No menu items!

அரசு இலச்சினை, தமிழ்நாடு வார்த்தையை தவிர்த்துவிட்டு முதல்வருக்கு அழைப்பு அனுப்பிய ஆளுநர்!

அரசு இலச்சினை, தமிழ்நாடு வார்த்தையை தவிர்த்துவிட்டு முதல்வருக்கு அழைப்பு அனுப்பிய ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் வரும் 12ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் என்று உள்ளது. அதாவது, அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆளுநர் உரை முடிவதற்குள், எதிர்ப்பு தீர்மானம் தயாரானது எப்படி?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று உரை ஆற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி சில வரிகளை தவிர்த்த நிலையில், அதற்கு எதிரான தீர்மானம் முதலமைச்சர் ஸ்டாலினால் எப்படி உடனடியாக கொண்டுவரப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023ஆம் ஆண்டின் முதலாவது கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆளுநர் உரையின் வரிகள் சட்டப்பேரவையில் உள்ள எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அவர் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட வரிகளை தவிர்த்ததால், தொடர்ந்து உரையை எல்இடி திரையில் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, ஆளுநர் உரையை டேப்லெட்டில் பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநர் சில வரிகளை தவிர்ப்பதை கவனித்தனர்.

ஆளுநர் 30 நிமிடங்கள் உரையாற்றியிருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன், பேரவை செயலாளர் ஸ்ரீநிவாசனுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 45 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர் தனது உரையை காலை 10.48க்கு முடித்தார். ஆளுநர் தனது உரையை முடித்த நிலையில், அதன் தமிழாக்கத்தின் சுருக்கத்தை, ஆளுநர் தவிர்த்த பத்திகளுடன் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அது காலை 11.31 மணிக்கு முடிவடைந்தது. இந்த இடைவெளியில் ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானம் தயாராகிவிட்டது.

முதலமைச்சரை சபாநாயகர் பேச அழைத்த நிலையில், நிலைமையை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எம்.எல்.ஏ.க்களுடன் அவையிலிருந்து வெளியேறினார். இதனிடையே, தமிழில் முழு பரிச்சயம் இல்லாத ஆளுநர், முதலமைச்சர் என்ன பேசுகிறார் என தனது உதவியாளரிடம் கேட்டறிந்தார். தனது உரைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அறிந்த ஆளுநர் உடனடியாக பேரவையிலிருந்து வெளியேறினார். ஆளுநர் வெளியேறுகையில் தமிழ்நாடு வாழ்க என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்ட நிலையில், பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர்.

சட்டப்பேரவை தீர்மானம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் தனித்தனியாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழ்நாடு சட்டப்பேரவை குறிப்பில் தனது திருத்தப் பேச்சு இடம்பெறாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று மாலை அவர் மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நேற்று என்னென்ன நடந்தது என்பது பற்றி டெல்லி மேலிடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமாக எழுதி அனுப்பி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அந்த விளக்கத்தில் அவர் எதையெல்லாம் படிக்காமல் தவிர்த்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட நிபுணர்களின் உதவியையும் ஆளுநர் ஆர்.என். ரவி நாடி இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நேற்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பேரவையில் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது: திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சட்டப்பேரவையில் திமுகவின் எந்த ஒரு உறுப்பினரும் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...