சுந்தர்.சி பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கவுண்டமணியுடன் கூட்டணி சேர்ந்த சுந்தர்.சி, அடுத்ததாக வடிவேலுவுடன் சேர்ந்தார். சுந்தர்.சி-வடிவேலு கூட்டணி பல வெற்றிகளை கொடுத்தது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலு பிரிந்துவிட்டார். அடுத்துதான் சுந்தர்.சி படத்துக்கு சந்தானம் வந்தார்
இப்போது பழசை மறந்து வடிவேலுவை வைத்து கேங்ஸ்டர்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அதில் வடிவேலு கதைநாயகனாக நடிக்கிறார். இப்போது சந்தானத்துக்கு ஓபனாக வேண்டுகோள் விடுத்த நிலையில், அடுத்து சந்தானம் கதைநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த பிரிமியர் ஷோவில் விஷாலுடன் ஒரே தியேட்டரில் அமர்ந்து வரலட்சுமியும் மதகஜராஜாவை பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இதே நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு, “‘மதகஜராஜா படத்தின் பிரச்னைகளால் சுந்தர்.சி கவலையில் இருந்தார். சரியாக துாங்கவில்லை. இனி, அந்த கவலை இல்லை. படம் ஹிட்” என்றார்.
யாரும் எதிர்பாராதவகையில் பிரிமியர் ஷோவுக்கு வந்த விஷால் ‘‘இப்ப, எல்லாம் சரியாகிவிட்டது. கை நடுக்கம் இல்லை. ஒரு சிலர் தவறாக என்னை பற்றி பேசிவிட்டனர். மதகஜராஜா படத்தின் வெற்றி என்னை உற்சாகம் அடைய செய்துள்ளது. சில நாட்களாக எனக்கு எவ்வளவு போன்கால்கள், ஏகப்பட்ட மெசேஜ். இவ்வளவு பேர் அன்பு வைத்து இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்” என்றார். மறுநாள் படம் ஓடும் தியேட்டர்களுக்கும் விசிட் அடித்தார்.