எழுத்தாளர் இந்துமதி கணவர் ரங்கன் சமீபத்தில் காலமானார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் இந்துமதி, ஃபேஸ்புக்கில் ‘‘இப்போது ஸ்டெல்லா ப்ரூஸைப் புரிந்துகொள்ள முடிகிறது’ என்று பதிவிட்டிருந்தார். இது இலக்கிய வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ், மனைவி இறந்த பின்னர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இலக்கிய நண்பர்கள் பலரும் இந்துமதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனையடுத்து, தான் அப்படி பதிவிட்டது ஏன் என்றும் தனது கணவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளார் இந்துமதி. அந்தப் பதிவு இங்கே….
‘இப்போது ஸ்டெல்லா ப்ரூஸைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் நான் போட்ட போஸ்டிங். மனம் மிகவும் தொய்ந்து நொந்து கிடந்த சமயத்தில் தோன்றியதைச் சடாரென வெளிப்படுத்தி விட்டேன்.
தப்புதான்.
அப்படியெல்லாம் மனதைத் தளர விட்டிருக்கக் கூடாது தான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக திருச்சி, வேலூர் தினமலரில் ‘அன்புடன் அந்தரங்கம்’ பகுதியில் எத்தனையோ பேர் சோகங்களுக்கு கஷ்டங்களுக்கு வழிகாட்டிய நான் இவ்வாறு திசை தடுமாறி இருக்கக் கூடாது. தடுமாறி விட்டேன்.
சிவசங்கரி வீட்டுக்கு வந்தபோது சொன்னார்கள்; ‘இந்து நாமெல்லாம் போல்ட் அண்ட் டைனமிக். மற்றவர்களுக்கு வழிகாட்டிகள். என் கணவர் சந்திரசேகர் இறந்த போது என் வயது 46. இதுவரை நான் தனியாகத்தானே எழுந்து நின்று கொண்டிருக்கிறேன். இந்துமதி என்றால் சிவசங்கரியும் சிவசங்கரி என்றால் இந்துமதியும் ஒன்றாகத்தான் எல்லாருக்கும் நினைவு வரும். என்னை மாதிரியே நீ எழுந்து நிற்பாய் என்று எனக்குத் தெரியும் என்றார்கள்.
உஷா சுப்ரமணியம் சொன்னார். உஷாவின் கணவர் சுப்ரமணியனும் என் கணவர் ரங்கனும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். லண்டனுக்கு ஒன்றாக சென்றவர்கள். சுப்ரமணியம் மறைவை நான் தாங்கிக்கொள்ள வில்லையா என்றார் உஷா.
கவிஞர் எஸ். வைத்தீஸ்வரனும் இவரும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். வைத்தீஸ்வரன் ஆறுதல் கூறினார். மாலன், அவர் மனைவி சரஸ்வதி, ரமணன், அவர் மனைவி மீரா, என். சி. மோகன்தாஸ் எல்லாரும வந்திருந்தனர். சமீப காலமாக எங்குமே வெளியில் வராத / செல்லாத ‘ஜூனியர் விகடன’ ஆந்தை குமார் தன் உடல நலத்தையும் பொருட்படுத்தாது வந்ததில் நெஞ்சு மேலும் நெகிழ்ந்து போயிற்று.
வித்யா சுப்ரமணியம், வேதா கோபாலன், ராஜசியாமளா பிரகாஷ், சாந்தா பாலகுமாரன் என சமீபத்தில் கணவரைப் பறி கொடுத்த அத்த்தனைப் பேரும் பேசினார்கள். ராஜசியாமளாவுக்கு பிரகாஷை நான் பேசி கல்யாணம் முடித்தவள். இளம் வயது…
அவர்களெல்லாம் தேறி வந்து நிமிர்ந்து நின்ற போது, 86 வயதான, ஏழெட்டு மாதங்களாக உடல் நலமின்றி படுத்த படுக்கையில் இருந்த என் கணவருக்காக 75 வயதான நான் கதறுவது…
ஆனால், இவர்கள் அத்தனைப் பேருக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அனைவரும் கல்யாணத்திற்குப் பின்னரே கணவரை அறிவார்கள். நானோ பிறந்த நிமிடத்திலிருந்து அறிவேன்.
எங்கள் வீட்டில் அவரும் அவர் வீட்டில் நானும் வளர்ந்தவர்கள். கவுன் போடும் முன்னரே அவருக்கு நான் எனக்கு அவர் என்று நிச்சயிக்கப்பட்டவர்கள். அந்த வயதில் எனக்கு uncle-க்கும் husband-க்கும் வித்தியாசம் தெரியாது. தாய் மாமாவான அவரை husband என்றுதான் கூப்பிடணும் என்று சொல்லித் தந்தார்கள். அந்தக் கிண்டல் புரியாத பருவத்தில் அப்படியே கூப்பிட்டிருக்கிறேன்.
பெரிய மிராசுதார் குடும்பத்து ஒரே பையனான அவர் எங்கள் வீட்டில் தங்கித்தான் லயோலா கல்லூரியில் படித்தார். பின்னர் பிட்ஸ் பிலானி. அதன் பிறகு லண்டன். அங்கிருந்து திரும்பிய பின்னரே எங்கள் திருமணம் நடந்தது.
75 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். எனக்கென அவரும் அவருக்கென நானுமாக இருந்திருக்கிறோம். பாலும் பழமும் சிவாஜி, சரோஜாதேவி போன்றதொரு வாழ்க்கை. நகமும் சதையும் என்பது கூட எங்கள் விஷயத்தில் சரியில்லை. அதையும் விட ஒன்றானது. எனக்காவது தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அவருக்கு…?
என் விருப்பம் தான் அவர் விருப்பம். என் ஆசைதான் அவர் ஆசை. என் எண்ணம் தான் அவர் எண்ணம். என் உயர்வுதான் அவர் உயர்வு. எனக்குப் பிடித்தது தான் அவருக்குப் பிடிக்கும். கணவன் சாப்பிட்ட பிறகு மனைவி சாப்பிடுவாள். நான் சாப்பிடாமல் ஒரு நாள் கூட அவர் சாப்பிட்டதில்லை.
“அம்மா வருவாங்கப்பா நீங்க சாப்பிடுங்க” என்று வீட்டிலிருந்த உதவியாட்கள் சொன்னால் கூட சாப்பிட மாட்டார். “அம்மா வரட்டும்” என்று எத்தனை நேரமானாலும் காத்திருப்பார்.
நான் தான் அவருக்கு உயிர். நான் தான் அவர் அறிந்த ஒரே பெண். எனக்குத் தெரிந்து ராமச்சந்திர மூர்த்தி. கள்ளம் கபடம் பொய் வஞ்சகம் எதுவும் அறியாதவர். என்னைத் தவிர அவர் அறிந்த மற்றொரு விஷயம் அவரது FACTORY.
ராமச்சந்திரா மருத்துவ மனையில் டாக்டர் தணிகாசலமும் டாக்டர் லஷ்மி நரசிம்மனும் கடைசி வரை சொன்னது: “அவருக்கு உங்களைத் தவிர வேறு யாரும் தெரியலம்மா. அவர் நினைவுல இருக்கிறது நீங்க மட்டும் தான்.”
‘அம்மா அம்மா அம்மா’ன்னு கடைசி வரை கூப்பிட்டவர். டிமென்ஷியா வந்து குழந்தை மாதிரி ஆன பின்பு “மம்மா..” என்பார். அந்த மம்மா என் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
அவர் என்னை அம்மா என்றும் நான் அவரை அப்பா என்றும் தான் கூப்பிட்டுக் கொள்வோம். வேறு எந்த கணவன் – மனைவியாவது இப்படி கூப்பிட்டுக் கொண்டார்களா, கொள்கிறார்களா என்பதை நான் அறியேன்.
நிஜமாகவே அவர் எனக்கு அப்பாதான். ஒரு அம்மா கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்கிற மாதிரிதான் பார்த்துக்கொண்டேன். சில சமயங்களில் அவர் நிலமை கண்டு நான் கண்ணீர் விட்டு அழுவேன். “கை நீட்டி என் கண்களைத் துடைத்து “நீ அழாதே. நீ அழுதா நான் தாங்க மாட்டேன்… என்ன செய்யணும் சொல்லு செய்யறேன்,” என்பார்.
போட்டுக் கொண்டிருக்கும் சட்டை பட்டன்களையெல்லாம் அவிழ்த்து சட்டையைக் கழற்றுவார். “கழட்டாதம்மா. யாராவது சட்டையைக் கழட்டுவாங்களா? நான் கழற்றேனா பார்” என்றால், “கழட்டக் கூடாதா, சரி கழட்டல…” என்று போட்டுக் கொள்வார். அரைமணி நேரம் கழித்து மீண்டும் கழற்றுவார்.
இந்தக் குழந்தையோடு நான் 75 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். தனக்கென வாழாமல் எனக்கென வாழ்த்தவரோடு வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அப்பாவாக இருந்தவருக்குக் கடைசி ஏழெட்டு மாதங்கள் அம்மாவாகவே மாறி குழந்தையைப்போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எப்போது மூச்சு அடங்கிற்று என்பதே தெரியாமல் வழக்கம் போல் நான் பல் தேய்த்து, காபி போட்டு குடித்து அவருக்குப் பல் தேய்த்து விட போய் எழுப்புகிறேன். எழுந்திருக்கவில்லை. உடனே வாசலில் படுத்திருந்த வாட்ச்மேனைக் கூப்பிட்டேன். கை தூக்கி, கால் தூக்கிப் பார்த்து விட்டு “அம்மா ஐயா நல்லா தூங்குறாரும்மா” என்றார்.
தூங்குகிறார் என்றுதான் நானும் நினைத்தேன். முகத்தில் அத்தனை அமைதி. அத்தனை சாந்தம். இது வரை கண்டிராத பேரழகு… ஒரு வேளை தூங்குகிறாரோ?
மீண்டும் எழுப்பினேன். எழவில்லை. என் தம்பி வந்தான். “எனக்கு சந்தேகமாக இருக்கு. டாக்டரைக் கூப்பிடலாம்” என்றதும், எனக்கு மகன் போன்ற ஓமந்தூரார் அரசினர் மருத்துவ மனையின் டாக்டர் செந்திலைக் கூப்பிட்டேன்.
செந்தில் வந்து “அப்பா இல்லை அம்மா” என்றதை எப்படித் தாங்கிக் கொண்டேன் என்பது தெரியவில்லை.
செய்தி எப்படித் தெரிந்ததோ…
காலை ஆறு மணிக்கெல்லாம் பாக்கெட் நாவல் அசோகன் ஓடி வந்தார். அக்கம் பக்க வீடுகள், நான் நொடிந்து போகும் சமயங்களில் எல்லாம் ஓடிவந்து கை பற்றி இழுத்து வெளியே கொண்டு வரும் பட்டுக்கோட்டை பிராபாகர், சுரேஷ் பாலா (சுபா)வோடு வந்தார். ஒவ்வொருவராக ராஜசியாமளா, வேதா கோபாலன், தினமலர் சேது, அகிலன் கண்ணன், ராஜேஷ் குமாரின் மகன், லேனா தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன்…
தொலைபேசியில் இந்திரா சௌந்தர்ராஜன், கலாப்பிரியா, தேவி பாலா,… நடக்க முடியாமல் நடந்து வந்த சிவசங்கரி, நந்தன் மாசிலாமணி, லதா சரவணன், ராணி ஆசிரியை மீனாட்சி, kuku fm ஜெயந்தி, மிகப் பெரிய மாலையோடு வந்து மரியாதை செலுத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மா. செ…
அன்றிரவு மகனும் மருமகளும் வந்து சேர்ந்த பின் மறுநாள் காலை பத்து மணிக்கு ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள இடுகாட்டில் தகனம். அங்கு ஓடோடி வந்த ஆண்டாள் பிரியதர்ஷினி.
நெஞ்சில் நெருப்பள்ளிக் கொட்டினாற் போல் என்பார்களே… நெருப்பள்ளிக் கொட்டின போது கதறியதை விட, பதிமூன்று நாட்களுக்குப் பிறகு மகன், மருமகள் இருவரும் அவசியம் போயே ஆகவேண்டும் என்ற கட்டத்தில் நேற்று பகல் போன பின் இத்தனைப் பெரிய வீட்டின் தனிமையும் இழந்த குழந்தையின் “மம்மா” என்ற இதயக் குரலும் என்னை நிலை குலைய வைத்துவிட்டது.
அப்படிப்பட்ட மிக மெல்லிய தருணத்தில் தான் ஸ்டெல்லா ப்ரூஸின் நினைவு வந்தது. அவரும் இப்படித்தான் தவித்திருப்பாரோ என்று தோன்றியது. தோன்றியதை மறைக்காமல் வெளிப்படுத்தி விடும் பழக்க தோஷம் வெளிப்படுத்தி விட்டேன்.
ஒரு நிமிடம் நான் அப்படி உணர்ச்சி வசப்பட்டது எவ்வளவு நிஜமோ அதிலிருந்து மீண்டு விட்டதாக நினைப்பதும் நிஐம்.
எத்தனை வயதானால் என்ன… பிரிவு பிரிவுதானே…” என எழுதியுள்ளார் இந்துமதி.