இந்தியாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளம் உள்ளது. அதிலும் அம்மாநிலத்தில் உள்ள இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டுமுதல் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
இதில் வயநாடு பகுதியில் மட்டும் ஏன் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது என்பதற்கு, “அப்பகுதியில் உள்ள மண் கெட்டித்தன்மையுடன் இல்லாமல் மிருதுவாக இருப்பதே காரணம் என்கிறார்கள் தாவரவியல் ஆய்வாளர்கள்.
இதுபற்றி அவர்கள் மேலும் கூறும்போது, “இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அடுத்ததாக அதிக மழையைப் பெறும் மாநிலமாக கேரளம் இருக்கிறது. புவியியல் ரீதியாக, கேரளாவின் மேற்கே அரபிக்கடல் மற்றும் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருப்பதால், அம்மாநிலம் அதிக அளவிலான மழைப்பொழிவைப் பெறுகிறது. இதனால் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில், வயநாடு, இடுக்கி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பகுதிகளில் நிலச்சரிவு அதிகளவில் ஏற்படுகிறது” என்கிறார்கள்.
வனப்பகுதி அழிப்பு
வயநாட்டில் 1950 முதல் 2018 வரை வனப்பகுதி அழிப்பு 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கே தோட்டப் பயிர்கள் நடவு 1800 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதால், மண்ணை இறுகப் பிடித்திருக்கும் மரங்களின் வேர்கள் அங்கு குறைவாகவே இருக்கிறது அதுவும் நிலச்சரிவுக்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் வயநாடு பகுதியில் உள்ள மண்ணுக்கு அடியில் ‘சாயில் பைப்பிங்’ என்ற பிரச்சினை இருப்பதும் அங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அது என்ன சாயில் பைப்பிங்?
மண்ணுக்கு அடியில் நீரோட்டத்துக்காக இயற்கையாகவே அமைந்துள்ள வழிதான் சாயில் பைப்பிங். இயற்கையாகவே மண்ணுக்கு அடியில் குழாய் போன்ற அமைப்பு தண்ணீர் செல்வதற்காக உருவாகிறது. வயநாடு பகுதியில் மழைக்காலங்களில் பூமிக்குள் இறங்கும் தண்ணீர், வலிமை இல்லாத மண்ணை மேலும் வலிமை இழக்க செய்து சாயில் பைப்பிங்கை அதிகரிக்கிறது. இப்போது வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுக்கு இது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்.
எச்சரித்த இஸ்ரோ அமைப்பு
கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இஸ்ரோ ஆமைப்பு ஏற்கெனவே எச்சரித்து இருந்தது. அந்த அமைப்பு கடந்த ஆண்டில் வெளியிட்ட நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் பற்றிய வரைபடத்தில், “இந்தியாவில் உள்ள 30 நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளில் 10 கேரளாவில் உள்ளன. நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள 30 இடங்களில் கேரளாவின் வயநாடு 13-வது இடத்தில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கொங்கன் மலைப் பகுதியில் 0.09 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, அதாவது தமிழகம், கேரள, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. குறிப்பாகக் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் மக்கள் தொகை அடர்த்தியால் நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள பகுதியாக அதை மாற்றுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மொத்தத்தில் நாம் இயற்கையை அழித்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் இயற்கை நம்மை அழித்துவிடும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த நிலச்சரிவு.