பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளான இறை தூதர் குறித்து தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் பூதாகரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. ஆனாலும், சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடபாக 6-ம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், “நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை: நுபுர் சர்மாவுக்கு கங்கனா ரனாவத் ஆதரவு
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து கூறிய கருத்து சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நுபுர் சர்மாவுக்கு அவரது கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக சமத்துவபுரத்தின் முன் பகுதியின் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, அங்கன்வாடி மையம், விளையாட்டுமைதானம், ரேசன்கடை, முன்னாள் அமைச்சர் கே. மாதவன் நினைவு நூலகம் உள்ளிட்டவைகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருப்பத்தூர் அருகே உள்ள காரையூருக்கு புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு நடந்த அரசு விழாவில் 59,162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
பப்ஜி விளையாடுவதை தடுத்ததால் ஆத்திரம்: தாயை சுட்டுக்கொன்ற சிறுவன்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டுக்கு வந்த பிறகும் செல்போனில் பப்ஜி விளையாடுவதே அவனது வாடிக்கையாக இருந்திருக்கிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அவனது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளது. இதனையடுத்து, வீட்டில் பப்ஜி விளையாட அவனது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் சில தினங்களாக அவன் கடும் அதிருப்தியிலும் மன உளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு யாருக்கும் தெரியாமல் சிறுவன் செல்போனை எடுத்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதனை பார்த்த அவனது தாய், செல்போனை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தாயாரை நோக்கி சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது
குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில், நேற்று இரவு 8 மணியளவில் சிவம் (வயது 2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் பக்கத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 20- 25 அடி ஆழத்தில் சிக்கினான்.
இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10.45 மணியளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.