ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் ,”05.11.2022 முதல் ஆவீன் பால் கொள்முதல் விலை பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம் பால் பாக்கெட்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம் பால் பாக்கெட்) ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி தற்போதைய நிலையே தொடரும்.
தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு இல்லை: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, “பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, உற்பத்தி விலையை ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்ய, முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் பயன்படுத்த படக்கூடிய ஆரஞ்சு கலர் ஃபுல் க்ரீம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆவின் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதே விலையே தொடரும், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனல் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரை திரும்பபெற குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால், எந்த பயனுமில்லை – தமிழிசை
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்ளு கடிதம் அனுப்பவுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழிசை, “ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிர் கருத்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கூறுவது தேவையில்லாத ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த வித பயனும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
சைவம் – அசைவம் என குடியிருப்புகளை பிரிக்க வேண்டும்: ஜார்ஜ் டவுன் மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை
சென்னையில் மிக பழமையான பகுதியாக ஜார்ஜ் டவுன் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மறு சீரமைப்பு செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பிராட்வே பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திர குமார் என்பவர், ‘ஜார்ஜ் டவுன் பகுதியில் விளையாட்டு மைதான வசதி இல்லை. எனவே, இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மறு சீரமைப்பு செய்யும்போது குடியிருப்பு பகுதிகளை சைவம் – அசைவம் என்று தனியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு விருப்பம் உள்ளது’ என்றார்.
இம்ரான் கானை கொல்லவே சுட்டேன்: கைதான நபர் வாக்குமூலம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்ரான் அடுத்த 3 வாரங்களுக்கு நடக்க முடியாது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், மக்களை தவறாக திசைதிருப்பி வழி நடத்திச் செல்வதால் ஆத்திரமடைந்து சுட்டதாகவும் தமது பின்னணியில் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.