தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
விஜய்க்கு தனிப் பாதை
விக்கிரவாஅண்டியில் தவெக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது. நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மழையால் புதிய சிக்கல்
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையால் தவெக மாநாட்டுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த மழையால் மழையால் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியிருக்கிறது. அதனால் அந்த இடத்தில் மண்ணை கொட்டி வருகின்றனர். அதேசமயம் வாகன பார்க்கிங்கிற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், இன்னும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் வானகங்களுக்கான பார்க்கிங் பணியை முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போலீஸ் நோட்டீஸ்
இது ஒருபுறமிருக்க, மாநாடு தொடர்பாக விளக்கம் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை. விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “மாநாட்டில் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், அதற்காக 50,000 இருக்கைகள் போடப்படும் என்று கூறியிருக்கிறீர்கள். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 28 ஏக்கர் நிலமும், கூடுதலாக 15 ஏக்கர் நிலமும், வட தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த தனியாக 40 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அதற்கான திட்ட வரைபடத்தை காவல்துறைக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
இது வடகிழக்குப் பருவமழை காலமாக இருப்பதால், வாகன நிறுத்துமிடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் எந்தவித சிரமமுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்ட வாரியாக மாநாட்டுக்கு வரும் கார், வேன், பஸ் போன்றவற்றின் விபரங்களையும் காவல்துறைக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.