தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டங்களை மொழிபெயர்க்கும் பணி நடந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழில் மருத்துவக் கல்லூரி திறக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டங்களை மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முதலாம் ஆண்டு பாடப் புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு நடந்து வருகிறது. தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிபேட்டை உள்பட 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் நிறுவ முன் அனுமதி கேட்டுள்ளோம் மருத்துவ கல்லூரிகளை நிறுவ அனுமதி கிடைத்தவுடன், தமிழ்வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும்” என்றார்.
ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தார்.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தற்கொலையா? இல்லையா? என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய XBB வகை கொரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றான XBB என்ற தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. GISAID (Global Initiative on Sharing Avian Influenza Data) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாக இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ” வைரஸ்களின் உருமாற்றம் என்பது பொதுவானது தான். தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை. கொரோனா பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் மோடி அரங்கு விரைவில் திறப்பு
இந்தியாவின் பிரதமர்களுக்காக தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.270 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி முர்க் பகுதியில் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார்.
இதில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை 14 பிரதமர்களுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்கங்களில் முன்னாள் பிரதமர்களின் போட்டோக்கள், உரைகள், வீடியோக்கள், பேட்டி கள், ஒரிஜனல் எழுத்துக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதமர் மோடிக்கும் அரங்கம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அரங்கம் பொது மக்களின் பார்வைக்கு அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது.