No menu items!

விஜய் மார்கெட்டை காலி பண்ணிய சன் டிவி

விஜய் மார்கெட்டை காலி பண்ணிய சன் டிவி

சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்துகளையும், அறிக்கைகளையும் வெளியிடும் சைபர் அரசியலில் நுழைந்திருக்கும் விஜய்க்கு இப்பொழுதே சோதனைகள் ஆரம்பித்துவிட்டன.

இன்று தமிழ் சினிமாவில் விஜய்க்கு இருக்கும் பெரும் மதிப்பிற்கு காரணம், வியாபாரம். இவருடையப் படங்களுக்கு மற்ற நடிகர்களைவிட வரவேற்பும் அதிகம். வியாபாரம் ஆகும் தொகையும் அதிகம். வசூலும் அதிகம். இதனால்தான் இவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கொளுத்திப் போட்டார்கள்.
இதனால் இவர் இப்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் ‘க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்பு நிலவுகிறது. ’வெள்ளிவிழா நாயகன்’ மோகன், ’டாப் ஸ்டார்’ பிரஷாந்த், ’நடனப்புயல்’ பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், ப்ரேம்ஜி, ஆரவிந்த் ஆகாஷ், ஸ்நேகா, லைலா, மீனாட்சி செளத்ரி என பெரும் நட்சத்திர[ப் பட்டாளமே ‘கோட்’ படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதனால், ‘கோட்’ படம் அதன் வியாபாரத்திலும், வசூலிலும் இதுவரை இல்லாத சாதனைகளை தமிழ்சினிமாவில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு ஒரு எதிர்பாராத சறுக்கலைக் கொடுத்திருக்கிறது சன் டிவி.

அது என்ன?

’கோட்’ பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதாவது நட்சத்திரங்கள் பேசும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலைகள் அதிகமிருப்பதால், தேவைப்படும் சில காட்சிகளுக்கான பேட்ச் வேலைகள் மட்டும் கொஞ்சம் இருக்கின்றனவாம்.

இதனால் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. செப்டெம்பர் 15-ம் தேதி ‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டதால், பட வியாபாரப் பணிகளில் ஏஜிஎஸ் இறங்கியது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை, முதலில் சன் டிவி வாங்க பேச்சுவார்த்தை நடந்தது.

விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து இருந்தன. அதனால் சன் டிவிக்கு தொலைக்காட்சி உரிமையை விற்பதில் தடை எதுவும் இருக்கவில்லை. ஆனால் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக களமிறங்க இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். மேலும் மத்திய அரசில் மீண்டும் பாஜக அமர்ந்திருப்பதால், விஜய் மீண்டும் சன் பிக்சர்ஸுக்கு படம் பண்ணுவாரா என்ற சந்தேகமும் கிளம்பியிருக்கிறது.

இப்படியொரு சூழலில்தான் ‘கோட்’ பட தொலைக்காட்சி உரிமை ஸீ தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.

’கோட்’ படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட முக்கிய மொழிகளின் தொலைக்காட்சி உரிமையையும் ஸீ தொலைக்காட்சிக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் டிவி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 50 கோடிக்கு பேசி முடிவு செய்திருந்தது. சன் டிவி தொலைக்காட்சி உரிமையுடன் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றை ஒளிபரப்பும் உரிமையை சன் டிவிக்கே கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.

இதை ஏஜிஎஸ் நிறுவனம் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். அப்படி செய்வதென்றால், பாடல்களுக்கான உரிமையை வாங்கிய நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று, சன் டிவிக்கு அதன் உரிமையை வழங்கவேண்டும். இதனால் பாடல் உரிமைய வாங்கிய நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து இந்த பாடல்கள் மூலம் கிடைக்க இருந்த வருவாயை ஈடு செய்ய வேண்டும்.

இதனால் பாடல் உரிமையை வாங்கிய நிறுவனத்திடம் ஏஜிஎஸ் தரப்பில் பேசியிருக்கிறார்கள். சன் டிவி கேட்பதால் எங்களுக்கும் ஓகேதான். ஆனால் அதற்கு ஈடாக ஒன்பது கோடி கொடுத்தால், எங்களுக்கும் பாதிப்பு எதுவும் இருக்காது என்று கூறியிருக்கிறார்கள். அதாவது ஏஜிஎஸ் உடன் போட்ட ஒப்பந்த தொகையில், ஒன்பது கோடியைக் கழித்து மீதியைதான் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். இதையும் ஏஜிஎஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். இருபக்கமும் இடி வாங்க என்ன செய்வதென்று தெரியாமல் ஏஜிஎஸ் தரப்பில் குழப்பிபோய்விட்டார்களாம்.

இதனால் சன் டிவியை பகைத்து கொள்ள வேண்டாமென்று, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வேறு ஏதாவது தொலைக்காட்சி விற்றுவிடலாம் என ஏஜிஎஸ் நிறுவனத்தின் இளைய முதலாளி சொன்னாராம்.
அந்த அழகிய முதலாளியின் யோசனையின் படியே, இப்போது கோட் பட தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸீ தொலைக்காட்சிக்கு விற்று இருக்கிறார்கள். முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எதுவுமில்லாமல் தவித்து கொண்டிருந்த ஸீ, கோட் பட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மும்முரம் காட்டவே, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 70 கோடிக்கு விற்றுவிட்டார்களாம். இதனால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 20 கோடி லாபம் என்கிறார்கள்.

இந்த தொகையை மூன்று தவணைகளில் கொடுக்கவும் ஸீ தொலைக்காட்சி பேசி முடிவு செய்திருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை வெறும் 70 கோடி என்பதால், வழக்கமாக விஜய் பட த்திற்கு கிடைக்கும் தொகையை விட மிகக்குறைவு. அப்படியென்றால் சன் டிவி கூறிய 50 கோடி எந்தளவிற்கு குறைவு என்பதை மதிப்பிட்டு கொள்ளுங்கள் என்கிறது தமிழ் சினிமா வியாபார வட்டாரம்.

விஜய் பட வியாபாரத்தை புரட்டிப் போடும் நிபந்தனைகள், உரிமை விலை என விஜய்க்கு இப்பொழுதே குடைச்சல்கள் ஆரம்பமாகிவிட்டன. இது இனியும் தொடரும் என்பதை முன்பே அறிந்ததால்தான் சினிமாவுக்கு முழுக்கு என்று கூறியிருக்கிறார் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...