தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று பாசமாக அழைக்கப்படும் பிரபல பாடகி எஸ். ஜானகி இன்று தனது 87வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகத்தில் அவரை அதிகம் பார்க்க முடியவில்லை. சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு வருவதை கூட குறைத்துவிட்டார். எங்கே இருக்கிறார் என்று இசைத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்
‘பாடகி எஸ்.ஜானகி இப்போது ஐதராபாத்தில் வசிக்கிறார். வயது மற்றும் சில காரணங்களால் அவர் வெளியிடங்களுக்கு வருவதை குறைத்துவிட்டார். கடந்த 60 ஆண்டுகளாக பாடி வருகிறார்.இதுவரை 17 மொழிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பாடல்களை பாடிவிட்டார். 4 தேசியவிருது, 32 மாநில விருது, நுாற்றுக்கணக்கான மற்ற விருதுகள் என பல சாதனைகளை பெற்றுள்ளார்.
சிங்கார வேலனே தேவா தொடங்கி, புத்தம் புது காலை, சின்ன தாய் அவள், காற்றில் எந்தன் கீதம், ஊரு சனம் தூங்கிருச்சு, நெஞ்சினிலே உட்பட நுாற்றுக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களை, இன்றும் முணுமுணுக்கும் பாடல்களை பாடியிருக்கிறார். அந்த காலத்தில் இந்தியில் அதிகம் பாடிய தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகிதான். குறிப்பாக, நடிகை ஸ்ரீதேவிக்கு 5 மொழிகளில் பாடிய பெருமைக்குரியவர் எஸ்.ஜானகி. 2018ம் ஆண்டுக்குபின் அவர் பாடுவதை நிறுத்திவிட்டார். அவ்வப்போது இசை கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். சென்னை வருவதையும் குறைத்துவிட்டார்’’ என்கிறார்கள்