தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய – சீன ராணுவம் மீண்டும் மோதல்: 3 நாட்களுக்குப் பின் வெளியான தகவல்
இந்திய – சீன ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், மூன்று நாட்கள் முன்பு மீண்டும் மோதிக் கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தச் சண்டை நடந்துள்ளது. “சீன ராணுவத்தினர் விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அத்துமீறி வந்ததால் இந்த மோதல் உருவானது. இதே பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் தைரியத்துடன் சீன ராணுவத்தை எதிர்த்தனர். இந்த மோதலில் பெரிய அளவில் சேதம் இல்லை. என்றாலும், இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்திய வீரர்கள் குவாஹத்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் சில வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான பதற்றங்களுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
‘மோடியை கொல்லுங்கள்’ என பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கைது
மத்திய பிரதேச மாநிலத்தில் திக்விஜய் சிங் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவி வகித்தவர் ராஜா பட்டேரியா. இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார். இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசியபோது, “மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள்” என்று கூறினார். இதையொட்டிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதுதொடர்பாக ராஜா பட்டேரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ராஜா பட்டேரியாவை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக ஆளும் கட்சி எம்.பி.க்கள் போர்க்கொடி
இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார். இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 40 எம்.பி.க்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். இதுதொடர்பாக ‘கன்சர்வேடிவ் முன்னேற்றம்’ என்ற குழுவை சேர்ந்த அந்த எம்.பி.க்கள், பிரதமர் ரிஷி சுனக்குக்கு எழுதியுள்ள எச்சரிக்கை கடிதத்தில், “இங்கிலாந்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரசுப் பணத்தை மிச்சப்படுத்தலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே ஆளும் கட்சிக்குள் புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அவரது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்.பி.க்கள் தற்போது எழுதியுள்ள கடிதம் அந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.