நகைச்சுவை சக்ரவர்த்தியாக கருதப்படும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றவர் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன். தன் காமெடி நடிப்பால் சுமார் 40 ஆண்டுகாலம் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தவர் சுருளிராஜன்.
சுருளிராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் சங்கரலிங்கம் . இதன்பிறகு தனது பெயர் சுருளிராஜனாக மாறியது எப்படி என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கும் அவர், “வேண்டுதலுக்காக சுருளி மலைக்குப்போய் எனக்கு முடி இறக்கினார்கள். அப்போது கடவுளின் நினைவாக சுருளி என்று புதிய பெயரை வைத்தார்கள். மதுரையில் நாங்கள் இருந்த இடத்தில் ஏகப்பட்ட சுருளிகள் இருந்தால் என் பெயர் தனியாக தெரிய, சுருளியுடன் என் அம்மா ராஜனை சேர்த்தார்” என்கிறார். சுருளிராஜன் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
நடிகர் ஓ.ஏ.கே.தேவரின் நாடகக் குழுவில் சுருளிராஜன் நடித்துக் கொண்டிருந்தபோது. அவர் வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. அவருடைய அண்ணனுக்கு திருமணம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கையில் காசு இல்லாததால் அவரால் அந்த திருமணத்துக்குக்கூட போக முடியவில்லை.
இதைப்பற்றி கூறியிருக்கும் அவர், “கையில் காசில்லாததால் திருமணத்துக்கு போகவில்லை. என் வாழ்த்துக்களை மட்டும் எழுதி அனுப்பிவிட்டு சென்னையிலே தங்கி விட்டேன். ஒரு வருடம் கழித்து கையில் காசு சேர்ந்ததும் ஊருக்குப் போனேன். நான் ஊருக்கு போன நேரம் அண்ணன் வேலைக்கு போயிருந்தார்.அப்பா வயலுக்கு போயிருந்தார். அம்மா பக்கத்து வீட்டுக்கு போயிருந்தார்.
அண்ணி மட்டும் வீட்டில் இருந்தார். யாரும் இல்லாததால் நான் வீட்டுக்குள் போனேன். என்னைப் பார்த்த அண்ணி, யாரோ புது ஆள் வீட்டுக்குள் வருகிறானே என்று நினைத்துவிட்டார். அதனால் மூடிய கதவுக்கு பின்னால் நின்று, “வீட்ல யாரும் இல்லே. வெளியே போங்க .ஏதாவது வேணும்னா பெரியவங்க வந்தபிறகு வாங்க” என்று சொல்லிவிட்டார்.. நான் பேசாமல் சோபாவில் உட்கார்ந்திருந்தேன். அண்ணிக்கு பயமாக போய்விட்டது.
” என்ன நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீங்க உக்காந்துட்டே இருக்கீங்களே வெளிய போங்க, என்று சத்தமாக குரல் கொடுத்தார். எனக்கு தர்ம சங்கடமாகிவிட்டது நல்ல வேளை அவர் கூச்சல் போடுவதற்குள் என் அம்மா வந்துவிட்டார். நான் நடந்ததை சொல்ல . ஒரே சிரிப்பு தான்” என்கிறார்.
சுருளிராஜன் திமுகவின் தேர்தல் பிரச்சார நாடகங்களான ‘ஆகட்டும் பார்க்கலாம்’. காகிதப்பூ’ ஆகிய நாடகங்களிலும் நடித்தார். அந்த நாடகங்களில் அவர் காங்கிரஸ்காரராக நடித்தார். அறிஞர் அண்ணா சுருளிராஜனை பாராட்டி மேடையில் பேசும்போது ‘சுருளிராஜன் சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
’ நான்’ படத்தில் ஜெயலலிதாவின் தந்தையாக நடித்து கலகலப்பு கூட்டினார் சுருளிராஜன். 1976-க்கு பிறகு சுருளிராஜனுக்கு சுக்கிர திசை அடித்தது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னராக ரசிகர்களின் நெஞ்சில் கொடி கட்டி பறந்தார்.
தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி கூறும் அவர், “சோலைமலை எழுதிய நீதிபதி நாடகத்தில் நடிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாம் போட்டு இருந்தோம். ஒரு நாள் அந்த ஊர் தேவாலயத்தில் இருந்த பாதிரியார் எங்கள் நாடகத்தை பார்த்தார். மறுநாள் என்னை தேவாலயத்துக்கு அழைத்துப் போய், என் நடிப்பை பாராட்டியதோடு அவர் அணிந்திருந்த ஜெபமாலையையும் எனக்கு பரிசளித்தார்.
‘உனக்கு துன்பம் வரும்போதெல்லாம் இது உனக்கு துணையாக இருக்கும். என்று சொல்லிக் கொடுத்தார். அதை அன்றில் இருந்து ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
என் எதிர் வீட்டில் சிவாஜி குழுவில் நடித்து வந்த சீதாலட்சுமி குடியிருந்தார். அவரது உறவினர் ஒருவர் இறந்து போய் தினமும் அவரது கனவில் வந்துகொண்டு இருந்தார். அவங்க ரொம்ப பயந்துட்டாங்க. அவங்க வீட்டுக்காரரும் ரொம்ப மனமுடஞ்சு போயிட்டாரு. இதை என்கிட்ட சொன்னாங்க. உடனே ஜெபமாலை அவங்க கிட்ட கொடுத்து. அந்த அம்மா தலைமாட்டில் வைக்க சொன்னேன். அவங்களும் அப்படியே செஞ்சாங்க. அவங்களும் அப்படியே செஞ்சாங்க. அவ்வளவுதான் செத்துப்போனவர் அந்த அம்மா கனவில் வந்து தொந்தரவு செய்கிறதை கைவிட்டார் .