No menu items!

தேவயானியின் பட்டுப் புடவை ரகசியம்

தேவயானியின் பட்டுப் புடவை ரகசியம்

சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வரும், 48வது புத்தகக் காட்சியில் நேற்று (05-01-25), மணிமேகலை பிரசுரம் சார்பில் 48 நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் 48 நூல்கள் வெளியிடப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

‘தினமலர்’ நாளிதழின் இணைப்பான, ‘வாரமலர்’ இதழில், அந்துமணி எழுதிய, பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ நுாலின் – 23ஆம் பாகத்தை, டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பெற்றுக்கொண்டார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கருணாநிதி எழுதிய, ‘மக்களை நேசிக்கப் பயிற்சி பெறுங்கள்’ என்ற நூலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட, நடிகை தேவயானி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குநர் வாசு பேசுகையில், ”டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள், அவரது தந்தை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ‘குமுதம்’ இதழின் ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமாக இருக்க எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டார் என்று கூறினார். அக்காலங்களின் ‘குமுதம்’ இதழைப் படிக்கும்போது அதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதையே ஒரு ரோல் மாடலாக எடுத்துக்கொண்டுதான் நாங்கள் சினிமாவில் ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யமாக இருக்கும்படி திரைக்கதை அமைக்கிறோம். தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளில் வரும் திருப்பங்களிலிருந்தும், மற்ற நூல்களில் இருந்தும், திரைப்படத்துக்கான சுவாரஸ்யங்களை கற்றுக் கொள்கிறோம்,” என்றார்.

திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசுகையில், ”இந்த புத்தகக் காட்சி வருவதற்கே இயலாத அளவுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளது. இவை, புத்தகங்களைக் காதலிப்போருக்கான சான்றுகளாக உள்ளன,” என்றார்.

நடிகை தேவயானி பேசுகையில், ”இந்த விழாவில், அதிக பெண் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் மணிமேகலை பிரசுரத்தை வாழ்த்துகிறேன். தற்போது நான் அணிந்துள்ள பட்டுப் புடவை, என் தம்பி திருமணத்துக்காக நல்லி சில்க்ஸ் கடையில் எடுத்தது. இவ்வளவு காலங்கள் உழைக்கிறது. நல்லி சில்க்ஸ் அதிபர் குப்புசாமி அவர்களுக்கு நன்றி,” என்றார்.

தொடர்ந்து, நீதிபதி மஞ்சுளா பேசுகையில், ”இங்கு நடிகர் – நடிகையர், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். நான் நீதிபதியாக பங்கேற்றுள்ளேன். நீதி என்பதற்கு, தமிழில் அறம் என்று பொருள். அறத்தைப் போதிப்பதே நம் தமிழ் இலக்கியங்கள். இந்த நூல்களை படிப்போரும் அறத்தின் வழி நடக்க வேண்டும்,” என்றார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ”நான் சிறுவனாக இருந்த போது, மணிமேகலை பிரசுரத்தை உருவாக்கிய, தமிழ்வாணன் எழுதிய, ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ நாவலைத் தொடர்ந்து படிப்பேன். என் பெயரில் சங்கர் இருப்பதால், அந்த கதை நாயகனாக என்னைக் கற்பனை செய்து கொள்வேன். அப்படி வாசகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தமிழ்வாணன். இந்த நிகழ்வில், பிளஸ் 1 வகுப்பு மாணவி சாரல் சிந்தனா நூல் முதல், 50,000 பிரசவங்களைப் பார்த்த டாக்டர் தாமரை ஹரிபாபுவின் நூல் வரை வெளியிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

ஜவுளி கடை அதிபர் நல்லி குப்புசாமி பேசுகையில், ”நான் சிறுவனாக இருந்த போது, ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினேன். அப்போது, தமிழில் பிரபலமான எழுத்தாளராக இருந்த தமிழ்வாணனைச் சந்தித்து, அதைத் தந்தேன். அவர் சில கருத்துக்களைக் கூறினார். நான் வளர்ந்த பின், அவர் எனக்கு ஜோதிடம் சொன்னார்; அதன்படியே நடந்தது. அவர் மறைந்த பின், என்னிடம் இருந்த, ‘காணாமல் போன வைரங்கள்’ என்ற தமிழ்வாணன் புத்தகத்தை, கறையான் தின்று விட்டது. அதை அறிந்த ரவி தமிழ்வாணன், வாசகரிடம் இருந்து பெற்று, எனக்கு அச்சிட்டு தந்தார். அவ்வளவு பொறுப்பு மிக்க பிரசுரம் இது,” என்றார்.

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசும்போது, “நூல்கள் எழுதுவோருக்கு, அவற்றை எப்படி வெளியிட வேண்டும் என்பது தெரியாது. மணிமேகலை பிரசுரம், அவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் உள்ள எழுத்துக்களைப் பெற்று, நூலாக்கி வாசகர்களுக்கு வழங்குகிறது. அதாவது, நூலாக்க நாங்கள் ரெடி… நூல் எழுத நீங்க ரெடியா? என்பது தான் இதன் அர்த்தம். பெரும்பாலான நூலாசிரியர்கள், தங்களின் நூல்களில், ஆங்கில எழுத்தாளர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவர். இனி, அப்படிச் செய்யாதீர்கள். நம் மொழியில் கருத்துக்களுக்குப் பஞ்சமில்லை. அதனால், நம் எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுங்கள். குழந்தைகளையும் படிக்க வைக்கும் வகையில், புத்தகங்களிலிருந்து கேள்விகளை கேளுங்கள். இதனால், அவர்கள் தூண்டப்படுவர்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் தமிழ்வாணனின் ‘மர்ம நாவல்கள்’ பாகம் – 9; அந்துமணியின் ‘பார்த்தது கேட்டது படித்தது’ பாகம் – 23; சஞ்சீவி ராஜா சுவாமிகளின் ‘பக்கத்தைத் தேர்ந்தெடுங்கள் பயன் கிடைக்கும்’; அமுதனின் ‘காசி யாத்திரை செல்வோம்’; மும்பை குமாரின் ‘பொன்னியின் செல்வன்’ ஆங்கில பதிப்பு; முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதியின் ‘மக்களை நேசிக்கப் பயிற்சி பெறுங்கள்’ உள்ளிட்ட 48 நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

தொடர்ந்து லியோ சாய் பிரகாஷ், டேஸ்டி சுப்பிரமணியன், கலக்கல் கந்தசாமி, மும்பை குமார், ரமேஷ்குமார், தயாளன், நவீன் ஆகியோருக்கு எழுச்சிமிகு எண்மர் விருது வழங்கப்பட்டது.

இந்த மேடையில் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ராசி அழகப்பனுக்கு, ‘தமிழ்வாணன் நினைவு விருது’ மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, ஐ.பி.எஸ். அதிகாரி சிவகுமார், எஸ்.எம். சில்க்ஸ் நிறுவனர் மனோகரன், நடிகர்கள் மவுலி, ஜெயப்பிரகாஷ், நடிகை சச்சு, சஞ்சீவி ராஜா சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...