பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் மகன் அமைச்சர் அருமை பிரகாசம் ஊழலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். ஆனால், விளையாட்டு செயலி மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் என்கிறார், அருமை பிரகாசம். அதற்கான ஏற்பாடுகளை பண்ணும்போது, குருநாத்தும் அவர் கும்பலும் அவரைக் கடத்துகிறது.
இதற்கிடையே குருநாத்தைப் பிடிக்க அலைகிறார் போலீஸ் அதிகாரி பிரம்மா இவர்களுக்குள் நடக்கும் களேபரங்கள்தான் கதை. முதல் பாக கதையையே கொஞ்சம் மாற்றி படமாக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.
குருநாத்தாக சிவா தனது வழக்கமான பாணி நகைச்சுவை மூலம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். பல காட்சிகளில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவர் வரும் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. மது இல்லாவிட்டால் பாம்பு கண்ணுக்கு தெரிவது, கற்பனை காட்சியில் காதலியிடம் பேசுவது போன்ற காட்சிகள் இருப்பதால் கொஞ்சம் ரசிக்க முடிகிறது.
ஹரிஷாதன் காதலியாக வந்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார். கருணாகரன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வருவதால் கதையின் போக்கு புரிந்து நடந்து கொள்கிறார். ரசிக்க முடிகிறது. சந்திரசேகர் அரசியல் கட்சி தலைவராக வந்து கோமாவில் விழுந்து மனதில் நிற்கிறார். ராதாரவி அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தி படத்தையும் நகர்த்துகிறார். சிவாவுடன் வரும் கல்கி ராஜா, ‘நக்கலைட்ஸ்’ கவி, போலீஸ் அதிகாரி யோக் ஜேபி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.