No menu items!

‘பொன்னியின் செல்வன்’ பாடல்கள் பிறந்த கதை – இளங்கோ கிருஷ்ணன்

‘பொன்னியின் செல்வன்’ பாடல்கள் பிறந்த கதை – இளங்கோ கிருஷ்ணன்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி டிரண்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனை வாழ் தமிழா யூடியூப் சேனலுக்காக (Wow Tamizhaa – YouTube) சந்தித்தோம். ‘பொன்னியின் செல்வன்’ பாடல்கள் பிறந்த கதை மற்றும்  மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

உங்கள் முதல் திரைப்பட பாடல் ‘பொன்னி நதி பார்க்கணுமே’ வெளியாகி டிரண்டிங்கில் இருக்கிறது. இந்தப் பாடல் வெளியான முதல்நாள் உங்களுக்கு எப்படியிருந்தது?

பதற்றமாக இருந்தேன். ரசிகர்கள், வாசகர்கள், எனது இலக்கிய நண்பர்கள் இந்தப் பாடலை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்ற எதிர்பார்ப்பு; ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது – அவர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்களோ என்ற பயம் என்று குழப்பமான மனநிலைகளுடன்தான் அன்று இருந்தேன். வீட்டில் புலம்பிக்கொண்டே இருந்தேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஒரு பையன் முடிவு வெளியாகும் அன்று எப்படியிருப்பானோ அப்படித்தான் இருந்தேன்.

பாடல் வெளியான பின்னர்?

ஒரு பெருமூச்சு வந்தது. ரசிகர்கள் பாடலை கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். அது பெரிய ஆசுவாசத்தையும் நிம்மதியையும் கொடுத்தது. அடுத்தநாள் காலையில் மணிரத்னம் ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘சாங் அண்ட் லிரிக் ஹிட்டாகியிருக்கிறது இளங்கோ. வைரலாகியிருக்கு… யு ஆர் ராக்கிங்’ என்று சொல்லியிருந்தார். அதைப் பார்த்ததும், அப்பாடா என்ற மாதிரி ஒரு உணர்வு. அப்போதுதான் ஒரு நிறைவாக இருந்தது.

மணிரத்னம் – ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து மூவரும் ஒரு வெற்றிக் கூட்டணி. அந்த வெற்றி ஏற்படுத்தியிருந்த பெயரை காப்பாற்ற வேண்டும்  என்ற ஒரு மன அழுத்தம் இருந்ததா?

இயல்பாகவே அந்த அழுத்தம் இருக்கும்தான். மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பயணிக்கக்கூடியவர்கள். ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டவர்கள். இணைந்து நிறைய மாயாஜாலங்கள் செய்திருக்கிறார்கள்; ஹிட் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், புதுசாக நான் உள்ளே போகிறேன். அதனால், எனக்கு நிறைய மன அழுத்தங்கள் இருந்தது. ஆனால், பதற்றமாக இருக்கிறேன் என்பதை அணர்ந்து அவர்கள் இருவருமே என்னை ஆற்றுப்படுத்தினார்கள். அது எனக்கு பெரிய ஆறுதல். அதேநேரம் பணியில் இருவருமே சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதை நம்மிடம் இருந்து வாங்கிவிடுவார்கள்.

‘பொன்னி நதி பார்க்கணுமே’ பாடல் உருவான அனுபவத்தை சொல்ல முடியுமா?

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தியத் தேவன் குதிரையில் தஞ்சாவூர் பயணம் செய்வதைப் பற்றிய பாடல்தான் ‘பொன்னி நதி பார்க்கணுமே’. அந்த பயணத்தில் வந்தியத் தேவன் பார்க்கிற காட்சிகள், அது சார்ந்த அவனது மனநிலைகள் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிற மாதிரியான ஒரு பாடலாக இருக்க வேண்டும் என்று சொல்லி, அதன் சூழலை மணிரத்னம் எனக்கு விளக்கினார்.

வடநாட்டில் நீண்ட காலமாக காவலுக்காக இருக்கும் பட்டத்து இளவரசரான ஆதித்த கரிகாலன், தன்னுடைய தந்தையான சுந்தர சோழருக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் ஒரு ஓலையை கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்பை வந்தியத்தேவனிடம் கொடுக்கிறார். அப்போது, “வந்தியத் தேவா நீ மிகப்பெரிய ஒரு வீரன் என்பதை அறிவோம். உன்னுடைய வீரத்தை இந்த உலகமே பார்த்துள்ளது. அதேநேரம் நீ சாதுர்யமானவன், புத்திசாலி. வழியில் எதாவது வம்பு வந்தால்கூட நீ சண்டைக்கு போகக்கூடாது”   என்று சொல்லி அனுப்புகிறார்.

இது வந்தியத்தேவன் இயல்புக்கு கொஞ்சம் சிக்கலான வேலை. வந்தியத்தேவன் இயல்பிலேயே அனைவருடனும் மிக சகஜமாக பழகக்கூடிய ஆள். ஆனால், அப்படி வழியில் யாருடனாவது பழகி, பேசி, அவன் செல்லும் காரியத்தை சொல்லிவிட்டால், மொத்த திட்டமும் கெட்டுவிடும். எனவேதான் ஆதித்த கரிகாலன் எச்சரித்து அனுப்புகிறார்.

இன்னொரு பக்கம் காவிரி ஆற்றை, தஞ்சாவூரை பார்க்கணும் என்பது வந்தியத்தேவனின் நீண்ட நாள் ஆசை. எனவே, ஒரு கடமைக்காக சென்றாலும், அவனது மனம் முழுக்க இருக்கிற அந்த ஆசையைத்தான் ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என்ற முதல் சொல்லாக வைத்தோம். அந்த நிலப்பகுதியை சென்று அடைந்ததும் அதைப் பார்த்து மயங்கிவிடுகிறார். நகரம், வயல்வெளி, பெண்கள் என இந்த ஊர் எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது; இங்கேயே இருந்துவிட்டால் எப்படியிருக்கும் என்று நினைக்கிறார். ஆனால், அப்படி இருக்க முடியாது. மேலும், அவர் மனதில் ஒரு கனவும் இருக்கிறது. அதையெல்லாம் நேரடியாக இல்லாமல், பூடகமாக சொல்லியிருக்கிறோம்.

காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் வழியை, ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் மற்ற பகுதிகளை நீங்கள் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்களா?

இந்தப் படத்துக்காக இல்லை; முன்னரே சம்புவராயர் மலை, கடம்பூர் உட்பட சோழ தேசத்தின் வெவ்வேறு பகுதிகளை சென்று பார்த்திருக்கிறேன். சோழ தேசத்தைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதன் ஆய்வுப் பணிகளுக்காக அப்பகுதிகளில் அடிக்கடி நான் பயணம் செய்வேன். 

இந்த பாடலை எப்படி எழுதினீங்க. சூழலை சொன்னதும் நீங்கள் எழுதி அதற்கு மெட்டு அமைத்தார்களா அல்லது மெட்டுக்கு ஏற்ப வரிகளை உருவாக்கினீங்களா?

மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்தான் இது. இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் நான் எழுதின வரிகளுக்கு ரஹ்மான் மெட்டமைத்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் உங்கள் வரிகளில் மாற்றங்கள் சொன்னாரா?

ஆம், அது நிறைய நடந்தது. அப்படித்தான் நடக்கும் என்றும் எனக்கு தெரியும். இந்தப் படத்தில் அதிக நாட்களை எடுத்துக்கொண்டது ‘பொன்னி நதி பார்க்கணுமே’ பாடல்தான். கிட்டதட்ட 30 நாட்கள் இந்த பாடலுக்காக நாங்கள் வேலை பார்த்தோம்.  ‘தீயாரி எசமாரி’ என்பதற்கு மட்டும் நூற்றுக்கு மேலான சொற்களை முயற்சி செய்து பார்த்தோம். இதுபோல் ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என்பதற்கும் நூறு ’ஆஃப்ஷன்’ கொடுத்தோம். கடைசியில் இதுதான் மற்றவற்றைவிட வந்தியத் தேவன் மனநிலையை, அவன் நெடுநாள் ஏக்கத்தை சரியாக சொல்கிறது என இதை தேர்வு செய்துதோம்.

ஒருநாள் மொத்த பாடலும் இதுதான் என இறுதிசெய்து எழுதி ரிக்கார்டிங்கில் உட்கார்ந்த பின்னர், சரியாக வரவில்லை என்று சில வரிகளில் மாற்றங்கள் செய்ய சொன்னார். ‘செக்க சிகப்பி நெஞ்சில் இருடி, ரெட்டை சுழச்சி ஒட்டி இருடி’ என்பதெல்லாம் அப்படி கடைசி நேரத்தில் எழுதி சேர்த்ததுதான்.

பாடல் ரிக்கார்டிங் எல்லாம் முடிந்து பல நாட்கள் கழித்து திடீரென்று ஒருநாள் ஏ.ஆர். ரஹ்மான் அழைத்தார். ஒரு தொகையறா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அப்போதுதான் ‘நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும், உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்…’ தொகையறாவையும் அதன் முன்னால் வரும் ‘காவிரியால் நீர்மடிக்கு அம்பாரமாய் அணையெடுத்தான்’ வரிகளையும் எழுதி சேர்த்தோம்.

ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?

மிகப் பிரமாதமாக இருந்தது. சினிமா பாடல்களுக்குள் வராத புது சொற்கள், ஆழமான பொருள் கொடுக்கக்கூடிய வித்தியாசமான சொற்கள், புதிய சொல்லாட்சிகள் சொல்லும் போது மனம் திறந்து பாராட்டுவார். கொண்டாடுவார்.

தமிழ் சொற்கள் மீது மிகப்பெரிய காதல் கொண்டவர் மணிரத்னம் என்கிறார்கள், உண்மைதானா?

நிச்சயமா. என்னிடம் அடிக்கடி அவர் சொன்னது, ‘இளங்கோ, பத்தாம் நூற்றாண்டு தமிழ், நல்ல தமிழ், செந்தமிழ் கவிதைகள்  எழுதுவதற்கான ஒரு வாய்ப்பு இனிமேல் எப்போது கிடைக்கும் என்று தெரியாது. இப்போது கிடைச்சிருக்கு. விடக்கூடாது இளங்கோ’ என்பார். இந்தப் படத்தில் அவரது பங்களிப்பு முதன்மையானது. இந்தப் படத்தின் கதையை கல்கி எழுதியிருந்தாலும், அந்தக் கதையின் மணிரத்னம் ‘வெர்ஷன்’தான் இந்தப் படம்.

இந்தப் படத்துக்கு நீங்கள்தான் சரியான ஆளாக இருப்பீர்கள் என்று எப்படி அவர் கண்டுபிடித்தார்?

ஜெயமோகன்தான் என்னை மணிரத்னமிடம் பரிந்துரை செய்துள்ளார். எனது கவிதைகளில் இயல்பாகவே ஒரு இசைமை, ‘ரெட்டாரிக்’ பண்பு இருக்கிறது என்று சொல்வார்கள். ஜெயமோகன் என்னை பரிந்துரை செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம். சோழ தேசத்தின் தேசப் பாடல் மாதிரியான ஒன்றை எழுதுவதற்காகத்தான் முதலில் என்னை அழைத்தார்கள். ஆனால், அது முடிந்த பின்னரும் ஒவ்வொரு பாடலாக கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். 15 நாட்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் அழைத்தார்கள். ஒரு புதிய பாடல் வேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள் சொன்ன தருணத்துக்கு ஒன்று எழுதினேன். ஏற்கெனவே எழுதிய இரண்டு பாடல்களை வேண்டாம் என்று எடுத்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு பாடல் படப்பிடிப்பு எல்லாம்கூட முடிந்துவிட்டது. இரண்டாம் பாகம் இருக்கிறது. அதில் அதை பயன்படுத்துவார்களாக இருக்கலாம்.

தொடர்ந்து பாடல்கள் எழுதுவீர்களா?

சிலர் கேட்டுள்ளார்கள். எல்லாமே தொடக்க நிலையில் இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாததால் இப்போது வெளியே சொல்லமுடியாது. தமிழ் சினிமாவில் நல்ல இலக்கிய தரமான பாடல்கள் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...