தமிழில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட, குழந்தைகள் நடித்த படங்கள் வருவது அரிது. அந்த குறையை போக்க வருகிறது ‘நாங்கள்’. அவினாஷ் பிரகாஷ் இயக்கி உள்ளார். இது எந்த மாதிரியான கதை. குழந்தைகளின் அந்த மனநிலையை பேசுகிறது என்று இயக்குனரிடம் கேட்டோம். அவர் கூறியது:
‘‘அண்ணன், தம்பிகளான 3 குழந்தைகளின் மனநிலையை நாங்கள் பேசுகிறது. பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில், அவர்கள் ஊட்டியில் அப்பாவுடன் வசிக்கிறார்கள். ஒரு பள்ளியை நடத்தும் அப்பாவே மிகவும் கண்டிப்பானவர். அவர் பண நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார். தினமும் அவரிடம் திட்டு, அடி வாங்குகிறார்கள். அப்போது என்ன நடந்தது. அந்த குடும்பம் ஒன்றிணைந்ததா? அப்பாவை குழந்தைகள் புரிந்துகொண்டார்களா? குழந்தைகளை கஷ்டத்தை அப்பா உணர்ந்து கொண்டாரா? அந்த குடும்பம் ஊட்டியை விட்டு நகர்ந்ததா? என்பதை படம் பேசுகிறது. 1992ல் கதை நடக்கிறது. மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக நடிக்க, அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா எஸ் ஆகியோர் அவர்களின் பெற்றோராக நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்துள்ளது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த வேத் ஷங்கர் சுகவனம் ‘நாங்கள்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த துபாயை சேர்ந்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ராவையும் அவர் இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே என்ற பாடல் படத்தின் ஹைலைட். ஊட்டியில் கதை நடந்தாலும், லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டுள்ளது
நான் பல விளம்பர படங்களை இயக்கிவிட்டு, முதன்முறையாக இதை இயக்கி உள்ளேன். ஜி.வி.எஸ். ராஜூ தயாரித்துள்ளார். 3 குழந்தைகளின் உணர்ச்சி பூர்வமாக நடிப்பு, நாய் மீதான அன்பு, தந்தையின் கண்டிப்புக்கு பயந்து வீட்டு வேலை செய்வது, படிப்பது, தாயின் அன்புக்காக ஏங்குவது ஆகியவை படத்தின் ஹைலைட். அந்த நாய் கூட அருமையாக நடித்துள்ளது. ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் நாங்கள் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ரிலீஸ்.