தீரா காதல் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடித்த தீரா காதல் படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கல்லூரி காலத்தில் காதலித்துப் பிரிந்த ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இருவருக்கும் தங்களின் வாழ்க்கைத் துணையிடம் சில சிக்கல்கள் இருக்கின்றன. தங்கள் கவலைகளை மறந்து சில நாட்கள் ஒன்றாக சுற்றும் அவர்கள் சென்னைக்கு திரும்புகிறார்கள். திரும்பி வரும்போது, ‘இனி நாம் சந்திக்க வேண்டாம்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறுகிறார் ஜெய். ஆனால் சென்னைக்குத் திரும்பியதும் கணவருடன் பிரச்சினை ஏற்பட அவரைப் பிரிகிறார் ஐஸ்வர்யா.
தன்னைப் போலவே ஜெய்யும் மனைவியை விட்டு வரவேண்டும் என்று வற்புறுத்துகிறார். அவர் மறுத்தாலும், விடாமல் துரத்துகிறார். ஜெய்யின் வீட்டுக்கு எதிரிலேயே குடிவந்து அவரைத் தொந்தரவு செய்கிறார், அவரால் ஜெய்யின் குடும்ப வாழ்க்கை என்ன ஆனது? ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து ஜெய் மீண்டாரா? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
ஆரம்பத்தில் காதல் கதையாக தொடங்கி, பின்னர் த்ரில்லர் படம்போல் விரிகிறது தீராக்காதல், காதல், த்ரில்லர் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் ( Kerala Crime Files – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மலையாளத்தில் வெளியாகும் முதல் வெப் சீரிஸ் என்ற அடையாளத்துடன் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’. முதல் வெப் சீரிஸிலேயே சிக்சர் அடித்திருக்கிறார்கள் சேட்டன்கள்.
ஓட்டல் ஆறையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலையாகிக் கிடக்கிறார். போலீஸின் விசாரணையில் அவர் ஒரு விலைமாது என்று தெரியவருகிறது. ஆனால் கொலையாளியின் அடையாளம் ஏதும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கொலையாளியை போலீஸார் நெருங்கும்போதெல்லாம் அவன் தப்பித்துச் செல்கிறான். இறுதியில் போலீஸார் அவனை எப்படி பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.
க்ரைம் திரில்லர் கதையுடன், போலீஸாரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் விசாரணையை அடிப்படையாகக் கொண்ட கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் சீரிஸ் இது.
ஜீ கர்தா (Jee Karda – இந்தி வெப் சீரிஸ்) – அமேசான் ப்ரைம்
பள்ளிக்காலம் முதல் ஒன்றாக இருக்கும் 7 நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான கதைதான் ஜீ கர்தா.
இயக்குநர் அருணிமா ஷர்மா, ஹுசைன் தலால் மற்றும் அப்பாஸ் தலால் உடன் இணைந்து எழுதி இயக்கியிருக்கும் இந்த கதையில் தமன்னா, ஆஷிம் குலாட்டி, சுகைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மும்பையில் உள்ள இளைய தலைமுறைகளின் கலாசார உறவுகளை இந்த வெப் சீரிஸ் பிரதிபலிக்கிறது.
2கே கிட்ஸ்களுக்கு பிடித்தவாறு இந்த தொடரை எடுத்திருக்கிறார்கள்.
காசேதான் கடவுளடா (தமிழ்) – சன் நெக்ஸ்ட்
தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஸ்ரீகாந்த், லட்சுமி, மனோரமா என பலர் நடிப்பில் புகழ்பெற்ற படத்தை இப்போது மீண்டும் அதே பெயரில் எடுத்திருக்கிறார்கள்.
அன்று மனோரமா நடித்த பாத்திரத்தில் ஊர்வசியும், தேங்காய் சீனிவாசன் நடித்த பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்க, மிர்ச்சி சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் படம்தான் முந்தைய படத்தைப் போல் சிரிப்பை வரவழைக்காமல் போய்விட்டது.