ஆத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறார் சிபிராஜ். ஒரு பெண் கடத்தப்பட்டதாக அவருக்கு தகவல் வர, அந்த சம்பவம் குறித்து விசாரிக்கிறார். அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் ஒரு தனியார் பஸ்சில், ஒரு பெண்ணுக்கு துன்புறுத்தல் நடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வருகிறது.
அந்த பஸ்சை போலீசார் துரத்த, அந்த பஸ்சில் ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. பஸ் பயணம் செய்தவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து வந்து சிபி விசாரிக்கிறார். அந்த இளைஞன் யார்? அவரை கொலை செய்தது யார்? காரணம் என்ன? கடத்தப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டாரா? அந்த பஸ்சில் நடந்த சம்பவம் என்ன என்பதை 10 மணி நேர விசாரணையில் போலீசார் கண்டுபிடிப்பதே கதை . இளையராஜா கலியபெருமாள் இயக்கியிருக்கிறார். ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
ஒரு இரவில் கதை தொடங்கி, 10 மணி நேரத்தில் படம் முடிகிறது. பெண் கடத்தல், இளைஞன் கொலை சம்பந்தமான போலீஸ் விசாரணைதான் படத்தின் பெரும்பாலான காட்சிகள். அதை விறுவிறுப்பாக, சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, அவரா? இவரா என்று கொலையாளி குறித்த சந்தேகங்கள், அவ்வப்போது நடக்கும் திருப்பங்கள் படத்தை ரசிக்க வைக்கிறது. கம்பீரமான போலீஸ் இன்ஸ்பெக்டராக, ஒவ்வொரு சந்தேகத்தை கிளப்பி, அதன் மூலம் விசாரணையை தீவிரப்படுத்துபவராக சிபிராஜ் நன்றாக நடித்து இருக்கிறார். மறுநாள் காலை சபரிமலைக்கு செல்ல வேண்டியவர், அந்த இரவுக்குள் குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்? எப்படி யோசிக்கிறார் என்ற திரைக்கைத புதுசு.