தேர்தலுக்கு இன்னும்10 மாதங்கள் இருக்கும்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு மெனக்கிடுவதைப் பார்த்துவிட்டு, அதே பெண்களை தங்கள் பக்கம் திருப்பும் விதமாக தனது பிரச்சாரத்தில் அதிரடி அறிவிப்புகளை செய்து வருகிறார் எடப்பாடிபழனிசாமி.
தனது பிரச்சாரப் பயணத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், மாணவர்கள், மீனவர்கள் என பலதரப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசி வருகிறார் பழனிசாமி, ஜெயலலிதா பாணியில், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில், தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படை, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு, மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் முதலானவற்றை செயல்படுத்தினார்.
பெண்களுக்கான மகப்பேறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது, அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பை 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம், அம்மாவின் பெயரையும் இன்ஷியலாகப் பயன்படுத்தலாம் என்ற உத்தரவு, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட ‘காவலன் செயலி’ என்று பெண்களின் மனதை படித்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது தொடர் வெற்றிகளுக்கு இந்தத் திட்டங்களும் காரணமாக இருந்தன.
1989 தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்ற அறிவிப்பும் பிரதானமாக இருந்தது. பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூபாய் 5,000 திருமண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக்கு வந்ததும் அதை அமல்படுத்தியது திமுக. 2011 அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டமானது தாலிக்குத் தங்கம் திட்டமாக மாற்றப்பட்டு அரை பவுன் தங்கமும் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. பின்னர் அது ஒரு பவுனாக உயர்த்தப்பட்டது. இதேபோல், திமுக அரசு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியது. அதிமுக-வோ மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பெண்களை கவர்ந்தது.
இப்போதைய திமுக ஆட்சியில், கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி, இலவச பேருந்துப் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என்று பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் பெண்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்துவிட்டு பழனிசாமியும் அதே ரூட்டில் இறங்கி இருக்கிறார். திமுக ஆட்சியில், தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடரும் என்று அறிவித்துள்ள பழனிசாமி, தங்கம், ரொக்கத்துடன் பட்டுப்புடவையும் தருவோம் எனச் சொல்லி இருக்கிறார். அதேபோல், தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை 1,500 ரூபாயாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உயர்த்தி வழங்குவோம் என அறிவித்திருக்கிறார். தேர்தல் நெருக்கத்தில் இது 2 ஆயிரமாக உயர்ந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
ஜெயங்கொண்டம் பிரச்சாரத்தின் போது தன்னிடம் உதவி கேட்ட ஒரு பெண்ணுக்கு அங்கேயே 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து பெண்களுக்கு எப்போதும் உதவி செய்பவன் நான் என்கிற பிம்பத்தையும் உருவாக்கி இருக்கிறார் பழனிசாமி. பிரச்சாரத்தின் போது பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இறங்கி நடந்து அவர்களிடம் பேசுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
எதை எடுத்துப் பேசினால் பெண்களை சிந்திக்க வைக்க முடியும் என கணக்குப் போட்டு, இந்த ஆட்சியில் கடுமையாக உயர்ந்திருக்கும் விலைவாசியையும் பட்டியல் போடுகிறார் பழனிசாமி. ஆக, திமுக-வும் அதிமுக-வும் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கான திட்டங்களை அடுக்கி வருகின்றன. இதையெல்லாம் கேட்டுவிட்டு அவர்கள் எந்தப் பக்கம் வண்டியைத் திருப்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை!