தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
வேம்பு கிராமத்தில் வளர்ந்த பெண், தன் தந்தையின் எண்ணப்படி சிலம்பம் கற்று நல்ல தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறார்.சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலையை பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும், படிப்பறிவும் முக்கியம் என்றும் தந்தையின் அறிவுரையை கடைப்பிடித்து அந்த கிராமத்திலேயே முன் மாதிரியாக தைரியமான பெண்ணாக வளர்கிறார்.
அத்தை மகன் புகைப்படக்கலைஞராக இருக்கும் சக்திவேல்(ஹரி கிருஷ்ணன்) வேம்பு மீது காதல் இருந்தாலும் வேம்புவின் சம்மதத்திற்காக பொறுமையாக காத்திருக்கிறார். முதலில் படித்து முடித்து விட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே வேம்புவின் ஆசை.
இதனிடையே வேம்புவின் தந்தையிடம் செங்கல் சூலை முதலாளி மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட அறிவுறுத்தி பணமும் கொடுக்கிறார்.தந்தையின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காத வேம்பு முதலில் தயங்கினாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தந்தையும் சக்திவேலுக்கும் வேம்புவிற்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார். புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கும் நேரத்தில் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு பார்வை திறனை இழக்கிறார்.
இதனால் அதிர்ச்சியாகும் வேம்பு, மருத்துவரிடம் அழைத்துச் செல்ல சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்தால் படிப்படியாக குணப்படுத்திவிடலாம் என்கிறார். அன்றாட செலவுகளுக்கே திண்டாடும் நிலையில், புகைப்பட கலைஞராக களமிறங்கி கணவரின் ஒத்துழைப்போடு சம்பாதிக்க தொடங்குகிறார். தற்காப்பிற்காக கற்ற சிலம்பத்தை கிராமத்திற்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கற்றும் கொடுக்கிறார்.
ஷீலாவுக்கு ஏற்ற பாத்திரம் அதனால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். துணிச்சலோடு ஆண்களை எதிர்ப்பதிலும், சிலம்பம் சுற்றுவதிலும் கணவனுக்கு துயரம் நேர்ந்தபோதும் தளராமல் முயற்சிப்பதிலும் உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறார்.
கணவனாக வரும் ஹரி கிருஷ்ணன் மண்ணின் மகனாகவே மாறிப்போயிருக்கிறார். நல்ல நடிப்பு. சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது. அதை இயக்குனர் கவனிக்காமல் தவறவிட்டிருக்கிறார். ஷீலான தந்தையாக தியேட்டர் லேப் ஜெயராவ் மனதில் நிற்கிறார்.
ஓளிப்பதிவாளர் ஏ.குமரன் இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி இசை இருவரும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
கதையாக படித்தால் அழகாக இருந்திருக்கும். அதை காட்சிப்படுத்தும் போது சுவாரஸ்யம் குறைந்து விட்டது. இதனால் பல அமெச்சூர் தனமாக இருக்கிறது.
பெண் விடுதலை பற்றி பேசும் படத்தில் மஞ்சள் நீராட்டு விழா காட்டுவது என்ன கதையாடல் என்று தெரியவில்லை. பிற்போக்குதனமான காட்சிகள். இதையெல்லாம் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு கிராமத்து வாழ்க்கையை காட்டிருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு