தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை பயப்படாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தயாரிப்பாளர் கே.ராஜன். கடந்த ஆண்டு 241 படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 18 படங்கள் மட்டுமே வெற்றி. மற்றபடி, தமிழ் சினிமாவுக்கு பல கோடி இழப்பு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கே.ராஜன்
கண்நீரா பட விழாவில் இது தொடர்பாக கே.ராஜன் பேசியதாவது…
கணவன், மனைவி சேர்ந்து இந்த படத்தை எடுத்துள்ளார். அதிலும் மலேசியாவில் படத்தை எடுத்து தமிழ் நாட்டில் வெளியிடுகிறார்கள். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும்.
கடந்த 10, 15 ஆண்டுகளாகத் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இப்போது கூட ஒரு கல்லூரியில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கம் இது போன்ற விஷயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பைப் பற்றி அதன் அவசியம் பற்றி பேசியிருக்கும் இந்த கண்நீரா படம் பெரிய வெற்றி பெறட்டும். சினிமா சில நேரங்களில் நன்றாக இருக்கிறது பல நேரங்களில் நன்றாக இல்லை. கடந்த வருடம் தமிழ் சினிமா ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. மக்கள் சின்னப்படங்களுக்கு செலவு செய்வதில்லை.
பலரால் படம் எடுக்க முடிகிறது ஆனால் வியாபாரம் இல்லை. படத்தை வெளியிட பணம் இல்லாமல் 200 படங்கள் அப்படியே நிற்கிறது. சின்னப்படங்களுக்கு திரையரங்குகளில் தனி விலை வையுங்கள். சின்னப்படங்களுக்கு 40, 50,70 என டிக்கெட் விலை வையுங்கள். அப்போதுதான் மக்கள் வருவார்கள்.
சின்னப்படங்கள் நன்றாக இருந்தால் ஓடுகிறது.
எப்போதும் பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் அதிகம் ஜெயிக்கிறது. அதன் வெற்றிக்குக்கு மீடியாக்கள் காரணமாக இருக்கின்றன. சின்னப்படங்கள் என்றாலும், நல்ல விமர்னம் வந்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள்.

                                    

