திருப்பதி ப்ரதர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘உத்தம வில்லன்’ படம் மூலம் உண்டான நஷ்ட த்தை ஈடுகட்ட, வரிகள் உட்பட 30 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து தருகிறேன் என்று சொன்ன கமல், 9 ஆண்டுகளாக சொன்ன வார்த்தையைக் காப்பாற்றமல் போகவே அவர் மீது ரெட் கார்ட் போடுங்கள் என்று எதிர்ப்புக்குரல்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒலிக்க அரம்பித்து இருக்கின்றன.
இந்த பிரச்சினை போதாது என்று சிம்புவின் மீது இதே இழுத்தடிப்பு குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முன் வைத்திருக்கிறார். ‘வெந்து தணிந்தது காடு’ படமெடுக்கும் போதே, அடுத்தப் படமும் நாம் சேர்ந்து பண்ணலாம் என்று முடிவானதாகவும், சம்பளம் 9.5 கோடியாகவும், முன்பணமாக 4.5 கோடியில் ஒரு கோடியை கொடுத்திருப்பதாகவும் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்.
கமல் மற்றும் சிம்பு மீது ரெட் கார்ட் போடலாம் என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது ஒரு பக்கமிருக்க, கமல் மற்றும் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது.
படத்தின் ஷூட்டிங் பாதியளவிற்குதான் முடிந்திருக்கிறது. ஆனாலும் நட்சத்திர மதிப்பினாலும், இயக்குநருக்கு உள்ள மதிப்பினாலும் இப்போதே இதன் வியாபாரத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
‘தக் லைஃப்’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹோம் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள். வெளிநாட்டு விநியோக உரிமை மட்டும் சுமார் 63 கோடிக்கு விலைப் போயிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்தளவிற்கு பெரிய விலைக்குப் போன முதல் கோலிவுட் படம் என்ற பெருமையையும் ‘தக் லைஃப்’ பெற்றிருக்கிறது.
இந்த உற்சாகத்தில் இருந்த கமல், சிம்பு, மணி ரத்னம் ஆகியோருக்கு இப்போது இந்த ரெட் கார்ட் பஞ்சாயத்து பெரும் தலைவலியாக மாறியிருக்கிறதாம். ரெட் கார்ட் போடப்பட்டால், தக் லைஃப் படத்தின் லைஃப் காலியாகிவிடும் என்பதால், உஷாராக காய் நகர்த்தி வருகிறார்களாம்.
’கூலி’க்கு தயாராகும் ரஜினி
ரஜினிக்கு உடல்நல பிரச்சினைகள் எழுந்த பிறகு இப்பொழுதெல்லாம் தொடர்ந்து நாள்கணக்கில் நடிப்பதில்லை, அதேபோல் ஷூட்டிங்கில் மணிக்கணக்கில் நிற்பதில்லை. தேவையான ஒய்வு எடுத்து கொண்ட பிறகே ஒரு சில மணி நேரம் நடிக்கிறார்.
இதனால் அவரது உடல்நிலை குறித்த தகவல்களைப் பெற்ற பிறகு முன்பே திட்டமிட்ட ஷெட்யூல்களை கூட மறு உறுதி செய்து கொள்கிறார்கள்.
இப்போது ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ பட ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்து விட்டது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் ‘கூலி’ பட ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
ரஜினிக்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதால், மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க ரஜினி திட்டமிட்டு இருக்கிறார். இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதம் ஆறாம் தேதியில் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.
பொதுவாக பெரும்பாலான ரஜினி படங்களாக இருக்கட்டும், லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கட்டும் அதில் பெண் கதாபாத்திரங்களுக்கென பிரத்தியேகமான அம்சங்கள் அதிகமிருக்காது. இதை உடைக்கும் வகையில் இந்த முறை ரஜினியுடன் நடிக்கவிருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.