பிரதாப் இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், யோகிபாபு, கீர்த்தனா, பிரக்யா நடித்த ‘பேபி அன்ட் பேபி’ பட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் சத்யராஜ் பேசுகையில் ‘‘ஹீரோ ஜெய் இன்னமும் சிங்கிளாக இருக்கிறார். அது நல்ல விஷயம்தான்.
இந்த பட நிகழ்ச்சியின் போது திடீரென கரன்ட் கட் ஆனது. இந்த படம் வெற்றி அடைந்தால், அடுத்த நிகழ்ச்சிகளில் இப்படி கரன்ட் கட் பண்ண சொல்வார்கள். சினிமாவில் அப்படிப்பட்ட சென்டிமென்ட் வரலாம். இந்த நிகழ்ச்சிக்கு யோகிபாபு வருகிறார் என்கிறார்கள். அவர் கண்டிப்பாக வருகிறாரா? அவ்வளவு பிசியாக இருக்கிறாரே என்று நானும் கேட்டேன். படப்பிடிப்பின் போது நானும் அவரும் அண்ணன் கவுண்டமணி பற்றி அதிகம் பேசிக்கொள்வோம். மேடை புதுசு, மைக்கில் பேச பழக்கமில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால், முதல் மேடை என்றாலும் படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ், இயக்குனர் பிரதாப் நன்றாக பேசினார்கள்
ஒரு சில படங்கள் வெற்றி அடைந்தால், அந்த மாதிரி கதைகள் சினிமாவில் தொடர்ந்து வரும். இப்போது மதகஜராஜா, குடும்பஸ்தன் படங்கள் வெற்றி அடைந்து இ ருக்கிறது. ரத்தம், கொலை பார்த்து சலித்துவிட்டதால், காமெடி, குடும்ப படங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என தெரிகிறது. அந்த வகை படங்கள் தொடரும். நானும் ஜெய்யும் ராஜாராணி படத்தில் சேர்ந்து நடித்தோம். அடுத்து பார்ட்டி என்ற படத்தில் நடித்தோம். சில பிரச்னைகளால் 6 ஆண்டுகளாக அந்த படம் வெளிவரவில்லை. 12 ஆண்டுகளுக்குபின் மதகஜராஜா வந்துவிட்ட நிலையில், பார்ட்டியும் வரும் என நம்புகிறோம். வெங்கட்பிரபு இயக்கத்தில் பிஜூ தீவில் எடுக்கப்பட்ட அந்த படம் அருமையாக வந்து இருக்கிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இமானுக்கு இசை வள்ளல் என்ற பட்டம் கொடுத்து இருக்கிறார்கள். அது பொருத்தமான பட்டம். நானும் இந்த படப்பிடிப்புக்கு கெத்தாக சென்றேன். காரணம், அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தனா, இந்த படத்தில் எனக்கு ஜோடி. நாமும் யூத் என்று நினைத்துக்கொண்டேன். நான் சந்தோஷப்பட்டேன், கீர்த்தனா சந்தோஷப்பட்டாரா என தெரியவில்லை.
கவுண்டமணியுடன் நடிக்கும்போது வசனங்களை மறந்து சிரித்துக்கொண்டே இருப்போம். அந்த மாதிரி இந்த படத்திலும் நடந்தது. ஆனந்தராஜ், நிழல்கள் ரவி என ஏகப்பட்ட நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். அதிக நடிகர்கள் நடித்தாலும் சரியான பிளானிங்குடன் படத்தை முடித்தோம். ஒரு இயக்குனருக்கு எடிட்டிங் நாலெட்ஜ் இருந்தால் அந்த படம் நன்றாக வரும்’’ என்றார்.