No menu items!

விசில் போடுங்க! – அடுத்த வருஷமும் தோனி ஆடுவார்

விசில் போடுங்க! – அடுத்த வருஷமும் தோனி ஆடுவார்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக ஒரு நீண்ட விசில் போடலாம். சென்னையின் செல்லப் பிள்ளையான மகேந்திர சிங் தோனி, அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கேவுக்காக ஆடப்போவதாக மறைமுகமாக அறிவித்திருக்கிறார். பெங்களூருவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தோனியின் இந்த மறைமுக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போதே முட்டிவலியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் தோனி. அதனாலேயே பல போட்டிகளில் அவர் கடைசியாகத்தான் பேட்டிங் செய்ய வந்தார். சிஎஸ்கே அணி கடந்த முறை கோப்பையை வென்ற பிறகு பேசிய தோனி, “ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இது சரியான நேரம். ஆனால் என்னை விரும்பும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பரிசாக இன்னும் ஒருமுறை ஆட விரும்புகிறேன். என் முட்டியில் அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளது. அதன்பிறகு என்னால் ஆட முடியுமா இல்லையா என்பதைப் பற்றி நவம்பர் மாதம் அறிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.

தோனி சொன்ன நவம்பர் மாதம் நெருங்கும் நிலையில், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். இதில் தோனியிடம் பேட்டி எடுத்த நெறியாளர். “இப்போது கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் ஓய்வுபெற்று விட்டீர்கள்” என்று கூற, அவரை இடைமறித்த தோனி, “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும்” என்று கூறியுள்ளார். உடனே அரங்கத்தில் உள்ள ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கைதட்டியுள்ளனர். அப்போது நெறியாளர், “இங்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இருப்பதாக தெரிகிறது” என்று கூற, புன்னகைத்திருக்கிறார் தோனி. இந்த பதில் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தான் ஆடப்போவதாக மறைமுகமாக சொல்லியிருக்கிறார் தோனி.

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, “அறுவை சிகிச்சைக்கு பிறகு என் கால் முட்டி நன்கு குணமாகி வருகிறது. அன்றாட பணிகளை எந்த சிக்கலும் இல்லாமல் செய்து வருகிறேன். இப்போது தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். நவம்பர் மாதத்துக்கு பிறகு கால் முட்டி இன்னும் நன்றாக குணமாகி பழையதுபோல் ஆகிவிடும் என்று மருத்துவர்கள் சொல்லிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தன் கால் முட்டி நவம்பர் மாதத்துக்குள் பழையபடி நன்றாக குணமாகிவிடும் என்பதையும் தோனி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசிய தோனி, “ஒரு நல்ல கிரிக்கெட் வீரன் என்பதைவிட ஒரு நல்ல மனிதன் என்ற அளவிலேயே மக்களின் நினைவுகளில் வாழ விரும்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் வாய்ப்புகளைப் பற்றி கேட்டதற்கு, “இது ஒரு சிறந்த அணி. இந்த அணியில் எல்லா அம்சங்களும் சரிவிகிதமாக கலந்துள்ளன. எல்லா வீர்ர்களும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்று தோனி கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...