சந்தியா நடராஜன்
தேனாம்பேட்டை என்ற இடம் எனக்கு அறிமுகமானது 1978இல் வெளிவந்த ‘சிட்டுக்குருவி’ திரைப்படம் மூலம்தான். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வெளிவந்த படம் அது. சென்னையில் சிவப்பு கலர் பஸ் ஓடிய காலம். அதில் பஸ்ஸில் ஒரு பாடல் காட்சி எடுத்திருப்பார்கள். ‘என் கண்மணி என் காதலி’ எனத் தொடங்கும் பாடலை அண்ணா சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸில் கதாநாயகியுடன் நடிகர் சிவகுமார் பாடத் தொடங்குவார். அந்தப் பாடலின் நடுவே, ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு’ என்று கண்டக்டரின் குரல் கேட்கும்.
சென்னைக்கு வந்த பிறகுதான் தேனாம்பேட்டையானது வெள்ளாள தேனாம்பேட்டை, வன்னிய தேனாம்பேட்டை என இரு பகுதிகளைக் கொண்டது என்று தெரிய வந்தது. தெருக்களின் பெயர்களில் மாநகராட்சி சாதிகளை ஒழித்துவிட்ட போதிலும் வெள்ளாள தேனாம்பேட்டையில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் வெள்ளாள தேனாம்பேட்டை என்ற பெயர் நீங்காமல் நிலைத்து நிற்கிறது. இந்தப் பகுதி, ஒரு காலத்தில் வேளாளர்கள் – குறிப்பாக முதலியார்கள் வசம் இருந்திருக்கிறது.
சென்னை அண்ணாசாலையில் இருந்த புகழ்பெற்ற அபட்ஸ்பரி திருமண மாளிகைகூட ஒரு காலத்தில் லோகநாத முதலியார் வசம் இருந்திருக்கிறது. அபட்ஸ்பரியின் உரிமையாளராக இருந்த லோகநாத முதலியார் ஒரு தொழிலதிபராக இருந்திருக்கிறார். வெள்ளைக்காரன் வாழ்ந்த அபட்ஸ்பரி மாளிகை பிற்காலத்தில் சத்ய சாய்பாபா அறக்கட்டளைக்குக் கொடையாக வந்து சேர்ந்திருக்கிறது. அக்காலத்தில் சென்னையின் பிரமுகர்கள் வீட்டுத் திருமணங்கள் பல அபட்ஸ்பரியில் நடைபெற்றிருக்கிறது. எனக்குத் தெரிந்தவர்களில் சிகரம் செந்தில்நாதன் அபட்ஸ்பரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார். இராஜாஜி தொடங்கி, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என்று முன்னாள் முதல்வர்களின் காலடி பதிந்த இடம். அபட்ஸ்பரி திருமண அரங்கம், ஏவிஏம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தைவிட அளவில் பெரியதெனக் கூறப்படுகிறது.
1990களில் அபட்ஸ்பரி, சத்ய சாய்பாபா அறக்கட்டளையிலிருந்து ஆந்திர மாநில பாராளுமன்ற உறுப்பினரான சுப்பராம ரெட்டியிடம் கைமாறியிருக்கிறது. அவர்தான் பாலாஜி குழும நிறுவனங்களின் அதிபர். மிகப்பெரிய சாராய ஆலைகளின் உரிமையாளர். சுப்பராம ரெட்டி 1995இல் நக்ஸலைட்டுகளால் கொலை செய்யப்பட்டார். அவரது நிறுவனங்களின் நிதிநிலை சரிந்ததும் அவர் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனங்களும் ஆட்டம் கண்டன. அவரது மறைவால் முற்றிலும் உருக்குலைந்த நிறுவனம் இராயப்பேடை பெனிபிட் பண்ட். பிறகு சுப்பராம ரெட்டியின் சகோதரர் ஸ்ரீநிவாசரெட்டி குடும்ப நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.
அதன்பின்னரும் அபட்ஸ்பரி மாளிகை இருந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் உருவாக்கப் போடப்பட்ட திட்டங்கள், முன்னெடுப்புகள் எதுவும் முழுமையடையவில்லை. அந்த இடத்தில் எழுந்த கட்டிடம் பாதியிலேயே பரிதாபமாக நின்று போனது. அந்த இடத்தைக் கடக்கும் சென்னைவாசிகள் எல்லோரும் அந்த அரைகுறைக் கட்டிடத்தின் அவலம் கண்டு மனம் நொந்து போவார்கள்.
சுப்பராம ரெட்டியும் அவரது சகோதரரும், எனது குடும்ப நண்பர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய சந்திரசேகருடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர் மூலம்தான் அபட்ஸ்பரியின் அவல நிலையை நான் அறிய நேர்ந்தது. எப்படியோ 2011ஆம் ஆண்டு ‘ஹயத் ரெசிடென்ஸி’ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் உதயமாயிற்று. அதன் ஒரு பகுதியில் ரமீ மால் இயங்கி வருகிறது. துபாயில் பல ஹோட்டல்களை நிர்வகித்து வரும் மங்களூர்காரர் அதன் உரிமையாளர் ஆனார். அந்த வணிக வளாகத்தின் தொடக்க விழாவுக்கு எனது நண்பர் சந்திரசேகர் ஐஓபி நிர்வாக இயக்குநர் நரேந்திராவுடன் சென்றிருக்கிறார். கவிஞர் தமிழ் பிரபாவின் திருமணமும் இந்த ஹோல்ட்டலில்தான் நடைபெற்றது.
தற்போது அமர்ஜோதி லாட்ஜ், சிந்தாமணி சூப்பர் மார்க்கெட், திமுகவின் தலைமையிடமான அண்ணா அறிவாலயம், ஹயத் ரெசிடென்ஸி ஹோட்டல், ரிசர்வ் பேங்க் பயிற்சிப் பள்ளி. டிஎம்எஸ் வளாகம் எல்லாம் வெள்ளாள தேனாம்பேட்டைக்கு அண்ணாசாலையை எல்லையாகக் கொண்டு வரிசைகட்டி நிற்கின்றன. தமிழக அரசியலின் நாடித்துடிப்பாக இயங்கும் அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டையின் அரசியல் முகமாக இருவர்ணக் கொடியசைய அதிர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த இடங்களைக் கடந்து வலதுபுறம் செல்லும் சாலைக்குச் சிவசங்கரன் சாலை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தச் சாலை அண்ணாசாலையில் இருந்து கதீட்ரல் சாலைக்குச் செல்லும் குறுக்கு வழி. சிவசங்கரன் சாலையில் பிரதானமாக இருக்கும் முதல் பங்களா முன்னாள் தலைமைச் செயலர் ஜி.சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ் அவர்களது இல்லம். இப்பகுதி சொக்கலிங்கம் நகர் என்று அழைக்கப்படுகிறது. அண்ணாவின் தலைமைச் செயலர் பெயரில் வழங்கும் இப்பகுதியில்தான் கலைஞரின் அன்புக்குரிய நேர்முகச் செயலாளர் ஷண்முகநாதன் வீடும் உள்ளது.
சொக்கலிங்கம் பங்களா வருவதற்குமுன் அண்ணாசாலையிலிருந்து வரும் இப்பாதை அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இடம் தனியார் சொத்தாகவே இருந்திருக்கிறது. சிவசங்கரன் சாலை வளைந்து சென்று எல்லையம்மன் காலனி பிரதான சாலையைத் தொடுகிறது. வழியில் சிவசங்கரன் அடுக்ககம் ஒன்று உள்ளது. இங்கு தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவராகப் பணியாற்றிய நாகநாதன், அவரது மகனும் இன்றைய சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் ஆகியோர் தங்கள் வாழ்விடங்களைக் கொண்டுள்ளனர். எல்லையம்மன் சாலைக்கு ஆறு குறுக்குத் தெருக்கள் உள்ளன. அவை யாவும் முட்டுச் சந்துகள். அவை சிவசங்கரன் தோட்டத்து மதில் சுவருடன் முட்டி முடிவடைகின்றன. விநாயகர் கோவில் இருக்கும் 5ஆவது குறுக்குச் சந்தில்தான் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினர் வாழ்ந்தனர். இயக்குநர் பாரதிராஜா எல்லையம்மன் காலனி பிரதான சாலையில் வாழ்ந்தவர்.
எல்லையம்மன் காலனி குறுக்குத் தெருக்கள் முடிவடையும் மதில்சுவருக்கும் சிவசங்கரன் சாலைக்கும் இடைப்பட்ட பகுதிதான் சென்ற நூற்றாண்டின் ‘சிவசங்கரன் தோட்டம்’ என்ற மாபெரும் தென்னந்தோப்பு. பழம் தரும் மரங்களும் பச்சைப் பசேலென்ற விளைநிலங்களும் இருந்துள்ளன. தென்னை மரங்கள் நிறைந்த தென்னம்பேட்டைதான் தேனாம்பேட்டை ஆனது என்று ஒரு கதை நிலவுகிறது.
அதுசரி, யார் இந்தச் சிவசங்கரன்?
சிவசங்கரன் தொண்டைமண்டல முலியார் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் அப்பாதுரை முதலியார். அப்பாதுரை முதலியாருக்குரிய தோட்டம்தான் விற்பனைக்கு வந்து சொக்கலிங்க நகரானது.
சிவசங்கர முதலியார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் வகுப்புத் தோழர். சிவசங்கரனைக் குறித்தும் சிவசங்கரன் தோட்டம் குறித்தும் தனது சுயசரிதை நூலான ‘திருவிக வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற நூலில் திருவிக பதிவு செய்துள்ளார். அதில், “தேனாம்பேட்டையிலே ஒரு பெரிய தென்னந்தோப்பு உண்டு. அது சிவசங்கர முதலியாருடையது. அதில் சில மாமரங்களும் இருந்தன… ஒவ்வொருபோது எங்கள் கூட்டம் அட்லன் தோட்டத்துக்குள் புகும்; புகுந்ததும் நாங்கள் வானர சேனைகள் ஆவோம் என்று கூறும் அளவில் நின்றுவிடுகிறேன். அட்லன் தோட்டத்துப் பல பொருள்கள் இராயப்பேட்டைக்கு விருந்தாவன. அவைகளுள் ஒன்று சிறந்தது. அது பருங்களாக்காய்” என்று கூறுகிறார்.
திருவிக ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை மீது இராமலிங்க சுவாமிகள் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். திருவிகவும் சிவசங்கரன் முதலியாரும் தமது தமிழாசான் மீது கொண்ட அன்பால், வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நீதிமன்றத்திற்குச் செல்வதுண்டு. இத்தனைக்கும், “கதிரைவேல் மதவாதப் பேய். அப்பேய் உன்னையும் பிடித்துக்கொள்ளும். படிப்பு பாழாகும். நீ மாணாக்கன்” என்று ஆசிரியர்கள் சிலர் திருவிகவை எச்சரித்திருந்தனர். இந்த வழக்கு மட்டுமின்றி வில்வபதிச் செட்டியார் என்பவர் தம்மைக் கதிரைவேற் பிள்ளை தாக்கியதாக எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கும் விசாரணைக்கு வந்திருந்தது. இந்த வழக்கால் திருவிக தேர்வு எழுத முடியாமல் போய் அவரது பள்ளிப்படிப்பு முடிவடைந்தது. பரீட்சை எழுதவேண்டிய திருவிக, கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த அன்பால் தேர்வு எழுதாமல் நீதிமன்றத்தில் கிடந்துள்ளார். இந்த வழக்கில் திருவிகவும் சிவசங்கரனும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சம்மன் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி சான்றளித்துள்ளனர்.
சிவசங்கரனும் திருவிகவும் பள்ளி மாணவர்களாயிருந்தபோதுதான் டிடிகே சாலையும் லாயிட்ஸ் சாலையும் இணையும் இடத்தில் ஸ்ரீ பாலசுப்ரமணிய பக்தஜன சபை உருவானது. கதிரைவேற்பிள்ளை தலைவராக இருந்த இந்த சபையில் சிவசங்கரனும் பொறுப்பு வகித்திருக்கிறார். சிவசங்கரனின் மருமகன் கிருஷ்ணசாமியும் இத்திருச்சபையில் தொண்டாற்றியிருக்கிறார்.
சிவசங்கரனின் மனைவி சிவகாமி அம்மாள். இவர்களுக்கு ஒரே வாரிசு, மகள் சுசீலா. அவரது கணவர் கிருஷ்ணசாமி. இவர்களது மூத்த மகள் துளசி. துளசியின் கணவர் ஷண்முகம் ஆன்மிக நாட்டம் கொண்டவர். மலேசியாவில் வாழ்ந்த, பசுபதி சிவாச்சாரியார் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு சைவரான முகமது யூசுப் என்பவரிடம் தீட்சை பெற்றவர். ‘ஷண்முகம் பிணி தீர்க்கும் ஆற்றல் பெற்றவர்’ என்கிறார் சிவசங்கரன் குடும்பத்து உறவினரான சிவஞானம். இவர் ஷண்முகத்தைக் குருவாக ஏற்றுக்கொண்டவர்.
ஷண்முகம் கிண்டி ஐஐடி-யில் உதவி முதல்வர் பொறுப்பு வகித்து 1996இல் ஓய்வு பெற்றவர். இவர் மனைவி துளசி ஷண்முகம், எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
சுசிலா – கிருஷ்ணசாமி தம்பதியின் இளைய மகள் சந்திரா. அவரது கணவர் ச.த. காசிநாதன். இருவரும் எல்லையம்மன் காலனி பிரதான சாலையின் ஒரு கோடியில் பல கோடி மதிப்புள்ள ‘அருள் இல்லம்’ என்ற மாளிகையில் வசித்து வந்தனர். காசிநாதன் மெட்ராஸ் பார் கவுன்சிலில் பதிவுபெற்ற வழக்கறிஞர். ஆனால், கணவன் – மனைவி இருவருமே தற்போது உயிருடன் இல்லை. அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இவர்கள் மகள் தற்போது அருள் இல்லத்தில் குடியேறி இருக்கிறார். அதேபோல துளசி ஷண்முகத்தின் மகள் பவானியும் சென்னையில் வசிக்கிறார்.
கிருஷ்ணசாமிக்கு சற்குணம் என்ற ஒரே மகன். ஸ்டேட் பேங்க்கில் காசாளராகப் பணியாற்றியவர். தற்போது மேற்கு மாம்பலத்தில் வசித்து வருவதாகத் தகவல்.
சிவசங்கரனின் பூர்விகம் இராயப்பெட்டை. ஆனால், அவர் வெள்ளாள தேனாம்பேட்டை முத்தையா முதலித் தெருவில் சிவசங்கரன் தோட்டத்துக்கு அருகில் வாழ்ந்து வந்திருக்கிறார். 96 வயது வரையில் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார். சிவசங்கரன் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினரான சிவஞானம், சிவசங்கரன் குடும்ப உறவுகளைக் குறித்த தகவல்களை விரிவாகப் பேசினார். சிவஞானம், ஏ.ஜி. அலுவலகத்தில் சிபிடபிள்யூடி துறையின் போர்மேனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தொடர்பு கிடைத்ததே ஒரு நல்ல அனுபவம்.
‘இன்று சதுப்பு நிலங்களில்கூட அத்துமீறி அடுக்குமாடிகள் வந்துவிட்டன. ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன’ என்று சென்னைப் பெருவெள்ளத்தின்போது நகரமே புகார்ப் புராணம் எழுதிக் கொண்டிருந்தது அல்லவா! சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் எத்தனை தோட்டங்கள் இருந்தன என்று பட்டியல் போடுகிறார் திருவிக தனது சுயசரிதையில், ‘இராயப்பேட்டை தோட்டங்களுக்குப் பேர் பெற்றது. அம்மையப்ப முதலி வீதி முனையிலுள்ள ஒரு சிறு சந்தில் நுழைந்து சென்றால் வேல் முதலியார் தோட்டம், மாசிலாமணி முதலியார் தோட்டம், அப்பாசாமி முதலியார் தோட்டம், முனிசாமி முதலியார் தோட்டம், அய்யாசாமி முதலியார் தோட்டம், செருக்காத்தம்மாள் தோட்டம், அரங்கநாத முதலியார் தோட்டம், திவான் சாயப் தோட்டம், மன்னாத முதலியார் தோட்டம், பூங்காவன முதலியார் தோட்டம், தேப்பெருமாள் முதலியார் தோட்டம், திருப்பளி முதலியார் தோட்டம் (திரும்பினால்) சலவன் தோட்டம், பச்சையப்ப முதலியார் தோட்டம், மாங்காட்டு முதலியார் தோட்டம், செந்தாமரை முதலியார் தோட்டம், மூலத் தோட்டம், கன்னித் தோட்டம் போய்த் திரும்பிக் கோலக்காரன் தோட்ட வழியே புகுந்து மீண்டும் அம்மையப்ப முதலி தெருவை அடையலாம். இத்தோட்டப் பரப்பை என்னவென்று சொல்வேன்?” என்கிறார்.