உலகம் முழுவதும் வாசகர்களிடையே பிரபலமான ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 86 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த இதழ், 30 ஏப்ரல் 24 அன்று மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 2024 இதழே கடைசி இதழ். ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில், ‘Reader’s Digest’ இதழுடனான தங்கள் பயணங்களை பல தமிழ் எழுத்தாளர்கள் பகிர்ந்துள்ளார்கள். அது இங்கே…
மனது கலங்கிவிட்டது – மாலன்
ஏப்ரல் இறுதியோடு என் அபிமானப் பத்திரிகை ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ நின்றுவிட்டது. டிஜிட்டல் தொழில் நுட்பம் தின்றுவிட்ட இன்னொரு அச்சு இதழ். 86 வருடங்கள் வாழ்ந்த இதழ். நான் அதனோடு வளர்ந்தேன். அதனால் வள்ர்ந்தேன்.
‘குமுதம்’ ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியரும் ஓர் ஆதர்சப் பத்திரிகையை வரித்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி எங்கள் ஐவரிடமும் கருத்துக் கேட்டார். அவரவர் அவர்கள் மனதுக்குத் தோன்றியதைச் சொன்னார்கள். நான் சொன்னது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
அந்தாணடு ‘குமுதம்’ தீபாவளி இணைப்பிதழ்களில், அசோகமித்ரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’, நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்’, எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ உட்பட இலக்கிய நாவல்களின் சுருக்கங்கள் வெளியாயின. ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று புத்தகச் சுருக்கம்.
விடைபெறும் செய்தியோடு ‘Reader’s Digest’ ஆசிரியர் Elizabeth Vaccariello புத்தகம் என்னவெல்லாம் செய்யும், புத்தகங்களைத் தின்னும் டிஜிட்டல் நுட்பம் பற்றி ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். அதில் வசனம் என்று ஒரு சொல் கூடக் கிடையாது. பார்த்த நிமிடம் மனது கலங்கிவிட்டது.
வருத்தமாக இருக்கிறது 😥 – கவிஞர் தாமரை
கல்லூரி முதலாண்டில் அறிமுகமான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ என்னை வளர்த்த முக்கியமான ஆங்கில இதழ். சந்தா கட்டி பல ஆண்டுகள் படித்த இதழ். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவும், வெளிநாட்டு வாழ்க்கை/ வழக்குகளை அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவிய இதழ்.
சமரனுக்கு (மகன்) ஒரு பிறந்தநாளில் சந்தாவாகப் பரிசளிக்க விரும்பினேன். ஏனோ அவன் ஆர்வம் காட்டவில்லை. வியப்பமாக (surprise) அளிப்போம் என முயன்றால், இணைய வாயிலாக அதைச் செய்ய முடியவில்லை. அல்லது எனக்கு செய்யத் தெரியவில்லை.
இதழ் நின்று போனது வருத்தமாக இருக்கிறது 😥.
நண்பனின் பிரிவு போல மனம் கனக்கிறது – பட்டுக்கோட்டை பிரபாகர்
கல்லூரி முடித்த பருவத்தில் பல வருடங்கள் சந்தா செலுத்தி படித்து வந்திருக்கிறேன். வடிவம், நேர்த்தி, அச்சுத்தாளின் தரம், அச்சின் தரம், கட்டுரைகளின் தரம் என்று சிறப்பாய் இருக்கும். அப்படியே அடுக்கி வைப்பேன். எடைக்குப் போட்டதில்லை. எல்லாப் பத்திரிகையாளருக்குமே ஆதர்சம்.
சாவி சார் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போல ‘பூவாளி டைஜெஸ்ட்’ என்று ஒரு இதழ் கொண்டுவர ஆசைப்பட்டார்.
நண்பனின் பிரிவு போல மனம் கனக்கிறது. ‘Reader’s Digest’ ஆசிரியர் Elizabeth Vaccariello வெளியிட்டுள்ள காணொளியின் ஒவ்வொரு காட்சியும் கலங்கடிக்கிறது. ஏதும் செய்யவியலா இயலாமை மெளனக் கோபம் தருகிறது.
அச்சு இதழ்களின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது – அதிஷா
‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ எனக்கு மிகப் பிடித்த இதழ்களில் ஒன்று. முழுக்க முழுக்க வாசகர் துணுக்குகளால் நிறைந்திருக்கும். உடல்நலம், ஃபேஷன், மனநலம், மோடிவேஷன் என எல்லாம் கலந்துகட்டி நிறைவான லைஃப் ஸ்டைல் இதழாக இருக்கும். என்னுடைய நாம் ஏன் உடற்பயிற்சியை கைவிடுகிறோம் என்கிற நூல் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ கட்டுரைகளின் பாணியில் எழுதப்பட்ட நூல்தான்.
‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ நின்றுவிட்டது வருத்தம்தான். சில மாதங்களுக்கு முன்புதான் ‘நேஷனல் ஜியாகிரபிக்’ இதழ் நிறுத்தப்பட்டது. அப்போதும் வருத்தமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு அச்சிதழாக நிறுத்தப்படும் செய்திகள் வேதனை தரத்தான் செய்கின்றன.
இன்று சினிமா செய்திகளோ அழகு குறிப்போ, சமையல் குறிப்போ, தன்னம்பிக்கையோ, மனநலம் உடல்நல சிக்கலோ, அறிவியலோ, ஆராய்ச்சியோ அனைத்தையும் பற்றி யூடியூபில் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான வீடியோக்கள், பாட்காஸ்ட்கள், கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. எதற்கும் காசு கொடுக்க வேண்டாம். விளம்பரங்களோடு பார்க்க கடினமாக இருந்தால் மாதம் 100 ரூபாய் கட்டினால் அந்த விளம்பரங்களும் வராது. சினிமா பேட்டிகள், அரசியல் கருத்துகள், க்ரைம் செய்திகள், கிசுகிசுக்கள், கதைகள், கவிதைகள் எல்லாமே கிடைக்கிறது.
கடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் சமையல் நூல்கள் மற்றும் அழகு குறிப்பு நூல்கள் விற்பனை ஆகாமல் கிடைந்ததையும், அதையெல்லாம் வந்தவிலைக்கு தள்ளிவிட்டுக்கொண்டிருந்த பதிப்பாளர் ஒருவரையும் பார்த்தேன். எது எடுத்தாலும் பத்து என்றார். அப்போதும்கூட அதை சீண்ட ஆள் இல்லை. இதுதான் ஹெல்த் அன்ட் லைஃப் ஸ்டைல் புத்தகங்கள் சந்தை நிலவரம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு கூட பேருந்தோ ரயிலோ ஏறினால் பத்து பேரில் ஐந்து பேர் கைகளில் நாளிதழோ வாரமாத இதழோ இருக்கும். குறைந்த பட்சம் எதாவது புத்தகம் இருக்கும். ஆனால், இன்று எல்லோரும் மொபைல் பார்க்கிறார்கள். காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள், பயணங்களில் படம் பார்க்கிறார்கள், வீடியோ பார்க்கிறார்கள், கேம்ஸ் ஆடுகிறார்கள், பாட்டு கேட்கிறார்கள். இது எதற்கும் உழைப்பு தேவையில்லை. வாசிப்பதற்கு உழைப்பு வேண்டும். பத்திரிகைகள் வாங்க காசு செலவழிக்க வேண்டும். இது அனைத்தும் இலவசம். அப்படி இருக்க சாதாரண பொதுமக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?
ஒரு பத்திரிகையை நடத்துவதற்கு தேவையான ஆபரேஷனல் காஸ்ட்டும் இன்று அதிகமாகிவிட்டது. பேப்பர் விலை ஒருபுறம், நிருபர்களுக்கான சம்பளம், அச்சிடுவதற்கும் அதை கடைகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கான பிற செலவுகள், அலுவலக வாடகை, கரண்ட்பில், வரிகள் என செலவுகள் விண்ணைத்தாண்டி போய்விட்டன. அதையெல்லாம் சமாளித்து அச்சு இதழை நடத்துவதை விட அந்தக் காசில் இரண்டு யூடியூப் சேனல் நடத்தி அதில் யாராவது கிசுகிசு பயில்வான்களை சுச்சிக்களை சவுக்குகளை வாய்க்கு வந்ததை பேசவிட்டு பேட்டியென்று எடுத்துப்போட்டால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் வரும். என்றால்… முதலாளிகள் எதை தேர்ந்தெடுப்பார்கள். ஆகவேதான் ஊடகங்கள் எல்லாம் யூடியூப் சேனல்களாக பரிணமித்துவிட்டனர்.
இன்று அச்சிதழ் ஒன்றை சுய ஆர்வத்துக்காக பெருமைக்காக மட்டும்தான் நடத்த முடியும். அது ஒரு லாபம் தருகிற தொழிலாக இருக்காது. லாபம் தராத எதுவும் சந்தையில் நீடிக்காது. 1780 தொடங்கி உலகை தன் பிடியில் வைத்திருந்த அச்சு இதழ்களின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது. இது அச்சிதழ்களின் இறுதிக்காலம்.