No menu items!

எஃகு, அலுமினியத்துக்கு 25 சதவீத வரி – டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு பாதிப்பா

எஃகு, அலுமினியத்துக்கு 25 சதவீத வரி – டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு பாதிப்பா

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த வரி அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என அறியப்படுகின்றது. இதனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? விரிவாக பார்ப்போம்.

கனடா அரசியல்வாதிகளின் எச்சரிக்கையையும் மீறி, டிரம்பின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த உலோகங்கள் அதிக அளவில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, இறக்குமதியை நம்பியுள்ள அமெரிக்க வணிகங்களும் இந்த வரி நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளன. ஆனால், தனது திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் இந்த இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படாது என்றும் எச்சரித்தார்.

முன்னதாக 2018 ஆம் ஆண்டில், டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்திலும், எஃகு மீது 25 சதவீதம் மற்றும் அலுமினியத்தின் மீது 15 சதவீத வரியை அறிவித்திருந்தார். ஆனால் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியில் அந்த வரிகள் அகற்றப்பட்டன.

உலகிலேயே எஃகு இறக்குமதியில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. கனடா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகியவை அமெரிக்காவிற்கு எஃகு வழங்கும் மூன்று முக்கிய நாடுகளாகும்.

கடந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை கனடாவிலிருந்து மட்டுமே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு எஃகு அல்லது எஃகு சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதல் ஐந்து நாடுகள் கனடா, பிரேசில், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகும்.

2024 ஆம் ஆண்டில், கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிக எஃகு இறக்குமதி செய்யப்பட்டது. கனடாவிற்குப் பிறகு, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு எஃகு ஏற்றுமதி செய்தன என்று அமெரிக்க இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தின் (AISI) கூற்றின் மூலம் அறியமுடிகின்றது.

சர்வதேச வர்த்தக நிர்வாகத்தின் கூற்றுப்படி, அமெரிக்கா கனடாவிலிருந்து அதிக அலுமினிய பொருட்களை இறக்குமதி செய்கிறது.

கனடாவைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகம், சீனா, கொரியா, பஹ்ரைன், அர்ஜென்டினா மற்றும் இந்தியாவும் அமெரிக்காவிற்கு அலுமினிய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.

மேலும் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், கனடா, மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எஃகு இறக்குமதிக்கு 25 சதவீதமும் அலுமினிய இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்தார்.

ஆனால் வரி விதிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான இறக்குமதி வரிகளை நீக்க அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வரிகள் 2021ம் ஆண்டு வரை தொடர்ந்தன.

டிரம்பின் வரி விதிப்பு நோக்கங்கள் குறித்து கருத்து தெரிவித்த கனடா தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின், “கனடாவின் எஃகு மற்றும் அலுமினியம், அமெரிக்காவின் பாதுகாப்பு, கப்பல் தயாரிப்பு மற்றும் வாகன தொழில்துறை போன்ற முக்கிய துறைகளில் பங்களிக்கிறது. நாங்கள் எங்கள் நாடு, எங்கள் தொழிலாளர்கள் மற்றும் எங்கள் தொழில்களுக்காக உறுதியாக நிற்போம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், கனடா மற்றும் மெக்ஸிகோவின் இறக்குமதிகளுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டினார்.

ஆனால், இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசிய பிறகு அந்த திட்டத்தை 30 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.

அதே நேரத்தில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10 சதவீத புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்க முடிவு செய்தது.

டிரம்பின் புதிய வரி திட்டம் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று கூறி, கனடா தலைவர்கள் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, “இன்றைய செய்திகள், இனிவரும் காலங்களிலும் நிச்சயமற்ற தன்மை தொடரும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன,” என்று கனடாவின் வர்த்தக சபைத் தலைவர் கேண்டஸ் லிங் கூறினார்.

“30 நாட்களுக்கு வரிகள் ஒத்திவைக்கப்பட்டதால், தொழில்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏற்கனவே நிச்சயமற்ற நிலையில் உள்ளன. இப்போது, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு பொருளாதாரங்களின் கூட்டு வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் எஃகு மற்றும் அலுமினியத் துறைகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன” என்று லாங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒன்டாரியோவில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டக் ஃபோர்ட், அமெரிக்க அதிபரை விமர்சித்த முதல் கனடா அரசியல்வாதிகளில் ஒருவர்.

இந்த வரிகள் அமெரிக்க வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் பதிவிட்டார். அதனையடுத்து, விலைவாசி உயரும் என்றும், அமெரிக்க தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “அமெரிக்காவின் இழப்பு, கனடாவின் இழப்பு, சீனாவின் ஆதாயம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டக் ஃபோர்ட்.

அமெரிக்காவிற்கு எஃகு இறக்குமதி செய்யும் ஒரு முக்கிய நாடாக கனடா உள்ளது. மேலும் இந்தத் தொழில், கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்டாரியோவில் குவிந்துள்ளது.

அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை இறக்குமதி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியா இல்லை என்றாலும், 2024இல் இந்தியாவிலிருந்து 200,000 மெட்ரிக் டன் எஃகு பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்ததாக சர்வதேச வர்த்தக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 4 லட்சத்து 71 ஆயிரம் டாலர்களுக்கு மேல் இருந்தது. 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான அலுமினியப் பொருட்களை இறக்குமதி செய்தது. இதன் விலை 440 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இந்தியாவின் இரும்பு, எஃகு மற்றும் அலுமினியம் ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாக உள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எஃகு ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த எஃகு ஏற்றுமதியில் 28 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே நேரத்தில், இந்தியாவின் அலுமினிய ஏற்றுமதியில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா அதன் மொத்த அலுமினிய ஏற்றுமதியில் சுமார் 14 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. எனவே, டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் இந்திய எஃகு மற்றும் அலுமினியத் தொழில்கள் பாதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...