இந்தியா முழுவதும் குடும்பங்களின் மாதாந்திர செலவினங்கள் குறித்த விபரங்களை மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மாதாந்திர குடும்ப செலவினம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.
குடும்பச் செலவுக் கணக்கெடுப்பு
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பு (HCES – Household Consumption Expenditure Survey), மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய புள்ளியல் அலுவலகத்தால் (NSSO – National Sample Survey Office) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முக்கியமான பொருளாதார குறியீடுகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வறுமை நிலைகள் மற்றும் நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதில் இந்த தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக, 2011-12ஆம் ஆண்டில் தனி குடும்பத்தின் மாதாந்திர சராசரி நுகர்வுச் செலவு விபரங்கள் வெளியிடப்பட்டது. அடுத்த கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டில் வெளியாகியிருக்க வேண்டும். கணக்கெடுப்பு நடத்தவும் பட்டது. ஆனால், ஆய்வு தரவுகளின் தரத்தில் சிக்கல் இருப்பதாக கூறி முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி வசூல் அமல்படுத்தப்பட்ட பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அது என்பதால் வெளியிடப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய புள்ளியல் அலுவலகம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பை நடத்தியது. இந்தியா முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கிராமப்புறம் – நகர்புறம் வாரியாகவும் மற்றும் சமூகம் – பொருளாதாரம் வாரியாகவும் குடும்ப மாதாந்திர நுகர்வு செலவின விபரங்களை கண்டறியும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் 8,723 கிராமங்களில் வசிக்கும் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 14 குடும்பங்களும்; 6,114 நகர்புறப் பகுதிகளில் வசிக்கும் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 732 குடும்பங்களும் என மொத்தம் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 746 குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை தேசிய புள்ளியல் அலுவலகம் கடந்த 24-2-24 அன்று வெளியிட்டது.
இரண்டரை மடங்காக அதிகரித்த குடும்ப செலவு
இந்திய குடும்பங்களின் மாதாந்திர சராசரி நுகர்வு செலவின கணக்கெடுப்பு முடிவுகள் படி, நாட்டில் தனி குடும்பத்தின் மாதாந்திர செலவு கடந்த 10 அண்டுகளில் இரண்டரை (2.5) மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2011-12ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, மாதாந்திர குடும்ப செலவு நகர்புறங்களில் 2,630 ரூபாயாக இருந்தது; இது, 2022-23ஆம் ஆண்டில், 6,459 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் கடந்த 2011-12ஆம் ஆண்டில் 1,430 ரூபாயாக இருந்த இது 2022-23ஆம் ஆண்டில் 3,773 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நகர்புறம், கிராமப்புறம் இரண்டிலும் மாதாந்திர குடும்ப செலவு இரண்டரை (2.5) மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
பல்வேறு மாநில மக்களின் குடும்ப செலவினங்களை ஒப்பிட்டு பார்க்கையில், அதிக செலவினம் உள்ள மாநிலமாக சிக்கிம் உள்ளது. இங்கு நகர்புறங்களில் 12,105 ரூபாயும் கிராமப்புறங்களில் 7,731 ரூபாயும் செலவிடப்படுகிறது. குறைந்த செலவினம் உள்ள மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. இங்கு நகர்புறங்களில் 4,483 ரூபாயும் கிராமப்புறங்களில் 2,466 ரூபாயும் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் குடும்பங்களின் சராசரி மாதாந்திர செலவு 5,310 ரூபாயாகவும் நகர்புறங்களில் 7,630 ரூபாயாகவும் உள்ளது. ஆந்திராவில் முறையே ரூ.4,870 மற்றும் ரூ. 6,782 செலவிடப்படுகிறது.
பொருளாதார வகுப்புகள் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள விளிம்பு நிலை ஏழைக் குடும்பங்களின் மாதாந்திர செலவு 1,371 ரூபாயாகவும் நகர்புறங்களில் 2001 ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது. முதல்நிலை பணக்காரர்களின் மாதாந்திர செலவு கிராமப்புறங்களில் 10,501 ரூபாயாகவும் நகர்புறங்களில் 20,824 ரூபாயாகவும் உள்ளது.
சமூகம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், பழங்குடியினரின் மாதாந்திர குடும்ப செலவு கிராமப்புறங்களில் 3016 ரூபாயாகவும் நகர்புறங்களில் 5,414 ரூபாயாகவும் உள்ளது.
குடும்ப செலவில் உணவுக்கு எவ்வளவு?
குடும்ப செலவுகளில் உணவு செலவுகளை மட்டும் பிரித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உணவு செலவு மாதம் சராசரியாக கிராமப்புறங்களில் 1,750 ரூபாயாகவும் நகர்புறங்களில் 2,530 ரூபாயாகவும் உள்ளது. உணவு அல்லாத மற்ற செலவுகள் கிராமப்புறங்களில் 2,023 ரூபாயாகவும் நகர்புறங்களில் 3,929 ரூபாயாகவும் உள்ளது.
ஒரு குடும்பம் உணவுக்காக குறைவாகச் செலவழித்தால், மற்ற விஷயங்களுக்கு அதிக பணம் உள்ளது என்று அர்த்தம். அதாவது, நுகர்வோர் பொருட்கள், ஆடை, பாதணிகள், வாகனத்திற்கான பெட்ரோல் அல்லது டீசல் மற்றும் பொழுதுபோக்கு போன்றவை இந்த செலவில் அடங்கும்.
1999 – 2000 கணக்கெடுப்புக்கும் 2022-23 கணக்கெடுப்புக்கும் இடையில், நகர்ப்புறம் – கிராமப்புறம் இரண்டிலும் உணவுக்கான செலவினத்தின் பங்கு படிப்படியாகக் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 1999-2000ஆம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவில் குடும்பத்தின் மாதாந்திர மொத்த செலவில் உணவின் பங்கு 59.4 சதவீதமாக இருந்தது; இது 2011-12இல் 52.9% ஆக குறைந்தது. இப்போது (2022-23) 46.38 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவில், 1999-2000இல் மாதாந்திர குடும்ப செலவில் உணவின் பங்கு 48.06 சதவீதமாக இருந்தது; இப்போது (2022-23) 39.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உணவுக்கான செலவு, கிராமப்புற இந்தியாவில் மொத்த நுகர்வு செலவில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவும், நகர்ப்புற இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவும் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்தியர்கள் என்னன்ன சாப்பிடுகிறார்கள்?
1999-2000 கணக்கெடுப்பில் கிராமப்புற குடும்பங்களில் மொத்த நுகர்வு செலவில் அரிசி, கோதுமை உட்பட தானியங்கள் மீதான செலவு கிட்டத்தட்ட 22 சதவீதமாக இருந்தது; இது தற்போது 4.91 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களில் தானியங்கள் மீதான செலவு 12 சதவீதமாக இருந்தது; தற்போது 3.64 சதவீதமாக குறைந்துள்ளது.
அரிசி, கோதுமை உட்பட தானியங்கள் மீதான செலவு குறைந்துள்ள நிலையில் முட்டை, மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக மதிப்புள்ள/ ஊட்டச்சத்து பொருட்களுக்கான செலவு கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 1999-2000ஆம் ஆண்டில், கிராமப்புற குடும்பங்கள் மொத்த நுகர்வு செலவில் 11.21 சதவீதத்தை இந்த பொருட்களுக்காக செலவிட்டன; நகர்ப்புற குடும்பங்கள் 10.68 சதவீதத்தை செலவிட்டன. 2022-23இல், இது கிராமப்புற குடும்பங்களில் 14 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 11.17 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ஊட்டச் சத்துக்கான செலவு, நகர்ப்புற குடும்பங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செலவுகளில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தில் வாடகைக்கான செலவினத்தின் பங்கு முறையே 0.78 மற்றும் 6.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாழ்க்கைத் தரம் மோசமான வட இந்தியா
ஒரு குடும்பத்தின் சராசரி மாதாந்திர நுகர்வுச் செலவினங்கள் அடிப்படையில் அந்த குடும்பத்தின் பொருளாதார நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் கணிக்க முடியும். அந்த வகையில் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்ற இந்திய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை விட குறைவான வாழ்க்கைத் தரத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒட்டுமொத்தமாக நாட்டில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள் செழிப்பாக மாறி வருவதை இந்த கணக்கெடுப்பு காட்டுவதாகவும் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த கணக்கெடுப்பு தரவுகள், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் நுகர்வு உயர்வு என்பது சுமார் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதை காட்டுகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நுகர்வு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையிலான இடைவெளி கணிசமாக குறைந்து வருகிறது. 2011-12இல் 84 சதவீதமாக இருந்த இந்த இடைவெளி, 2022-23இல் 71 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே வேற்றுமை இடைவெளி 2004-05இல் 91 சதவீதமாக உச்சத்தில் இருந்தது. இதே நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வருவாய் மற்றும் நுகர்வு ஒரே மாதிரியாக மாறலாம்” எனவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.