செங்கோட்டையில் 1920-ல் பிறந்து கோடம்பாக்கம் கலைக்கோட்டையில் நடிப்புக் கொடியை ஏற்றி புகழ் பெற்றவர் எஸ்.வி.சுப்பையா.
செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்தா பாய்ஸ் கம்பெனி நாடக குழுவில் தன் 11-வது வயதில் சேர்ந்தார் எஸ்.வி.சுப்பையா. பிறகு டிகேஎஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா சபா, சக்தி நாடக சபா என்று பல சபாக்களில் நடித்து பேர் சொல்லும் நாடக நடிகரானார். 1946-ல் ‘ விஜயலட்சுமி’ என்ற படத்தில் அறிமுகமானார்.
‘ரம்பையின் காதல்’, ‘நானே ராஜா’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘அமரன்’, ‘நாலு வேலி நிலம்’, ‘வாழ வைத்த தெய்வம்’, ‘பாகப்பிரிவினை’ உள்ளிட்டவை அவர் குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்த படங்கள்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது ‘யாருக்காக அழுதான்’ படத்தில் சுப்பையாவை நடிக்கவைக்க விரும்பினார். இதற்காக அவரைத் தேடிச் சென்ற அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
அதில் , “யாருக்காக அழுதான் படத்தில் கோவிந்தசாமி நாயுடு என்ற பாத்திரத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்ய விரும்பினேன். அதற்காக அவரைத் தேடி சென்னைக்கு வெளியே ரெட்டில்ஸில் ஒரு ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள அவரது கிராமத்து வீட்டுக்கு போனேன். என்னிடம் அன்பு காட்டிய அவர், ஓர் இரவு முழுவதும் அங்கேயே தங்கச் செய்தார். அந்த சந்திப்பின்போது அவர், ‘அந்த கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான ‘சோசப்பு’ வேடத்தைக் கொடுப்பதாக இருந்தால் அது பற்றி என்னிடம் பேசுங்கள். இல்லாவிட்டால் நாம் நண்பர்களாகவே பேசிக் கொண்டிருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்பையா சொந்தமாக படம் தயாரிக்க ஆசைப்பட்டார். “நான் படம் எடுத்தால் ஜெயகாந்தனின் ‘கை விலங்கு’ நாவலை வாங்கி படமாக்குவேன்’ என்றார். அந்தக் கதையை ஜெயகாந்தனிடம் கேட்டபோது, “ திரைக்கதை. வசனம் எழுதுவது என்றெல்லாம் என்னிடம் எதிர் பார்க்கக் கூடாது. சினிமா துறையிலுள்ள யாரையாவது வைத்து எழுதிக்கொண்டு படப்பிடிப்புக்கு முன்னதாக என்னிடம் காட்ட வேண்டும்” என்ற நிபந்தனையோடு கை விலங்கு நாவலை கொடுத்தாராம் ஜெயகாந்தன்.
“பாரதி. அபிராமி பட்டர் வேடங்களாகட்டும் விவசாயி. வேலைக்காரன். பாத்திரங்களாகட்டும், அதைக் கையாளும்போது இயற்கையாக.. பார்ப்போரை கலங்கச் செய்யும் விதத்தில் எமோஷனலாகி விடுவது இவரது அற்புதபாணி. உண்மையில் இவரின் சுபாவமே அதுதான். ரொம்பவும் சென்சிடிவ் ரகம். தன்மானம் மிக்கவரும் கூட.
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பேப்பரில் எதையும் எழுதாமல் வாயாலேயே நீண்ட வசனங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பதில் திறமைசாலி. 10 வரி வசனங்களை. முதலில் சொல்லிவிட்டு. சுப்பையா மனப்பாடம் செய்து தயாராகும் போது, “ ஏழாவது வரியை நாலாவதாகச் சொல்லுங்க. 4 வது வரியை ஏழாவதாக வெச்சுக்கோங்க. ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார். இந்த அதிரடியில் குழம்பிப்போய் எஸ்விஎஸ் என்ற நிலையில் நின்ற சில நொடியில். வீராசாமி நீயே இதை பேசுப்பா என வசனங்களை பக்கத்தில் இருந்த நடிகருக்கு கொடுத்து பேச சொல்லி படம் எடுத்துவிட்டார். அந்த அதிர்ச்சியிலும். அவமானத்திலும் உறைந்து போன சுப்பையா நீண்ட நாட்களுக்கு அவர் முகத்தில் விழிக்கவே இல்லை.
எல்லோரின் எச்சில் இலைகளையும் மின்னல் வேகத்தில் சேர்த்து எடுத்துப் போய் குப்பை கூடையில் போட்டு விடுவார், தான் என்ற அகந்தை தலை எடுக்காமல் செய்ய இதுதான் சிறந்த வழி என்பார் இதெல்லாம் சினிமா உலகில் மாபெரும் அதிசயம் இது.
காவல் தெய்வம் படத்தில் சாமுண்டி கிராமினி பாத்திரத்தில் சிவாஜி நடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டதும் அவர் நடித்துக் கொடுத்தார். பணம் கொடுத்தபோது அதை வாங்க மறுத்து விட்டார் சிவாஜி.
“அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறந்து சிவாஜிக்கு நன்றி கடனை தீர்ப்பேன்’ என்று நெகிழ்ந்து போய் பத்திரிக்கையில் சொன்னார் சுப்பையா.
சிலர் சோதனைகள் வரும்போது கடவுளை திட்டுவார்கள். சுப்பையாவுக்கும் அத்தகைய குணம் உண்டு. ‘கால் வலிக்க நடந்தேன். வந்து உன்கிட்ட சண்டை போறேன்டா” என்று சென்னையில் இருந்து திருப்பதிக்கு தன்னந் தனியாக நடந்தே செல்வார்.
” எத்தனையோ படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்திருந்தாலும் கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாராக எஸ்.வி.சுப்பையா நடித்திருந்த சிறப்பை பாரதியாரின் நினைவு வாழும் வரை இலக்கிய சுவைஞர்கள் மறக்க மாட்டார்கள்” என்பது அறந்தை நாராயணனின் வாக்கு மூலம்.
அவர் அத்தனை எதார்த்தமாக பாரதியார் வேடத்தில் வாழ்ந்து காட்டினார். எனவே பாரதி சுப்பையா என்றே பலரும் அவரை குறிப்பிட்டனர்.
ஜெயகாந்தனின் “பிரம்மோபதேசம்” சிறுகதையை வாங்கி குருவே தெய்வம் என்று பெயரிட்டு படத்தை தானே டைரக்டர் செய்து 6000 அடிகள் வரை எடுத்தார். சங்கர சர்மாவாக அவரும். ஓதுவராக சிவக்குமாரும் நடித்தனர். சுப்பையாவின் இலட்சியப்படமான குருவே தெய்வம் வெளிவராமலே போய்விட்டது.