சுல்தான் ஆஃப் டெல்லி ( Sultan of Delhi – இந்தி வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதைகள்தான் இப்போது வெப் சீரிஸ்களுக்கு தீனி போட்டு வருகின்றன. அந்த வரிசையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் வெப் சீரிஸ்தான் சுல்தான் ஆஃப் டெல்லி.
சிறுவயதில் லாகூரில் வசதியான ஒரு வீட்டின் வாரிசாக ஆடம்பர வாழ்க்கையை நடத்திவந்த அர்ஜுன் பாட்டியா, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது எல்லாவற்றையும் இழக்கிறான். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில், பைத்தியம் பிடித்த தந்தையுடன் டெல்லிக்கு வந்து சேருகிறான் அர்ஜுன் பாட்டியா. சிறுவயதிலேயே எல்லாவற்றையும் இழந்த அவனுக்கு ஒரே மூலதனம் அவனது தைரியம்தான். அந்த தைரியத்தை வைத்து அவன் எப்படி டெல்லி நிழல் உலகின் தாதாவாக உருவெடுத்தான் என்பதே ‘சுல்தான் ஆஃப் டெல்லி’ தொடரின் கதை.
நன்றாக சென்றுகொண்டிருக்கும் கதையில் ஆங்காங்கே வலிய திணிக்கப்படும் ஆபாச காட்சிகள் மட்டும் இல்லாமல் இருந்தால், இந்த தொடர் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஹர்காரா (தமிழ்) – அமேசான் ப்ரைம்
எந்த வசதியும் இல்லாத மலைக்கிராமத்தில் போஸ்ட்மேனாக வேலை பார்க்கிறார் காளி வெங்கட். நகரத்தில் வாழ்ந்த அவருக்கு அந்த மலைக்கிராமத்தில் போஸ்ட்மேனாக இருப்பது பிடிக்கவில்லை. பணி மாறுதல் கிடைக்காத நிலையில், அந்த ஊருக்கு தபால் நிலையம் வேண்டாம் என்று அங்குள்ள மக்களே மனு போடுவதுபோல் ஒரு போலியான மனுவை தயாரிக்கிறார். அந்த ஊர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அந்த மனுவில் கையெழுத்து வாங்குகிறார்.
இந்த சூழலில் அந்த ஊர் மக்கள் கடவுளாக வழிபடும், அந்த ஊரின் முதல் போஸ்ட்மேனான மாதேஸ்வரனின் கதையை தெரிந்துகொள்கிறார். அந்த கதை, அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதைகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் அருண் கேஸ்ட்ரோ.
காசர்கோல்ட் (Kasargold – மலையாளம்) – நெட்பிளிக்ஸ்
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய விநாகன் நடித்துள்ள லேட்டஸ்ட் மலையாள திரைப்படம் காசர் கோல்ட். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை 2 இளைஞர்கள் கைப்பற்றுகிறார்கள். அந்த தங்கத்தை மீட்க, அதைக் கடத்திவரும் கும்பலின் தலைவன் ஒரு பக்கமும், போலீஸ் அதிகாரி மறுபக்கமும் முயல்கிறார்கள். அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி அந்த இளைஞர்களால் தங்கத்தை விற்று காசாக்க முடிந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.
ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக செல்கிறது காசர்கோல்ட்.
மால் (தமிழ்) – ஆஹா
அறிமுக இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் படம் மால்.
சிலை கடத்தலில் கை தேர்ந்தவரான சாய் கார்த்திக், தன்னிடம் வேலை பார்க்கும் ஜெய்யிடம் காதலைச் சொல்ல முயற்சிக்கும் விஜே பப்பு, வேலையை காப்பாற்ற போராடும் போலீஸ்கார்ரான கஜராஜ், சில்லறை திருட்டுகளைச் செய்யும் 2 இளைஞர்கள் ஆகியோரின் கதைகளை இணைக்கும் படமாக மால் இருக்கிறது.