No menu items!

பாஜக கூட்டணியின் முதல் விக்கெட்?

பாஜக கூட்டணியின் முதல் விக்கெட்?

மத்தியில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைத்து முழுமையாக ஒரு வாரம்கூட முடியவில்லை. அதற்குள்ளாகவே அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, ஒரு கட்சி கழன்று போவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் அந்த கட்சி.

தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மோதல்கள் வரத் தொடங்கியது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் பாராமதி தொகுதி.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய தொகுதியாக பாராமதி இருக்கிறது. இந்த தொகுதியில் இம்முறை தேசியவாத காங்கிரஸ் சார்பாக தனது மனைவி சுநேத்ரா பவாரை நிறுத்தியிருந்தார் அஜித் பவார். அவரை எதிர்த்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே நிறுத்தப்பட்டிருந்தார். இவர் சரத் பவாரின் மகள். சரத் பவாரும், அஜித் பவாரும் மானப் பிரச்சினையாக கருதிய இந்த தொகுதியில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார். இது அஜித் பவாருக்கு பெரிய அவமானமாகி விட்டது. தனது மனைவியின் வெற்றிக்காக தேசிய ஜனநாயக கட்சித் தலைவர்கள் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என்று அஜித் பவார் குற்றம் சாட்டினார். மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றதும் அவரது அதிருப்திக்கு காரணமாக இருந்தது.

இப்படி தேர்தல் முடிவுக்கு பின் ஏற்பட்ட கருத்து மோதல், மந்திரிசபை அமைத்த பிறகு மேலும் அதிகமானது. மத்திய மந்திரிசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துணை அமைச்சர் பதவியை தருவதாக பாஜக தலைமை சொன்னது. ஆனால் தங்கள் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலுக்கு காபினெட் அமைச்சராகத்தான் பதவி வேண்டும் என்று கூறி அதை ஏற்க மறுத்தது தேசியவாத காங்கிரஸ் கட்சி.

இந்த சூழலில் இப்போது இந்த கூட்டணிக்கு மூன்றாவதாக ஒரு சிக்கல் வந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால்தான் இந்த தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த்து என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இப்பத்திரிகையில் அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ரத்தன் சார்தா எழுதியுள்ள கட்டுரையில், ”பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியில் ஏற்கனவே பெரும்பான்மை பலம் இருக்கும் போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்தது தேவையற்ற அரசியல்.

சரத் பவார் இன்னும் 2-3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பார். அப்படி இருக்கும்போது ஏன் இதுபோன்ற ஒரு தவறான முடிவு எடுக்கப்பட்டது? பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்த்து பாஜக போராடி வருகிறது. அஜித் பவாருடன் கூட்டணி வைத்து பாஜக தனது மதிப்பை குறைத்துக்கொண்டது. அதோடு இந்த செயல் பாஜக தொண்டர்களை காயப்படுத்தி இருக்கிறது. தேவையற்ற அரசியலுக்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மகாராஷ்டிர அரசியலில் புதிதாக ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. இந்த கட்டுரையைத் தொடர்ந்து, தங்களுக்கு எந்த விதத்திலும் உதவாத தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவது பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் யோசித்து வருகிறார்.

ஆக கூடிய விரைவில் தேசிய ஜனநாயாக கூட்டணியில் இருந்து ஒரு விக்கெட் காலியாகப் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...