மகாத்மா என்றால் காந்தி என்பதுபோல், தமிழ்த் தாத்தா என்றால் உ.வே. சாமிநாத அய்யர் தான். ஆனால், சமூக வலைதளங்களில் உவேசா தமிழ்த் தாத்தா அல்ல, ஆறுமுக நாவலர்தான் தமிழ்த் தாத்தா என்ற விமர்சனத்தை சிலர் எழுப்பியுள்ளார்கள். உண்மையில் யார் தான் தமிழ்த் தாத்தா?
உவேசா தமிழ்த் தாத்தா ஆனது எப்படி?
பழங்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளிலேயே இருந்தன. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு ஏட்டில் இருந்த இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றது தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமையம் ஆகும். ஏட்டிலிருந்து அச்சுப் பதிப்பது அப்படி ஒன்றும் எளிய செயல் இல்லை. ஏட்டில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு எந்தப் பிழையும் இல்லாமல் அச்சில் பதிக்கும் அரிய பணியை மேற்கொண்ட பெரியவர்களாலேயே இன்றைக்குத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. இத்தகைய அரிய பணியை செய்தவர்களும் முக்கியமானவர் உவேசா.
மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மொழி என்று பெருமையாக தமிழ் இன்று சொல்லப்பட காரணமான சங்க கால நூல்கள் முதலில் ஓலைச் சுவடிகளாகத்தான் இருந்தன. ஓலைச்சுவடிகளின் காலகட்டம் முடியும் தருவாயில் அழிந்துக் கொண்டுயிருந்த சங்க கால நூல்களை, பல்வேறு ஊர்களுக்கும் அலைந்து தேடித்தேடி கண்டறிந்து பதிப்பித்தவர் தமிழறிஞர் உ.வே. சாமிநாத அய்யர். இதனால்தான் அவரை தமிழ் தாத்தா என தமிழ் அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
அக்காலத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் தமிழ் மொழி முன் இந்த இரண்டு மொழிகளும் கும்பிடு போட்டு காலில் விழும் அளவுக்கு தொன்மை வாய்ந்த சிறப்பு மொழி என்பாராம் உ.வே.சா. ஆங்கிலம், சமஸ்கிருதத்தைவிட தமிழ் ஏன் பெருமையானது என காட்டத்தான் சங்க இலக்கிய நூல்களை தேடிப்பிடித்து புதுப்பிக்க முடிவு செய்தாராம். அப்படித்தான் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, நெருநானுற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அதை பதிப்பித்து நமக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த நூல்களை பதிப்பித்ததுடன் பல நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார் உவேசா. இன்றளவும் சங்க இலக்கிய நூல்களுக்கான சிறந்த உரை நூலாக உ.வே.சா எழுதிய மணிமேகலை உரையையே குறிப்பிடுகின்றனர் தமிழறிஞர்கள்.
உ.வே.சா வின் தமிழன் பணியை பாராட்டி 1931 மார்ச் 21ந் தேதி ‘மகாமகோபத்தியார்’ என்கிற பட்டம் வழங்கி கவுரவித்தது சென்னை பல்கலைக்கழகம். அன்று சங்ககால தமிழும், பிற்கால தமிழும் என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் பேசிய பேச்சு பின்னர் நூலாக வெளிவந்தது. அந்த அளவுக்கு பேச்சுக்கலையில் சிறந்தவர், பேசுவதை நகைச்சுவை இழையோட பேசுவார்.
1940 ஏப்ரல் 28ஆம் தேதி தனது 87வது வயதில் உவேசா மறைந்தார். உத்தமநாதபுரத்தில் உ.வே.சா பிறந்த இல்லம் அரசால் நினைவில்லாமாக மாற்றப்பட்டது. 1942இல் சென்னையில் அவர் பெயரில் அமைக்கப்பட்ட நூல் நிலையம் இன்றளவும் செயல்படுகிறது.
ஆறுமுக நாவலர் யார்?
தமிழ்த் தாத்தா என்றால் உவேசா போல் நாவலர் என்றால் ஆறுமுக நாவலர்தான். அக்காலத்தில் ஏட்டில் இருந்த தமிழ் இலக்கியங்களை புரிந்து பிழை இல்லாமல் அச்சில் பதிக்கும் அரிய பணியை மேற்கொண்ட முன்னோடிகளுள் முதன்மையானவர் ஆறுமுகநாவலர். ஆம், உவேசாவுக்கும் முந்தையவர்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலரின் இயற்பெயர் இயற்பெயர் ஆறுமுகம் மட்டும்தான். எந்த இலக்கியத்தைப் பற்றியும் மடை திறந்த வெள்ளம்போல் கருத்துகளைப் பொழிந்து தள்ளும் சொல்லாற்றல் கொண்டவர் என்பதால் இவரது சொல்லாற்றாலைப் பாராட்டித் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு ‘நாவலர்’ என்னும் பட்டத்தை வழங்கியது. அதன்பின் இவர் ஆறுமுக நாவலர் என்றே அழைக்கப்பட்டார்.
இலங்கையில் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்நிலையில், இவருடைய தமிழறிவையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு மகிழ்ந்த கல்லூரி அதிபர் பெர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் தமது பணிக்குத் துணையாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார். தமிழும் சைவமும் தமது இரு கண்களாகப் போற்றிய ஆறுமுக நாவலர் தமிழில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியாற்றியது அவருடைய பொதுநோக்கிற்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டு.
இந்நிலையில், ஏட்டுச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்து பாடுபட்டார். இதற்காகச் சொந்தமாக அச்சு இயந்திரம் வாங்கி வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் அச்சுக்கூடம் நடத்தினார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டார்.
இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்துள்ளார் ஆறுமுக நாவலர். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை முதலான இலக்கியங்களுக்கு இவருடைய உரை எளிமையாக மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்தது. எனவே, இவரை ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று அறிஞர்கள் பாராட்டினர். ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்றார் மு. வரதராசனார் போற்றியுள்ளார்.
சரி, ஆறுமுக நாவலர் ‘தமிழின் தந்தை’ என்றால், அவருக்குப் பிறகு வந்த உவேசா ‘தமிழ்த் தாத்தா’ ஆனது எப்படி?
ஆறுமுக நாவலர் ஏன் தமிழ்த் தாத்தா இல்லை?
இது தொடர்பாக தமிழக வரலாற்று ஆய்வாளர் பொ. வேல்சாமி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், ‘1860இல் உ.வே. சாவுக்கு 6 வயது இருக்கும்போது. சைவ வெள்ளாரான ஆறுமுக நாவலருக்கு ‘தமிழ்த் தாத்தா’ ஆகும் அற்புதமான வாய்ப்புக் கிடைத்தது. 1860இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவருடைய தந்தையார் பொன்னுசாமி தேவரின் ஆதரவில் ஆறுமுகநாவலர் வெளியிட்ட ‘திருக்கோவையார்’ என்ற நூலில் ஒரு ஆச்சரியமான விளம்பரம் வெளியாகி உள்ளது. அந்த விளம்பரத்தில் ஆறுமுகநாவலர் தொல்காப்பிய உரைகள், சீவகசிந்தாமணி, மணிமேகலை, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, இன்று தமிழ்ச் சமூகம் இழந்துவிட்ட அரியநூலாகிய வளையாபதி உள்பட, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல் போன்ற சங்க நூல்களை வெளியிடப்போவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் சங்க காலத்து நூல்களான இவைகளைப் பற்றி பெரும்பாலோருக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.வே.சாவுக்கு ஆறு வயதாகும் போது ஆறுமுகநாவலரால் விளம்பரம் செய்யப்பட்ட அந்த நூல்களை அவர் வெளியிட்டு இருந்தால் இன்று அவர்தான் ‘தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்டிருப்பார். ஆனால், ‘இலக்கணக் கொத்து’ என்ற நூலை எழுதிய சுவாமி தேசிகர் சங்க இலக்கியங்களை தரமான தமிழ் நூல்களாகக் கருதாமல் சைவ நூல்களை மட்டும் தரமான தமிழ் நூல்களாகக் கருதியதைப் போன்று, ஆறுமுகநாவலரும் அவரைச் சார்ந்தவர்களும் அந்தக் காலத்தில் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் ‘மதம்’ சாராத இந்த சங்க நூல்களை வெளியிட போவதாக அறிவித்தும் வெளியிடாமல் புறக்கணித்து விட்டனர்.
இதே போன்ற ஒரு புறக்கணிப்பு மனோபாவத்தை சைவத்தை முதன்மையாகக் கருதும் திருவாவடுதுறை ஆதீனத்தால் உருவாக்கப்பட்ட மாணவரான உ.வே. சாமிநாத அய்யரும் கொண்டிருந்து சங்க இலக்கியங்களை வெளியிடாமல் இருந்திருந்தால், சங்க இலக்கியங்களைப் பற்றியும் அதனால் அறியப்பட்ட தமிழின் வரலாறு சமஸ்கிருதத்திற்கு ஈடானது என்றும் அதற்கும் மேலானதும் என்றும் இன்று நாம் கொண்டாட முடியுமா? இத்தகைய பழமையான ஒரு அரிய பாரம்பரியத்தை நமக்கு உருவாக்கிக் கொடுத்த உ.வே. சாமிநாத அய்யரை ‘தமிழ்த் தாத்தா’ என்று நாம் ஏன் சொல்லக்கூடாது?
உ.வே. சாமிநாத அய்யரை விமர்சிக்கவே கூடாதா என்பதல்ல இதன் பொருள். அவர் செய்த பணிகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து, இவரைப் போன்ற மற்றவர்களும் தமிழுக்கான இத்தகைய பணிகளை செய்திருந்தால் அவரகளுடன் இவரை ஒப்பிட்டு நிறை குறைகளை விமர்சிக்கலாம். அதைவிட்டுவிட்டு அவர் சாதி என்ன? மதம் என்ன? என்று அவதூறுகள் பேசுவது விமர்சனம் ஆகாது” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஏட்டுச் சுவடிகளிலிருந்து பழந்தமிழ் நூல்களை மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள் ஆறுமுகநாவலர், உ.வே. சாமிநாதையர் இருவர் மட்டுமல்ல சி.வை. தாமோதரம் பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை எனப் பெரிய பட்டியலே உள்ளது. “தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே. சாமிநாதையர்.” என்று திரு.வி.க. கூறியுள்ளது தமிழ்ப்பதிப்பு வரலாற்றையே சுருக்கமாகக் காட்டும்.