சினிமாவில் 25 ஆண்டுகளை தொட்ட இயக்குனர் பாலாவுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடந்தது. கூடவே, அருண்விஜயை வைத்து அவர் இயக்கிய வணங்கான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்யராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா உட்பட பலர் வாழ்த்தினர். நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி ஆகியோரும் இந்நிகழ்ழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள். அதே போல தான் இப்போதும் நடந்தது.
அவருடைய அவன் இவன் பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் என் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன்தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்” என்றார்