ராஜாராணி, காலா, விஸ்வாசம், அரண்மனை3 போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், தனது காதலன் நவ்நீத்தை, கோவாவில் ஜனவரி 2-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். உறவினர்கள், நண்பர்கள் என எளிமையாக திருமணம் நடந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து புதுமண தம்பதியினர் பேசினர்.
அப்போது சாக்ஷி அகர்வால் பேசியதாவது…
‘நானும் நவ்நீத்தும் 15 ஆண்டுகால நண்பர்கள். பெரிய வெற்றி கொடுத்துவிட்டு, பெரிய படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்வேன் என்று முன்பு பேட்டி அளித்து இருந்தேன். ஆனாலும், இப்போது சூழ்நிலை சரியாக இருப்பதால் திருமணம் செய்துவிட்டேன். தொடர்ச்சியாக படங்களில் நடிப்பேன்.
சென்னை அண்ணா பல்கலைக்க்ழகத்தில் கோல்டு மெடல் வாங்கிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றினேன். ஆனாலும் சினிமா ஆசையால் அதை விட்டு வந்தேன். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்து வருகிறேன். கடந்த சில நாட்களாக உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறேன். கணவர் அமெரிக்கா செல்ல இருப்பதால் திடீரென இந்த திருமணம் நடந்தது.
கடந்த 15 ஆண்டுகளாக நவ்நீத்தை தெரியும். அதாவது நான் நடிக்க வந்த புதிதில் இருந்து அவர் எனக்கு தூண் மாதிரி இருக்கிறார். சின்ன வயது நண்பரை திருமணம் செய்வது ஆசீர்வாதம். அவர் என் வெற்றி, தோல்விகளை பார்த்து இருக்கிறார். ராஜஸ்தானி ஸ்டைலில் திருமண விருந்து கொடுக்கிறோம். அதை அனைவரும் சாப்பிட்டுவிட்டு, வாழ்த்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஹனிமூன் எங்கே என்று சாக்ஷியிடம் கேட்டபோது,‘‘ இன்னமும் பிளான் பண்ணலை. கண்டிப்பாக, தமிழ்நாட்டில்தான். அவர் அமெரிக்கா கிளம்புகிறார். இன்னும் சில நாட்களில் நானும் படப்பிடிப்பு கிளம்புகிறேன். தவிர, நவ்நீத் கூட பல ஆண்டுகள் இருந்து இருக்கிறேன். அந்த சமயமெல்லாம் ஹனிமூன் மாதிரிதான் பீல் ஆகும்’’ என்று சிரித்தார் சாக்ஷி அகர்வால்.