ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியாஆனந்த் நடிக்கும் படம் ‘சுமோ’. தலைப்பிற்கு ஏற்ப, ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரரான யோஷினோரி தஷிரோ முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தமிழகம் மற்றும் ஜப்பானில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். ஐசரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்கிறது. ஏப்ரல் 25ல் படம் ரிலீஸ்
பட ரிலீசை முன்னிட்டு சென்னை வந்துள்ள மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ அளித்த பேட்டி:
‘‘நான் ஜப்பானில் பாரம்பரிய மல்யுத்த வீரராக இருக்கிறேன். என்னுடைய இப்போதைய எடை 170 கிலோ. இதற்கு முன்பு பலமுறை இந்தியா வந்துள்ளேன். சில சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் முதல் சினிமா இது. குழந்தைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஏன் சென்னை வருகிறேன். சிவா எனக்காக ஏன் உதவுகிறார். எங்களுக்குள் என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை நகர்கிறது. சிவாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் என்னை இப்போது, அகில உலக சூப்பர்ஸ்டார் சுமோ என அழைத்துக்கொள்கிறேன். எனக்கு தமிழ் தெரியாது. ஒரு மொழி பெயர்ப்பாளர் மூலமாக தமிழை, வசனங்களை, காட்சிகளை புரிந்துகொண்டு நடித்தேன். மாமல்லபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வியந்தேன். அதைத் தள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது.
சென்னை வந்தால் இட்லி, தோசை விரும்பி சாப்பிடுவேன். 100 இட்லி, 50 சப்பாத்தி சாப்பிடுவேன். எப்போதும் பட்டர் சிக்கன் எனக்குப் பிடிக்கும். இந்தப் படம் தொடங்கிய போது ஜப்பானில் உள்ள சிவன் கோயிலில் ஆசிபெற்றேன். இப்போது படக்குழு சார்பில் எனக்கு சிவன் போட்டோ சென்டிமென்ட்டாக கொடுத்தார்கள். தமிழ் படங்கள் பார்க்கிறேன். குறிப்பாக, எனக்கு ‘காதல் கசக்குதய்யா’ பாடல் அதிகம் பிடிக்கும். அதைக் கேட்டுக்கேட்டே நானும் பாடத் தொடங்கிவிட்டேன். நான் மிருகங்களுக்கு பயப்பட மாட்டேன். ஆனால், ஈயை பார்த்தால் ஓடிவிடுவேன். ஈ என்றால் எனக்கு அவ்வளவு பயம். நன்றி, வணக்கம் போன்ற வார்த்தைகளை இங்கே அடிக்கடி பயன்படுத்துகிறேன்.