கோடை விடுமுறைக்கு பெரிய படங்கள் அதிகம் வராததால், முன்பு ஹிட்டான படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘சச்சின்’, ‘பாட்ஷா’ படங்கள் வரிசையில், ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடித்த ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது.
2010ம் ஆண்டு வெளியான ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பக்கா காமெடி படம். அப்போது பெரிய வெற்றி அடைந்தது. குறிப்பாக, ஆர்யா, சந்தானம், நயன்தாரா, மொட்டை ராஜேந்திரன் கூட்டணி நிறைய சிரிப்பை வரவழைத்தது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குபின் மீண்டும் மக்களை சிரிக்க வைக்கிறது இந்த படம். குருசம்பத் படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார். காமெடி தவிர, இந்த படத்தில் யுவன்ஷங்கர்ராஜா பாடல்களும் பிரபலமாகின.
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை தொடர்ந்து பல காமெடி படங்களை ராஜேஷ் எம் இயக்கியிருந்தாலும், இந்த சாதனையை எந்த படமும் வீழ்த்த முடியவில்லை. பல பேட்டிகளில் பாஸ் என்ற பாஸ்கரன் பார்ட் 2 வருமா என்று இயக்குனர் ராஜேஷ். எம்மிடம் கேட்கப்பட்டது. அவரோ, எனக்கும் ஆசை. ஆனால், கதை, நடிகர்கள் செட்டாக வேண்டுமே என்றார். பாஸ் என்ற பாஸ்கரன் 2 தொடர்பாக பல முறை முயற்சித்தும், அந்த கூட்டணி நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது. முக்கிய காரணம் சந்தானம். அந்த சமயத்தில் சந்தானம் காமெடி நடிகராக இருந்தார். ஆர்யா, நயன்தாராவுடன் இணைந்து காமெடி செய்தார். இப்போது அவர் கதைநாயகன் ஆகிவிட்டதால், மீண்டும் காமெடியனாக நடிக்க த யங்குவதாக கேள்வி. சரி, ஆர்யா ஒரு ஹீரோ, சந்தானம் ஒரு ஹீரோ என்று கதையை உருவாக்கலாம் என்று இயக்குனர் நினைத்தால், படத்தின் பட்ஜெட் எகிறுகிறதாம். தவிர, அந்த சமயத்தில் சில கோடிகள் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார் நயன்தாரா. இப்போது அவர் சம்பளம் 10 கோடியை தாண்டிவிட்டது. தவிர, அவரை ஹீரோயின் ஆக்கினால் ரசிகர்கள் ரசிப்பார்களா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.