காஜல் அகர்வால், நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, ரகுல் ப்ரீத் சிங், வரலட்சுமி என ஓவ்வொருவராக திருமணம் செய்து கொள்ள, இந்த வரிசையில் இப்போது உடனடியாக இணைய இருப்பவர்கள் தாப்ஸி மற்றும் நிலா
தாப்ஸிக்கு ஏப்ரலிலும், நிலாவுக்கும் இந்த மாதமும் திருமணம் நிச்சயமாகி இருக்கின்றன.
இந்த வரிசையில் கூடிய சீக்கிரமே சேர இருப்பவர் தமன்னா.
தமன்னாவுக்கும் அவருடைய ஆண் நண்பர் விஜய் வர்மாவுக்கும் இடையில் பத்திக்கொண்ட காதலை இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவே இல்லையே தவிர, இவர்கள் இருவரும் வெளியேயே தெரியாமல் விடுமுறை கொண்டாட்டங்களில் மும்முரமாக இருக்கிறார்கள்.
எவ்வளவு நாள்தான் இப்படியே காலத்தை ஓட்டுவது என்று யோசித்த இருவரும் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகிறார்கள். தமன்னா வீட்டிலும், விஜய் வர்மா வீட்டிலும் கல்யாணத்திற்கு எதிர்ப்பு இல்லையாம்.
இதனால் வெகு சீக்கிரமே தமன்னா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி திருமணம் பற்றி பேச்சு கிளம்பினாலும், புதிய பட வாய்ப்புகள், ஒடிடி சிரீஸ் வாய்ப்புகள் என தமன்னா எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டபடியே இருக்கிறார் இதற்கு என்ன அர்த்தம் என்றால், திருமணத்திற்குப் பிறகும் ஆலியா பட், திபீகா படுகோன் மாதிரி தொடர்ந்து நடிக்கப் போகிறாராம்.
காதலில் கசிந்து உருகும் விஜய் வர்மா இதற்கு மறுப்பு சொல்லவில்லை என்கிறார்கள்.
விஜய் இடத்தைப் பிடிக்க சூர்யா – விக்ரம் போட்டி
விஜய் – அஜித் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக, பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளுவதில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தாலும், இவர்கள் இருவருக்கும் பான் – இந்தியா மார்க்கெட் எதுவும் இல்லை.
ஆனால் தெலுங்கு நட்சத்திரங்களில் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ராஷ்மிகா மந்தானா என நாலைந்து பேராவது இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினியைத் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக்கொள்ளுமளவிற்கு இல்லை. கமல் இப்பொழுதுதான் ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட ஆரம்பித்திருக்கிறார்.
இந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள, சூர்யாவும், விக்ரமும் திட்டமிட்டு வருகிறார்கள்.
சூர்யா ‘கங்குவா’ படத்தையும், விக்ரம் ‘தங்கலான்’ படத்தையும் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் கங்குவா அதிக மொழிகளில் வெளியாக இருக்கிறது. தங்கலான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும். இந்த இருவருக்கும் இந்தப் படங்கள்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள்.
இவர்கள் இருவரின் குறிக்கோள் தெலுங்கு மற்றும் மலையாள மார்க்கெட்டில் தங்களை நிலைநிறுத்துவதுதானாம். விஜய்க்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிப்பதில்தான் இப்போது எல்லோருடைய கவனமும் இருக்கிறது. இந்த ரேசில் யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது கங்குவா அல்லது தங்கலான் வெற்றியைப் பொறுத்தே அமையும்.
தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ இந்த இருப்படங்களும் தெலுங்கில் பல காரணங்களால் வெளியாகவில்லை. அதற்குள் ஒடிடி-யில் வெளிவந்துவிட்டன. இதனால் தனுஷ், சிவகார்த்தியேன் இருவருக்கும் பெரும் பின்னடைவு உண்டாகிவிட்டது. இது போன்ற பிரச்சினை தங்களுடைய படங்களுக்கும் வந்துவிட கூடாது என பக்காவாக திட்டமிட்டு வருகிறார்கள்.
சூர்யாவும், விக்ரமும் பான் – இந்திய தமிழ் நடிகர்களாக திட்டமிட்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இரு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட முயற்சி செய்யாதீர்கள் என்று விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.ஒரே நேரத்தில் வெளியிட்டால் இரண்டு படங்களுக்குமே வசூலில் பாதிப்பு உண்டாகும் என்பதால்தான் இந்த வேண்டுகோளாம்.
இந்த இரு படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள், விஎஃப்எக்ஸ் பணிகள் அதிக காலம் பிடிக்கிறதாம். இதனால் இவற்றின் வெளியீடும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி இந்த இரு படங்களின் வெளியீடு குறித்த தெளிவான பார்வை அவற்றின் தயாரிப்பாளர்களுக்கே இல்லை என்கிறார்கள்.
சத்குருவின் நடிகர் அவதாரம்
சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், ஆடுவார். பாடுவார். ஓடுவார். இப்படி ரொம்பவே உற்சாகமாக இருப்பார்.
இவ்வளவு பரபரப்பாக, தன்னை அழகாக வெளிப்படுத்திக் கொள்ளும் இவரை எப்படி இவ்வளவு நாட்கள் சினிமாகாரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அவரையும் மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்துவிட்டார்கள்.
இந்த காரியத்தை பண்ணியது பாலிவுட்டும் அல்ல, டோலிவுட்டும் அல்ல, நம்ம கோலிவுட்டும் அல்ல. ஆங்கில படங்களை எடுக்கும் ஹாலிவுட்தான் இந்த புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கிறது.
’This Is Me Now: A Love Story’ என்ற ஆங்கிலப் படத்தில்தான் ஜக்கி வாசுதேவ் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார். நல்லவேளை இவரை ஒரு குருவாகவே காட்டியிருக்கிறார்கள்.
இதில் ஹாலிவுட்டின் கனவுக்கன்னிகளில் ஒருவரான ஜெனிஃபர் லோபஸ் உடன் திரையில் தோன்றும் ஜக்கி உறவுகளின் பிரச்சினைகளைப் பற்றி தனது பாணியிலேயே பேசும் காட்சி அது. உறவுகளையும், காதலையும் பற்றிய கருத்துகளை கூறுவது போன்ற காட்சியில்தான் ஜக்கி வாசுதேவ் நடித்திருக்கிறார். இதில் பேட் மேன் ஆக நடித்த பென் அஃப்லெக்கும் நடித்திருக்கிறார்.