இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் இந்த பரபரப்பு பட்டாசுக்கான திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார்.
கோலி மீண்டும் கேப்டனாவார் என்ற விவாதம் எழுந்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் ரோஹித் சர்மாவின் ஃபார்மும், கேப்டனாக அவரது செயல்பாடும்.
விராட் கோலியிடம் இருந்து சுமார் ஓராண்டுக்கு முன்புதான் கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார் ரோஹித் சர்மா. அதற்கு அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் ஒரு காரணமாக இருந்தார். கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட உரசலைத் தொடர்ந்து முதலில் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து கோலி விலக, அவருக்கு பதில் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரோஹித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டபோது அவர் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஐபிஎல் உள்ளிட்ட எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் வெல்லாத கேப்டனாக கோலி இருக்க, 5 முறை மும்பைக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் என்பதால் ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்த்து, மும்பைக்காக ஐபிஎல்லில் வென்றதைப் போலவே, இந்தியாவுக்காக உலகக் கோப்பையை ரோஹித் சர்மா வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்த நம்பிக்கையை தகர்த்தார் ரோஹித் சர்மா, இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்ஷிப்பை வெல்லாததுடன் ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் சாதிக்காதது அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
டி20-யில் கோட்டைவிட்ட ரோஹித் சர்மா, கடந்த மாதம் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலாவது கோப்பையை வென்று தருவார் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் இதிலும் ரோஹித் சர்மா ஏமாற்றினார். டாஸில் வென்ற ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தது. அத்துடன் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு காரணமாக இருந்த அஸ்வினை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சேர்க்காததும் விமர்சனத்துக்கு உள்ளானது. இப்போட்டியில் ரோஹித்தின் தவறுகளால் இந்தியா தோற்க, சுனில் கவாஸ்கர் போன்ற இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரோஹித் சர்மா கேப்டன் பதவிக்கு லாயக்கற்றவர் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
ரோஹித்துக்கு அடுத்த மாற்றாக தேர்வாளர்கள் கருதுவது ஹர்த்திக் பாண்டியாவைத்தான். அவரைப் பொறுத்தவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு சரியான தேர்வாக இருப்பார். ஆனால் டெஸ்ட் போட்டியில் ஆடும் அளவுக்கு அவருக்கு உடல் தகுதி இல்லை. அதனால் ரிஷப் பந்த்தான் அடுத்த தேர்வு. ஆனால் அவர் இப்போது காயமடைந்து இருப்பதால், அவர் மீண்டு வரும் வரை புதிய கேப்டனை தேட வேண்டிய கட்டாயத்தில் தேர்வாளர்கள் உள்ளனர்.
இந்த சூழலில்தான் விராட் கோலியை ஏன் மீண்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் எம்.எஸ்.கே பிரசாத்.
”இப்போதைய சூழலில் அடுத்த 2 ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு நிலையான ஒரு கேப்டன் வேண்டும். இந்த பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்க, தேர்வுக்குழு திட்டமிட்டு இருந்தால், அடுத்த கேப்டனாக விராட் கோலியை பரிசீலிக்கலாம். அணியில் இருந்து சில காலத்துக்கு முன் நீக்கப்பட்ட ரஹானேவை இப்போது துணை கேப்டனாக நியமித்து இருக்கும்போது, விராட் கோலியை மீண்டும் ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது” என்பது அவரது கேள்வியாக இருக்கிறது.