கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜெயம்ரவி, நித்யாமேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. அந்த விழாவின் பேனர்களில் ஹீரோ ஜெயம்ரவியின் பெயருக்கு முன்னால், ஹீரோயின் நித்யாமேனன் பெயர் இருந்தது.
பொதுவாக, இந்திய படங்களில் ஹீரோ பெயர்தான் முதலில் இருக்கும். அடுத்துதான் ஹீரோயின் பெயர் என நடைமுறை இருக்கிறது. இந்த படத்தில் உல்டா ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இது குறித்து விழாவில் கலந்துகொண்ட நித்யாமேனனிடமே கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நித்யாமேனன் ‘‘நான் இதற்குமுன்பு பல பெண் இயக்குனர்களிடம் பணிபுரிந்து இருக்கிறேன். இப்போது கிருத்திகா இயக்கத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் கதை பெண்கள் சம்பந்தப்பட்டது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை இது. ஒரு பெண் இயக்குனரே இயக்கி இருக்கிறார் என்பதால் என் பெயரை முதலில் படக்குழு விளம்பரப்படுத்துகிறது.
அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. சினிமாவிலும் இருக்கிறது. ஒரு படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், அவர் பெயர் முன்னால் வருவது இல்லை. அந்த விஷயத்தில் கிருத்திகா புது முடிவை எடுத்து இருக்கிறார். அதேசமயம், இப்படி விளம்பரப்படுத்த சம்மதித்த ஹீரோ ஜெயம்ரவிக்கும் நன்றி. இது சந்தோஷம் அளிக்கும் முடிவு.
ஓகே கண்மணிக்குபின் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிக்கிறேன். திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கேரக்டருக்கு தேசியவிருது கிடைத்தது. இந்த படம் ஒரு வித்தியாசமான காதல் கதை” என்றார்
டைட்டடில் நித்யா மேனன் பெயர் முதலில் வந்தது பற்றி ஜெயம்ரவியிடம் கேட்டபோது ‘‘நித்யாமேனனுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்துவார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது 4வது படம். நான் முதல்முறையாக பெண் இயக்குனர் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நித்யாமேனன் பெயர் முதலில் வருவது. ஒருவகையிலான மரியாதை’’ என்றார்.
‘‘காதல் திருமணம் செய்த நீங்களே, காதலிக்க நேரமில்லை’’ என்ற தலைப்பில் படம் எடுக்கலாமா என்று கிருத்திகா உதயநிதியிடம் கேட்டபோது ‘‘ அப்ப காதலிக்க நேரம் இருந்தது. இப்ப, நேரம் இல்லை. ஆனாலும் இந்த கதை காதல் சம்பந்தப்பட்டது. உதயநிதியை வைத்து படம் இயக்கிற வாய்ப்பு போய்விட்டதே என்று நினைக்கவில்லை. அது முடிந்துபோன விஷயம்’’ என்றார்.