பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ் உட்பட பலர் நடித்த எம்புரான் படம், மார்ச் 27ல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற லுாசிபர் படத்தின் 2ம் பாகம் இது. முக்கியமான ரோலில் பிருத்விராஜூம் நடித்து இருக்கிறார். சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் படம் குறித்தும், தனது அருமை நண்பர் மம்முட்டி குறித்தும் மோகன்லால் பேசினார்
அவர் பேசியதிலிருந்து: ‘‘பொதுவாக மலையாள படங்கள் சின்ன பட்ஜெட்டில், அழுத்தமான கதை அம்சத்தில் உருவாகும். நான் நடித்த புலிமுருகன் படம்தான் முதலில் 100 கோடி வசூலை அள்ளியது. எம்புரான் படத்தின் பட்ஜெட்டே அதை விட பல மடங்கும் அதிகம். இந்த படம் ஆயிரம் கோடியை அள்ளுமா? புஷ்பா2 வசூலான ஆயிரத்து 800 கோடியை முறியடிக்குமா என தெரியவில்லை. அப்படி நடந்தால் சந்தோஷம். நாங்கள் வசூலை மனதில் வைத்து படம் பண்ணுவதில்லை. நல்ல படத்தை, கடும் உழைப்புடன் கொடுத்து இருக்கிறோம்.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கெஸ்ட் ரோலில் நடித்தேன். என்னை போல் ஒருவன் படத்தில் கமலுடன் ஜெஸ்ட் ரோல் பண்ணினேன். ஜில்லாவில் விஜயுடன் நடித்தேன். மற்ற, பெரிய ஹீரோக்கள் இப்படி மலையாளத்தில் கெஸ்ட் பண்ணுவார்களா என தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நடிகன். சின்ன ரோல் இருந்தாலும், சிறப்பாக இருந்தால் அதை செய்வேன். அதில் பாகுபாடு பார்க்கமாட்டேன்.
என் சக நடிகரான மம்முட்டி என் சகோதரர் போன்றவர். அவருக்கு ஒரு சின்ன பிரச்னை. ஆனால், கவலைப்படும் படி எதுவும் இல்லை. நாம் எல்லாருக்கும் வருவதுதான். அவருக்காக சபரிமலையில் சிறப்பு பிரார்த்தனை செய்தேன். அதை பெரிதாக்க வேண்டாம். யார் உடல்நலம் சரியில்லாமல் கஷ்டப்பட்டாலும், அவருக்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நான் செய்தது கொஞ்சம் பர்சனல், அது பற்றி அதிகம் பேச வேண்டாம். லுாசிபர் வெற்றி பெற்றதால் அடுத்த பாகம் எடுக்கிறோம். இன்னொரு பாகமும் இருக்கிறது.
இன்றைய காலத்தில் ஒரு பொழுது போக்கு படம் எடுப்பது கஷ்டம். நல்ல இசை, நல்ல நடிகர்கள், கதை என அனைத்தும் அதில் வேண்டும். பிருத்விராஜ் சிறப்பாக எடுத்து இருக்கிறார். நாங்கள் இணைந்து கடுமையாக பணியாற்றி இருக்கிறோம். இந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்து இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கு நல்ல புக்கிங் வந்துள்ளது. இந்த பிலிம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. படம் பார்த்துவிட்டு சொல்லுங்க. ஆயிரக்கணக்கான மக்கள் உழைப்பில் இந்த படம் வந்து இருக்கிறது. பிலிம் இன்டஸ்டரி வாழ, சின்ன படம், பெரிய படம் என அனைத்து படங்களும் ஓடணும். கடந்த 47 ஆண்டுகளாக இருக்கிறேன். அதில் முதல் 7 ஆண்டுகள் ரொம்ப கஷ்டம். அது முக்கியமான ஆண்டு. 400 படங்கள் நடித்துவிட்டேன். அதற்கு கடவுள் ஆசீர்வாதம்தான்‘‘