வாரணாசி தொகுதியில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே பிரதமர் நரேந்திர மோடி இப்போது முன்னணியில் இருக்கிறார். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் மோடியை விட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலை பெற்று பாஜகவினரை வியர்க்க வைத்தார் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான அஜய் ராய்.
வாக்கு எண்ணிக்கையின்போது சுமார் 1 மணிநேரத்துக்கு வாரணாசி தொகுதியில் மோடி 6 ஆயிரம் வாக்குகள் பின்னிலை என்ற செய்தி தொலைக்காட்சிகளில் தெரிய அதிர்ந்து நின்றார்கள் பாஜகவினர். இப்படி ஒட்டுமொத்த பாஜகவினரையும் சில நிமிடங்கள் உறைய வைத்திருக்கிறார் அஜய் ராய்.
இதைத்தொடர்ந்து யார் இந்த அஜய் ராய் என்ற கேள்வி தேசம் முழுவதும் எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான அஜய் ராய், அம்மாநிலத்தில் வலுவான செல்வாக்கைக் கொண்டவர். 1969-ம் ஆண்டில் அரசியலுக்கு வந்த அஜய் ராய், ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில்தான் இருந்துள்ளார். அதன்மூலம் பாஜக ஆதரவாளராக செயல்பட்ட அஜய் ராய், கடந்த 1996 முதல் 2007 வரை தொடர்ந்து 3 முறை கோலாஸ்லா தொகுதியில் இருந்து உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். பாஜக சார்பில் எம்பி தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் மறுக்கப்பட்ட்தை தொடர்ந்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து 2012-ம் ஆண்டில் காங்கிரஸுக்குத் தாவினார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உ.பி சட்டமன்றத் தேர்தலில் பிந்த்ரா தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.